Published : 03 Jun 2016 12:07 PM
Last Updated : 03 Jun 2016 12:07 PM

இயக்குநர் - உறுதுணை நடிகர் பாலுஆனந்த் காலமானார்

'நானே ராஜா நானே மந்திரி', 'அண்ணா நகர் முதல் தெரு' ஆகிய படங்களின் இயக்குநரும், உறுதுணை நடிகருமான பாலு ஆனந்த் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 61

இவருக்கு நேற்றிரவு (ஜூன் 2) 2-வது முறையாக மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக குடும்பத்தினர் மருத்துவனைக்கு அழைத்துச் செல்வதற்குள் உயிர் பிரிந்தது. இவருடைய இறுதிச்சடங்கு இன்று மாலை நடைபெற இருக்கிறது.

இவருடைய மனைவி உமா மகேஸ்வரி. இவருக்கு ஸ்ரீவேலுமணி என்ற மகளும், ஸ்ரீசரவணன் என்ற மகனும் இருக்கிறார்கள். இவருடைய மறைவுக்கு திரையுலகில் உள்ள பலரும் தங்களுடைய இரங்கலைத் தெரிவித்திருக்கிறார்கள்.

'நானே ராஜா நானே மந்திரி', 'அண்ணா நகர் முதல் தெரு', 'ரசிகன் ஒரு ரசிகை', 'உனக்காக பிறந்தேன்' உள்ளிட்ட 20 படங்களுக்கு மேல் இயக்கியவர் இயக்குநர் பாலு ஆனந்த். இவர் இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜனிடம் 'பயணங்கள் முடிவதில்லை' படத்தில் இருந்து சுமார் 20 படங்களுக்கு மேல் உதவி இயக்குநராக பணியாற்றி இருக்கிறார்.

மன்சூர் அலிகான் நடித்த 'சிந்துபாத்', 'அதிரடி' ஆகிய படங்களை இயக்கியவர் பாலு ஆனந்த். மேலும், பவர் ஸ்டார் நாயகனாக நடித்து தயாரித்த 'ஆனந்த தொல்லை' படத்தையும் இயக்கி இருந்தார்.

இயக்குநர் மட்டுமன்றி 50க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களிலும், காமெடியனாகவும் நடித்திருக்கிறார். கோயம்புத்தூர் அருகே உள்ள சொந்த ஊரில் வசித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x