

'மாஸ்டர்' படத்தின் படப்பிடிப்பில் ரசிகர்களுக்கு இடையே, விஜய் எடுத்த செல்ஃபி அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
விஜய் நடித்து வரும் 'மாஸ்டர்' படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடைபெற்று வருகிறது. இதில் விஜய் - ஆண்ட்ரியா - விஜய் சேதுபதி ஆகிய மூவரும் சம்பந்தப்பட்ட ஒரு முக்கியமான சண்டைக் காட்சியைப் படமாக்கி வருகிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
வருமான வரித்துறை சோதனை மற்றும் பாஜக ஆர்ப்பாட்டம் என சர்ச்சைகளுக்குப் பிறகு விஜய் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளதால், அவரைக் காணத் தினமும் பெரும் திரளான ரசிகர்கள் கூடி வருகிறார்கள். நெய்வேலி சுரங்கத்தில் படப்பிடிப்பை முடித்துவிட்டு விஜய் வெளியே வரும்போது அவர்களைப் பார்த்துக் கையசைத்து விட்டுச் சென்றார்.
ஆனால், நேற்று (பிப்ரவரி 9) ரசிகர்கள் கூட்டம் அதிகமானதால் விஜய் அங்குள்ள வேன் ஒன்றின் மீது ஏறினார். அப்போது பெரும் திரளான கூட்டத்தைப் பார்த்தவுடன் தனது மொபைலில் செல்ஃபி ஒன்றை எடுத்தார். இதைப் பலரும் வீடியோவாக எடுத்தார்கள். இந்த வீடியோக்கள்தான் இன்றைய சமூக வலைதள ட்ரெண்டிங் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது விஜய் அலுவலகத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், அவர் எடுத்த செல்ஃபி புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். நாளையுடன் (பிப்ரவரி 11) நெய்வேலி படப்பிடிப்பு நிறைவடைய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்தகட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடைபெறவுள்ளது. இதற்காக பிரம்மாண்ட அரங்குகள் போடப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தவறவிடாதீர்