நெய்வேலி படப்பிடிப்பு நிறைவு: ரசிகர்களுக்கு நன்றி சொன்ன விஜய்

நெய்வேலி படப்பிடிப்பு நிறைவு: ரசிகர்களுக்கு நன்றி சொன்ன விஜய்
Updated on
1 min read

'மாஸ்டர்' படத்தின் நெய்வேலி படப்பிடிப்பு நிறைவடைந்ததை முன்னிட்டு, ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார் விஜய்.

நெய்வேலி சுரங்கத்தில் விஜய் சம்பந்தப்பட்ட ஒரு சண்டைக் காட்சியைப் படமாக்கி வந்தது 'மாஸ்டர்' படக்குழு. இதில் விஜய் - ஆண்ட்ரியா - விஜய் சேதுபதி மூவரும் சம்பந்தப்பட்ட ஒரு முக்கியமான சண்டைக் காட்சியைப் படமாக்கி வந்தார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

இந்தப் படப்பிடிப்பில் பாஜக ஆர்ப்பாட்டம் நடத்தியதைத் தொடர்ந்து, அங்கு தினமும் விஜய் ரசிகர்கள் கூடத் தொடங்கினார்கள். அப்போது விஜய் வெளியே வந்து, ரசிகர்களைப் பார்த்துக் கையசைத்துவிட்டுப் போகும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாயின.

இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் கூட்டம் அதிகரித்தது. இதனால் தினமும் படப்பிடிப்பு முடிந்து, ஹோட்டல் அறைக்குச் செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டு வந்தார் விஜய். தற்போது, நெய்வேலியில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்துமே படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து நேற்று (பிப்ரவரி 9) ரசிகர்களுக்கு இடையே எடுத்த செல்ஃபியை தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டார் விஜய். அதில் 'நன்றி நெய்வேலி' என்று பதிவிட்டுள்ளார். இன்றும் ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், படப்பிடிப்பு தளத்தில் நின்று கொண்டிருந்த பேருந்தின் மீது ஏறினார் விஜய்.

இன்று நெய்வேலி படப்பிடிப்பில் விஜய் பங்கேற்பது கடைசி நாள் என்பதால், நீண்ட நேரம் ரசிகர்களைப் பார்த்துக் கையசைத்துக் கொண்டே இருந்தார். அப்போது ரசிகர்களை வணங்கி, நன்றியும் தெரிவித்தார். இதைப் பார்த்த ரசிகர்கள் மிகவும் நெகிழ்ச்சியடைந்தனர். விஜய் வெளியே வந்த நேரத்தில் வெளிச்சம் குறைந்துவிட்டதால், ரசிகர்கள் அனைவருமே கையில் மொபைல் வெளிச்சத்துடன் இருந்தனர்.

கையில் மொபைல் வெளிச்சத்துக்கு இடையே, விஜய் நன்றி தெரிவிக்கும் வீடியோக்கள்தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. ட்விட்டர் வீடியோவில் இந்த வீடியோ ட்ரெண்டாகி வரும் சமயத்தில், புகைப்படப் பிரிவில் விஜய் எடுத்த செல்ஃபியும் ட்ரெண்டாகி வருகிறது.

தவறவிடாதீர்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in