

மாணவர்களுக்கு அரசியல் தெரியாது என ரஜினி நினைப்பது வேதனை அளிக்கிறது என்று அமீர் தெரிவித்துள்ளார்.
சிஏஏ தொடர்பாக எந்தவொரு கருத்தையும் தெரிவிக்காமல் இருந்தார் ரஜினி. சமீபத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோது, சிஏஏ தேவை என்று தனது ஆதரவைத் தெரிவித்தார். மேலும், மாணவர்களை அரசியல்வாதிகள் உபயோகிக்கப் பார்க்கிறார்கள் என்றும், யோசித்துப் போராட்டத்தில் இறங்க வேண்டும் எனவும் தனது பேட்டியில் குறிப்பிட்டார் ரஜினி.
ரஜினியின் இந்தப் பேச்சுக்கு தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார் இயக்குநர் அமீர். இது தொடர்பாக சென்னையில் பத்திரிகையாளர்கள் மத்தியில் அமீர் பேசியதாவது:
"சிஏஏவுக்கு 50 நாட்கள் கழித்து ரஜினி ஆதரவு தெரிவித்திருக்கிறார். அவரை முன்னிலைப்படுத்தி மத்திய அரசு காய் நகர்த்துவதாகத் தான் நினைக்கிறேன்.
தமிழகத்தில் சின்ன சின்ன ஊர்களில் கூட போராட்டம் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கிறது. அந்தப் போராட்டத்தை வலுவிழக்கச் செய்யும் வகையில் ரஜினி பேசியிருப்பது வருத்தம் அளிக்கிறது. 40 ஆண்டுகாலமாகத் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர், மாணவர்களைப் பற்றி என்ன புரிதல் வைத்திருக்கிறார் என்று தெரியவில்லை. மாணவர்கள் சுயமாகச் சிந்தித்துச் செயல்படக் கூடியவர்கள் என்பதை ரஜினி உணர வேண்டும்.
அசாமில் மாணவர்கள் ஒரு கட்சி ஆரம்பித்து, ஆட்சியைப் பிடித்த வரலாறு இந்தியாவில் நடந்துள்ளது. இன்றைக்கு இருக்கும் எம்.எல்.ஏ, எம்.பி. உள்ளிட்ட அனைவருமே மாணவர்களாக இருக்கும்போது போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள்தான். மாணவர்கள்தான் நாளை நாட்டை வழிநடத்தக் கூடியவர்கள். அவர்களுக்கு அரசியல் தெரியாது என்று நினைப்பது வேதனை அளிக்கிறது. பாஜகவுக்கு ஆதரவான கருத்தைக் கூட, அவர் அப்படித்தான் பேசுவார் என எடுத்துக் கொள்ளலாம். ஆனால், மாணவர்களைப் பற்றி தவறாகப் பேசக்கூடாது.
டெல்லியில் ஜே.என்.யூவில் நடந்த தாக்குதலுக்குக் கூட கண்டனம் தெரிவிக்காமல், மீண்டும் மீண்டும் மாணவர்களையே குறை சொல்வது தவறு. போன தலைமுறையை விட இந்தத் தலைமுறை மாணவர்கள் ரொம்பவே புரிதலுடன் இருக்கிறார்கள். இதற்கு மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டம் ஒரு உதாரணம். நாளைக்கே கட்சி ஆரம்பித்து எதிர்க்கட்சியாக இருக்கும்போது, மாணவர்கள் போராட்டம் நடத்தும்போது உங்களுடைய தூண்டுதல் என்று சொல்ல முடியுமா? மாணவர்கள் குறித்து ரஜினி கூறிய கருத்து மிகவும் தவறானது”.
இவ்வாறு இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.
மேலும், காவிரி டெல்டாவை வேளாண் மண்டலமாக அறிவித்திருப்பது குறித்து அமீர், "காவிரி டெல்டாவை வேளாண் மண்டலமாக அறிவித்திருப்பதோடு நின்றுவிடக்கூடாது. அது செயலாக வேண்டும். மத்திய அரசு எங்கு வேண்டுமானாலும் ஹைட்ரோகார்பனை எடுத்துக் கொள்ளலாம், மாநில அரசிடம் கேட்க வேண்டியதில்லை என்று சொல்கிறது மத்திய அரசு. அதை மீறி எப்படிப் பாதுகாக்கப் போகிறோம் என்பது மிக முக்கியமான கேள்வி. இந்த அறிவிப்புக்குத் தமிழக அரசுக்கு நன்றி. அதில் உறுதியாக நின்று சாதித்துக் காட்டும்போதுதான் உண்மையான வெற்றி கிடைக்கும்" என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் அமீர்.
'லிங்கா' படத்தின் இசை வெளியீட்டு விழாவில், இந்தத் தலைப்பு உரிமையைக் கொடுத்ததிற்காக அமீருக்கு நன்றி சொன்னார் ரஜினி. அந்த விழாவில் ரஜினியைப் பாராட்டிப் புகழ்ந்தார் அமீர். இப்போது அவருடைய அரசியல் கருத்துகளுக்கு அமீர் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தவறவிடாதீர்!