Published : 02 Aug 2017 08:57 AM
Last Updated : 02 Aug 2017 08:57 AM

வலை திருட்டில் இருந்து சினிமாவை காப்பாற்ற யூ-டியூபுக்கு தயாரிப்பாளர் தாணு கோரிக்கை

திரைப்படத் துறையை வலைவழித் திருட்டில் (Online Piracy) இருந்து காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று யூ-டியூப் நிறுவனத்துக்கு திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு கோரிக்கை விடுத்துள்ளார்.

யூ-டியூப் வலைதளத்தில் அதிக பார்வையாளர்களைக் கொண்டுள்ள தமிழ் யூ-டியூப் சேனல்களுக்கான பாராட்டு விழா சென்னையில் நேற்று நடை பெற்றது. இந்த நிகழ்ச்சியில் அந்நிறுவனத்தின் ஆசிய-பசிபிக் பகுதி வட்டார இயக்குநர் (பார்ட்னர்ஷிப்) அஜய் வித்யா சாகர் கலந்து கொண்டு பேசியதாவது:

இந்தியாவில் யூ-டியூப் வீடியோக்களைப் பார்ப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது மொபைல் கருவிகள் மூலம் அதிகம் பேர் வீடியோக்களை பார்க்கின்றனர். இந்த நிலையில், யூ-டியூப் வலைதளத்தில் தமிழ் யூ-டியூப் சேனல்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

இந்தியாவில் பிற மொழி சேனல்களைக் காட்டிலும் தமிழ் சேனல்களுக்கு பெரும் வரவேற்பு உள்ளது. நினைத்த நேரத்தில் நினைத்த நிகழ்ச்சிகளை பார்க்கும் வசதி இருப்பதால் நாளுக்கு நாள் யூ-டியூப்பின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பல்வேறு யு - டியூப் சேனல் களின் நிர்வாகிகள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண் டனர். அப்போது கலைப்புலி எஸ். தாணு பேசும்போது, “திரைப்பட விளம்பரங்கள் யூ-டியூப் மூலம் அதிக வரவேற்பை பெறுகின்றன. தற்போது திரைத்துறைக்கு ஆன்லைன் பைரசி மிகவும் ஆபத்தாக உள்ளது. இதனை கட்டுப்படுத்த வேண்டும். திரைப்படத் துறையை வலைவழித் திருட்டில் இருந்து காப்பாற்ற வேண்டும். இதற்காக தொழில்நுட்ப குழுவை அமைத்து யூ-டியூப் நிறுவனம் வசதிகளை உருவாக்க வேண்டும். இது குறித்து திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகளுடனும், யூ-டியூப் நிறுவனத்துடனும் விரைவில் பேசுவோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x