Published : 19 Sep 2019 01:16 PM
Last Updated : 19 Sep 2019 01:16 PM

‘இந்தியன் 2’ அப்டேட்: ராஜமுந்திரியில் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கியது

கமல்ஹாசன் நடித்துவரும் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு, ராஜமுந்திரியில் தொடங்கியுள்ளது.

கமல்ஹாசன் - ஷங்கர் கூட்டணியில் வெளியான ‘இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகம், 23 வருடங்களுக்குப் பிறகு தற்போது உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து காஜல் அகர்வால், ப்ரியா பவானி சங்கர், சித்தார்த், ரகுல் ப்ரீத்சிங், நெடுமுடி வேணு, சமுத்திரக்கனி, விவேக், வித்யுத் ஜம்வால் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

200 கோடி ரூபாய் செலவில் லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறது. ரத்னவேலு ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைக்கிறார். ஸ்ரீகர் பிரசாத் எடிட்டராகப் பணியாற்றும் இந்தப் படம், 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சித்தார்த் - ரகுல் ப்ரீத்சிங் சம்பந்தப்பட்டக் காட்சிகள், இந்தியன் தாத்தா பங்குபெற்ற சண்டைக்காட்சி ஆகியவை சென்னையில் படமாக்கப்பட்டுள்ளன. சண்டைப் பயிற்சி இயக்குநர் பீட்டர் ஹெய்ன் இந்த சண்டைக்காட்சியை வடிவமைத்துள்ளார். சென்னை வளசரவாக்கத்தில் இந்த சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது.

சென்னையில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற படப்பிடிப்பைத் தொடர்ந்து, தற்போது ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் அடுத்தகட்டப் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இரண்டு வாரங்களுக்கு அங்கு படப்பிடிப்பு நடைபெறும் எனத் தெரிகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ‘பிக் பாஸ் 3’ நிகழ்ச்சியைக் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவதால், வார இறுதிகளில் அவர் மட்டும் சென்னை வந்து செல்வார். அதற்குத் தகுந்தபடி மற்றவர்கள் சம்பந்தப்பட்டக் காட்சிகளை வார இறுதிகளில் படமாக்கும் வகையில் திட்டமிட்டுள்ளார் ஷங்கர்.

விரைவில் ‘பிக் பாஸ் 3’ நிகழ்ச்சி முடிவடைய இருப்பதால், அதன்பிறகு வெளிநாடுகளில் படம்பிடிக்கத் திட்டமிட்டுள்ளது படக்குழு.

என் வாழ்க்கையை மாற்றிய படம்: பிரியதர்ஷினி ராஜ்குமார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x