Published : 12 Oct 2019 10:26 AM
Last Updated : 12 Oct 2019 10:26 AM

பெரிய கனவுகள் தொடங்குகின்றன: ஹாலிவுட் தயாரிப்பாளரின் அழைப்புக்கு இயக்குநர் அட்லீ பதில்

பெரிய கனவுகள் தொடங்குகின்றன என்று ஹாலிவுட் தயாரிப்பாளரின் அழைப்புக்கு இயக்குநர் அட்லீ பதில் அளித்துள்ளார்.

'கமாண்டோ', 'ப்ரிடேட்டர்', 'எக்ஸ்மேன்: தி லாஸ் ஸ்டாண்ட்' உள்ளிட்ட பல ஹாலிவுட் படங்களில் நடித்துப் பிரபலமானவர் பில் ட்யூக். இவர் நடிகராக மட்டுமன்றி இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை ஆசிரியராகவும் பணிபுரிந்து வருகிறார்.

சமீபமாக இந்தியத் திரையுலக இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுடன் பணிபுரிய விரும்புவதாக அவருடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து வருகிறார். சில மாதங்களுகு முன்பு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் மகேஷ் பாபு இருவரது ட்விட்டர் கணக்கையும் குறிப்பிட்டு "இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் மகேஷ்பாபு, லாஸ் ஏஞ்சல்ஸ் வரும் போது லஞ்ச் சாப்பிட வாருங்கள். நாம் ஒரு ஹாலிவுட் ஸ்பை மூவி தொடர்பாக விவாதிக்க வேண்டும்" என்று தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்தார் பில் ட்யூக்

தற்போது 'பிகில்' படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் மும்முரமாக பணிபுரிந்து வருகிறார் இயக்குநர் அட்லீ. அவரது ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டு, "ஹாலிவுட்டிலிருந்து வாழ்த்து.., நம் நாடுகள் சேர்ந்து திரைப்படங்களைத் தயாரிக்க முடியாது. இது மிகவும் சிக்கல் நிறைந்தது, கடினமானது என்று ஏன் நீங்கள் நினைக்கிறீர்கள்?" என பில் ட்யூக் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக இயக்குநர் அட்லீ, "கடினம், சிக்கல் என்பது வெறும் பார்வை மட்டுமே. சினிமா மீதான நேயத்திற்காக பலதரப்பட்டவர்கள் ஒன்று சேர்வது அத்தனை சுலபமும் ஆக்கும். மகிழ்ச்சி நிரம்பியதாகவும் இருக்கும். உங்களது இந்த அழைப்பைக் கவுரவமாகக் கருதுகிறோம். இப்படியாகத்தான் பெரிய கனவுகள் தொடங்குகின்றன. உங்களுக்கு என் அன்பும் மரியாதையும்!” என்று தெரிவித்துள்ளார் அட்லீ.

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'பிகில்' படத்தின் ட்ரெய்லர் இன்று (அக்டோபர் 12) மாலை 6 மணியளவில் வெளியாகவுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x