Published : 24 Sep 2013 05:16 PM
Last Updated : 24 Sep 2013 05:16 PM

யா.. யா: விமர்சனம் - கற்பனை வளம் இல்லையா?

இயக்கம்: ஐ. ராஜசேகரன்

நடிப்பு: சிவா, சந்தானம், சந்தியா, தன்ஷிகா

ஒளிப்பதிவு: வெற்றி

இசை: விஜய் எபினேசர்

எடிட்டர்: டி.எஸ். சுரேஷ்

கிரிக்கெட் விளையாட்டை எடுத்துக்கொண்டு, அதனுடன் நட்பையும், காதலையும் குழைத்து 20 -20 ஆட்டம் ஆட நினைத்திருக்கிறார் இயக்குநர். அதில் அவரால் சதம் அடிக்க முடிந்ததா என்பதுதான் கேள்வி.

நாயகன் சிவாவின் அம்மா ராமராஜனின் தீவிர விசிறி என்பதால் தன்னுடைய பிள்ளைக்கு, ராமராஜன் பெயரையே சூட்டுக்கிறார். சிவாவோ அந்தப் பெயரை தோனி என்று மாற்றிக்கொண்டு வெட்டியாக ஊர்சுற்றும் சேட்டைப் பேர்வழி.

அப்படிப்பட்டவர் தனது நண்பர்களை அடித்த சந்தானத்தைச் சந்திக்கிறார். அவரது பெயர் சேவாக். இரண்டுபேரும் மோதிக்கொள்ளப் போகிறார்கள் என்று பார்த்தால் நண்பர்கள் ஆகிவிடுகிறார்கள். காரணம் தோனி - சேவாக் என்ற பெயர்களில் இருக்கும் பொருத்தம். நட்பென்றால் ஒன்றுக்குள் ஒன்று என்று ஆகிவிடுகிறார்கள். இந்த நட்பை உடைக்க வருகிறது காதல்! இருவரும் திடீர் எதிரிகள் ஆவதும் பின்பு இணைவதும் எப்படி என்பதுதான் திரைக்கதை.

காதலிகளால் கைவிடப்பட்ட வர்களுக்கும், நண்பர்களால் ஏமாற்றப்பட்டவர்களுக்காகவும் இந்த படம் என்று இயக்குநர் சமர்ப்பணம் போடும்போதே கதை புரிந்துவிடுகிறது! கதையில் புதுமை இல்லாவிட்டாலும் சொல்ல வந்த கதையை சுவையாகச் சொல்வதுதான் திரைக்கதை என்பதில் சிக்ஸர் அடிக்கத் தவறிவிடும் இயக்குநர், ஒரு காமெடி சேனல் பார்க்கும் உணர்வை அவ்வப்போது ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறார். கடலை போடும் பெண்களின் கைபேசி எண்களுக்கு 'டைம்பாஸ்' என்ற பெயரில் வரிசை எண்கள் கொடுத்து பதிவு செய்திருக்கும் டோனிசிவா, அவனது காதலியிடம் சிக்கிக் கொண்டு சமாளிப்பது ரசனையான காட்சி. “நல்ல பொண்ணுங்களும் ,டைனோசரும் ஒண்ணு, ஏன்னா ரெண்டுமே இப்போ உலகத்துல இல்லை'', “ஃபிகரும் பிரண்டும் கொரியா மொபைல் மாதிரி. ஒரு சிம் ஆன்ல இருந்தா, இன்னொரு சிம் ரீச்ல இருக்காது'', என்பது போன்ற சந்தானத்தின் ஆணாதிக்க வசனங்கள் வழக்கம்போல கைதட்டல் பெறுகின்றன. சந்தானம் தவிர, சந்தானத்தின் இந்த ‘நக்கல் பதிலடி’ காமெடி ரொம்பவும் பழகிவிட்டது. மாற்றிக்கொள்ளாவிட்டால் அவரது ரசிகர்களுக்கே விரைவில் இது அலுப்புத் தட்டிவிடலாம்.

சந்தானத்தை சகித்துக ்கொள்ளும் அதேநேரம், கவுன்சிலர் பெண், பீர்பால் காதாபாத்திரங்களின் மொக்கை நகைச்சுவைக் காட்சிகளை ரசிக்க முடியவில்லை. அவை படத்தில் ஒட்டவும் இல்லை. பெண் காவலராக வரும் தோனியின் அத்தை பெண், கனகாவும், சேவாக்கும் காதலிக்கும் காட்சிகளை ரசிக்கலாம். ஆனால், அறைத் தோழி சீதாவுக்காக, தோனியை விட்டுக்கொடுப்பதாகச் சித்தரிக்கப்பட்ட காட்சிகள் அவ்வளவு வலுவாக இல்லை.

ராமராஜன், கனகா, சீதா, ராஜ்கிரண், தோனி, சேவாக், சச்சின், ஏ.டி.எம். டைம்பாஸ் என்று கதாபாத்திரங்களுக்கு பெயர் வைப்பதில் இருக்கும் கவனம் திரைக்கதையிலும் இருந்திருந்திருந்தால் 'யாயா' சொல்லியிருக்கலாம்.

கிளாஸ்: சொல்வதற்கு ஒன்றுமில்லை.

மாஸ்: வேறு எந்தப் பொழுதுபோக்கும் இல்லை என்றால் ஒருமுறை பார்க்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x