'உப்பெனா' அப்டேட்: விஜய் சேதுபதி லுக் வெளியீடு
'உப்பெனா' படத்தில் விஜய் சேதுபதியின் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.
சீரஞ்சிவி நடித்த 'சைரா: நரசிம்மா ரெட்டி' படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார் விஜய் சேதுபதி. அதற்குப் பிறகு அவருக்கு தெலுங்கில் பல்வேறு வாய்ப்புகள் வந்தன. ஆனால் தமிழில் பல படங்களில் கவனம் செலுத்தி வருவதால், சிறப்பான கதை வந்தால் நடிக்கலாம் என்ற முடிவில் ருந்தார்.
அப்போது புச்சிபாபு சனா என்பவர் இயக்கத்தில் உருவான 'உப்பெனா' படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானார் விஜய் சேதுபதி. தனது காட்சிகள் அனைத்தையும் ஒரே கட்டமாக முடித்தும் கொடுத்துவிட்டார்.
இதில் நடிகர் சாய் தரம் தேஜின் சகோதரர் வைஷ்ணவ் தேஜ் நாயகனாக நடித்துள்ளார். நாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். இவருக்கு அப்பாவாகவும், கதைப்படி வில்லனாகவும் நடித்துள்ளார் விஜய் சேதுபதி எனத் தகவல் வெளியாகியுள்ளது. சாய் தரம் தேஜ் நடிகர் சிரஞ்சீவியின் சகோதரி மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் விஜய் சேதுபதியின் லுக் இன்று (பிப்ரவரி 10) வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ராயாணம் என்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளார் 'ரங்கஸ்தலம்' இயக்குநர் சுகுமார். ஏப்ரல் 2-ம் தேதி இந்தப் படம் வெளியாகவுள்ளது.
தவறவிடாதீர்
