

இப்போது நடக்கும் அனைத்து விஷயங்களுமே விஜய்க்கு வளர்ச்சிதான் என்று இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.
சமீபமாக விஜய் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. அதை முடித்துவிட்டு 'மாஸ்டர்' படப்பிடிப்பில் கலந்து கொண்டார் விஜய். அப்போது அங்கு பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதற்கு எதிராக விஜய் ரசிகர்கள் ஒன்று கூடியதால் சலசலப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து லேசான தடியடி நடத்தி காவல்துறையினர் விஜய் ரசிகர்களைக் கலைத்தனர்.
பாஜகவினர் நடத்திய போராட்டத்துக்குத் திரையுலகினரும், அரசியல் கட்சியினரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக அமீரிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அமீர் பதில் அளித்துப் பேசியதாவது:
"வருமான வரித்துறை சோதனையை விமர்சனம் செய்ய முடியாது. படப்பிடிப்புத் தளத்திலிருந்து ஏன் அழைத்து வந்தீர்கள் என்ற கேள்வி நியாயமற்றது. ஆனால், ஆதாரங்கள் அடிப்படையில் தான் விசாரிக்கப்பட்டாரா என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது. இந்தச் சோதனை அச்சுறுத்தலாகவோ, காழ்ப்புணர்ச்சியாகவோ இருக்கக் கூடாது. வருமான வரித்துறையின் முந்தைய சோதனைகள் அனைத்துமே அச்சுறுத்தும் விதமாகவே இருந்துள்ளது.
'மாஸ்டர்' படப்பிடிப்புத் தளத்தில் போராட்டம் செய்தது எல்லாம் கொச்சையானது. கொடி பிடித்துப் போய் போராட்டம் பண்ண வேண்டும் என நினைத்தால், அனைவரும் அனைத்து இடங்களிலும் போராட்டம் பண்ணலாம். இந்த விஷயத்தில் விஜய் ரொம்பவே முதிர்ச்சியுடன் நடந்து கொண்டதாகப் பார்க்கிறேன். அவர் நினைத்திருந்தால் ரசிகர்களைக் கொண்டு வந்து பாதுகாப்புக்கு நிறுத்தியிருக்க முடியும்.
திரைப்பட நடிகர் அரசியல் பேசக் கூடாது என்ற விஷயம் இங்கு உள்ளதா? அப்படி ஒன்றுமில்லையே. மத்திய அரசாங்கம் தமிழகத்தில் காலூன்ற எப்படி வரலாம் என்று பல வழிகளில் முயல்கிறார்கள். அந்த வழிதான் அவர்கள் ரஜினியை முன்னிலைப்படுத்தி வைத்திருப்பது. அதுக்கு விஜய் ஒரு பின்னடைவாக இருப்பாரோ என்ற அச்சத்தின் காரணமாக இருக்கலாம். அதற்காக விஜய், மேடைகளில் அரசியல் பேசக்கூடாது என்று யாரும் சொல்ல முடியாது.
இப்போது நடக்கும் விஷயங்கள் அனைத்துமே விஜய்க்கு வளர்ச்சியாகத்தான் இருக்குமே தவிர, பின்னடைவாக இருக்கும் எனத் தோன்றவில்லை. விஜய் அரசியலுக்கு வந்தால் ஒரு தமிழனாக வரவேற்பேன்".
இவ்வாறு அமீர் தெரிவித்துள்ளார்.
தவறவிடாதீர்!