

காதலர் தினத்தை முன்னிட்டு, பிப்ரவரி 14-ம் தேதி ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ சிறப்புக் காட்சியாகத் திரையிடப்படுகிறது.
கெளதம் மேனன் இயக்கத்தில் 2010-ம் ஆண்டு வெளியான படம் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’. சிம்பு ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில், ஹீரோயினாக த்ரிஷா நடித்தார். நாக சைதன்யா, சமந்தா இருவரும் சிறப்புத் தோற்றத்தில் நடித்தனர்.
தெலுங்கிலும் இந்தப் படம் எடுக்கப்பட்டது. அதில், நாக சைதன்யா, சமந்தா இருவரும் பிரதான பாத்திரங்களில் நடிக்க, சிம்பு - த்ரிஷா இருவரும் சிறப்புத் தோற்றத்தில் நடித்தனர். மேலும், தெலுங்கில் க்ளைமாக்ஸும் மாற்றி எடுக்கப்பட்டது.
படம் ரிலீஸாகி 10 வருடங்களுக்கும் மேல் ஆனாலும், இன்னும் இந்தப் படம் கொண்டாடப்பட்டு வருகிறது. சிம்பு, த்ரிஷா இருவரின் சினிமா வாழ்க்கையிலும், இந்தப் படம் மிக முக்கியமானதாக அமைந்துள்ளது. அத்துடன், நாக சைதன்யா - சமந்தா இருவரும் இந்தப் படத்தில்தான் முதன்முதலில் இணைந்து நடித்தனர். அந்தச் சமயத்தில்தான் இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், நாளை (பிப்ரவரி 14) காதலர் தினத்தை முன்னிட்டு, சென்னையிலுள்ள சில திரையரங்குகளில் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ சிறப்புக் காட்சியாகத் திரையிடப்படுகிறது. தி.நகரிலுள்ள் ஏஜிஎஸ் திரையரங்கில் ஒரு காட்சியும், வேளச்சேரியிலுள்ள லூக்ஸ் திரையரங்கில் ஒரு காட்சியும், கிழக்கு கடற்கரைச் சாலையிலுள்ள மாயாஜால் திரையரங்கில் இரண்டு காட்சிகளும் திரையிடப்படுகின்றன.
இதற்கான முன்பதிவு ஏற்கெனவே தொடங்கி, ஏறக்குறைய அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டதாகத் தெரிகிறது.
கடந்த வருட காதலர் தினத்தன்று ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ மற்றும் ‘ப்ரேமம்’ ஆகிய படங்கள் சிறப்புக் காட்சியாகத் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதை ‘மிஸ்’ பண்ணிடாதீங்க...