

பாஜக பணம் தருகிற கட்சியா? அது ஒரு தேங்காய்மூடி கட்சி என்று 'கல்தா' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ராதாரவி பேசியுள்ளார்.
ஹரி உத்ரா இயக்கத்தில் ஆண்டனி சகாயராஜ், சிவா நிஷாந்த், ஐரா ஜெயின், திவ்யா ஏழுமலை உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கல்தா'. பக்கத்து மாநிலங்களிலிருந்து வந்து குப்பை கொட்டுவதால் ஏற்படும் தீமைகளை வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
இதில் இயக்குநர் கே.பாக்யராஜ், ராதாரவி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டார்கள்.
இந்த விழாவில் ராதாரவி பேசியதாவது:
''இந்தப் படத்தின் ஹீரோ ரொம்ப உயரமா அழகாக இருக்கிறார். இன்னொருத்தரும் இவரை மாதிரியே இருந்தார். அவரைப் பற்றி உங்களுக்குத் தெரியும். தமிழ்நாட்டில் நிறைய பேர் உயரமாக இருப்பார்கள். ஆனால், அவர்களுக்கு அறிவு கிடையாது. இந்தப் படத்தின் ஹீரோவுக்கு உயரம் இருக்கிறது. அதே போல் அறிவும் இருக்க வேண்டும். நீ ஏதாவது தொகுதியில் போய் நின்றுவிடாதே. உன் தொழில் என்ன நடிக்கிறது. தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான். தெரியாத தொழிலைத் தொட்டவனும் கெட்டான். ஒருத்தன் கெட்டான், நீ பார்த்துக்கோ. அவன் கெட்டது மட்டுமில்லாமல், 2 இடத்தையும் முடித்துவிட்டுப் போய்விட்டான்.
நானும் 5 படங்கள் தயாரித்துள்ளேன். இப்போது எல்லாம் படம் தயாரிக்கப் பயமாக இருக்கிறது. படம் தயாரிக்கும் போது கடனாகிவிட்டது. அப்போது எல்லாம் கடன் கொடுத்தவர்கள் வீட்டிலேயே இருப்பார்கள். அதனால், எனக்கு செக்யூரிட்டி பிரச்சினையில்லை. அதேபோல் எனக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அவர்கள் கடவுளை வேண்டுவார்கள். ஏனென்றால் கொடுத்த கடன் வரவேண்டும் அல்லவா.
இந்தப் படத்தில், 'அரசியல்வாதிகளா.. எல்லாரையுமாடா சாவடிப்பீர்கள்' என்று ஒரு வசனம் இருக்கிறது. மக்கள் தான் அனைவரையும் சாவடிக்கிறார்களே.. தவிர அரசியல்வாதிகள் அல்ல. மக்களுக்கு எந்த இடத்தில் தட்டிக் கேட்க வேண்டும், எதைக் கேட்கக் கூடாது எனத் தெரியவில்லை. திரையரங்கு உரிமையாளர்களுக்கு ஒரு வேண்டுகோள். செல்போனை எல்லாம் வெளியே வைத்துவிட்டு உள்ளே வர வேண்டும் என சட்டம் போட்டால் நன்றாக இருக்கும். அப்படிச் செய்தால் ஒரு படம் 3 காட்சிகள் வரை நன்றாகப் போகும்.
பக்கத்து மாநிலத்திலிருந்து வந்து தமிழ்நாட்டில் குப்பை கொட்டுகிறார்கள். அதை வைத்து ஒரு கதை பண்ணியிருக்கும் இயக்குநருக்குப் பாராட்டுக்கள். எதற்கு எல்லாமோ போராடி 3, 4 கோடி கையெழுத்து எல்லாம் வாங்குகிறோம். குப்பை கொட்டக் கூடாது என்று கையெழுத்து வாங்க வேண்டியதுதானே. அரசியல்வாதிகளை நாம் தான் வளர்க்கிறோம். யார் இந்த தெருவைச் சுத்தமாக வைக்கிறார்களோ, அவர்களுக்குத்தான் ஓட்டு என்று சொல்லிப் பாருங்கள். அனைத்துத் தெருக்களும் சுத்தமாக இருக்கும்.
குப்பை கொட்டுவதைச் சொல்வதால் அதிமுக அரசைத் திட்டுகிறார் என நினைக்க வேண்டாம். கடந்த 50 ஆண்டுகளாகவே குப்பை கொட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதே போல், கட்சி மாறிவிட்டார் ராதாரவி. பணம் வாங்கிவிட்டார் என்கிறார்கள். அதுவும் பாஜகவினர் பணம் தருவார்கள் என்று சொல்லலாமா? பாஜக பணம் தருகிற கட்சியா? பாஜக ஒரு தேங்காய்மூடி கட்சி. அவர்களுடைய எண்ணம் இந்தியாவைக் காப்பாற்ற வேண்டும் என்பதே. பாஜகவில் சிரமப்படுபவர்களும் இருக்கிறார்கள். சிலர் பணக்காரர்களாகவும் இருக்கிறார்கள்''.
இவ்வாறு ராதாரவி பேசினார்.
தவறவிடாதீர்!