'வலிமை' அப்டேட்: ஜீ ஸ்டுடியோஸ் வெளியேற்றம்?
'வலிமை' படத்திலிருந்து ஜீ ஸ்டுடியோஸ் வெளியேறிவிட்டதாக வெளியான செய்திக்குப் படக்குழுவினர் மறுப்பு தெரிவித்தனர்.
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் 'வலிமை'. 'நேர்கொண்ட பார்வை' படத்தைப் போலவே இந்தப் படத்தையும் ஜீ ஸ்டுடியோஸ் வழங்க, போனி கபூர் தயாரித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத் மற்றும் சென்னையில் நடைபெற்றது.
விரைவில் அடுத்தகட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கப்படவுள்ளது. இதற்காக அரங்குகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனிடையே, தயாரிப்புக்காக இங்குள்ள பைனான்சியர்களிடம் போனி கபூர் பணம் கேட்டு வருவதாகத் தகவல் வெளியானது.
இந்தத் தகவலை முன்வைத்து ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம், 'வலிமை' படத்தின் தயாரிப்பிலிருந்து வெளியேறிவிட்டதாகச் செய்திகள் வெளியாயின. இது தொடர்பாக விசாரித்தபோது, "அப்படி எதுவுமே இல்லை. ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனமும் தயாரிப்பில் இருக்கிறது" என்று தெரிவித்தார்கள்.
ஹியூமா குரோஷி நாயகியாக நடித்து வரும் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக நீரவ் ஷாவும், இசையமைப்பாளராக யுவனும் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த ஆண்டு தீபாவளி வெளியீடாக ‘வலிமை’ திரைக்கு வரவுள்ளது.
தவறவிடாதீர்
