Published : 29 Aug 2017 09:48 AM
Last Updated : 29 Aug 2017 09:48 AM

‘விவேகம்’ படத்துக்கு அதிக கட்டணம்: தமிழக அரசு பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு - 28 திரையரங்குகளுக்கும் நோட்டீஸ்

நடிகர் அஜித் நடித்த ‘விவேகம்’ படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலித்த திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசும், 28 திரையரங்குகளும் பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திரையரங்குகளில் எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதை நிர்ணயம் செய்து தமிழக அரசு ஏற்கெனவே அரசாணை பிறப்பித்துள்ளது. அதன்படி, மாநகராட்சிகளில் அதிகபட்சமாக ரூ.50, நகராட்சிகளில் ரூ.40,பேரூராட்சிகளில் ரூ.25, கிராமங்களில் ரூ.15 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்பட வேண்டும். பல திரைகள் கொண்ட மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் அதிகபட்சம் ரூ.120 கட்டணம் வசூலிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், இந்த அரசாணை முறையாக அமல்படுத்தப்படுவது இல்லை. முன்னணி நடிகர்களின் படங்கள் திரையிடப்படும்போது, முதல் 5 நாட்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகக் கூறி சென்னையை சேர்ந்த தேவராஜன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘விவேகம்’ திரைப்படத்துக்கு, விதிகளை மீறி எல்லா திரையரங்குகளிலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட திரையரங்குகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை, நீதிபதி எம்.துரைசாமி முன்பு நேற்று நடந்தது. அப்போது, ‘‘தமிழகம் முழுவதும் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க சிறப்புக்குழு அமைக்குமாறு தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. ஆனால், ‘விவேகம்’ திரைப்படத்துக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதலாக ரூ.200 முதல் ரூ.500 வரை வசூலிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதிக கட்டணம் வசூலித்த திரையரங்குகளுக்கு ஒரு நாளுக்கு ரூ.1 லட்சம் வீதம் அபராதம் விதிக்க வேண்டும்’’ என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதுதொடர்பாக தமிழக அரசு செப்டம்பர் 11-ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். சம்பந்தப்பட்ட 28 திரையரங்குகளும் பதில் அளிக்க நோட்டீஸ் பிறப்பித்து, விசாரணையை தள்ளிவைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x