Last Updated : 15 Apr, 2016 01:03 PM

 

Published : 15 Apr 2016 01:03 PM
Last Updated : 15 Apr 2016 01:03 PM

தமிழ் சினிமாவின் தலைகுனிவு வரலாறு திரும்பக் கூடாது: மிஷ்கின் ஆதங்கம்

வீணை எஸ்.பாலசந்தரின் நினைவைப் போற்றும் விழா புதன்கிழமை சென்னை - உட்லேண்ட்ஸ் திரையரங்கில் நடந்தது. புகழ்பெற்ற திரைப்பட இயக்குநராகவும் புகழ்பெற்ற வீணை வித்வானாகவும் அறியப்பட்டவர் வீணை எஸ்.பாலசந்தர். ஒவ்வோர் ஆண்டும் இவரது நினைவைப் போற்றும் விழாவை வீணை எஸ்.பாலசந்தர் அறக்கட்டளை நடத்தும்.

இந்தாண்டு விழாவின்போது, திரைப்படத் துறையில் எஸ்.பாலசந்தர் நிகழ்த்தியிருக்கும் பல புதுமைகளை நினைவுகூரும் விதமாக நிகழ்ச்சியை இயக்குநர் மணிரத்னம் ஒருங்கிணைத்திருந்தார். இயக்குநர்கள் பார்த்திபன், மிஷ்கின் உள்பட பல திரைப்பட பிரமுகர்கள் விழாவுக்கு உறுதுணையாக இருந்தனர்.

அதுமட்டுமின்றி வீணை பாலச்சந்தரின் பல்வேறு பரிமாணங்களையும் ஓர் இயக்குநராக அவரது கலைவெளிப்பாடுகள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் வந்திருந்த பார்வையாளர்கள் ஈர்க்கும்விதமாக மேடையை மிளிரவைத்தார் இயக்குநர் மிஷ்கின்.

அந்தக் கூட்டத்தில் மிஷ்கின் பேசியதாவது:

"என்னுடைய பலநாள் கனவு மணிரத்னத்தின் ஒரு படத்திலாவது அஸிஸ்டண்ட் ஆக பண்ணவேண்டுமென்று. கடைசியில் இந்த நிகழ்ச்சிக்கு அவருக்கு அஸிஸ்ட் செய்தேன். மணி சாருடன் இரண்டு மூன்று நாட்கள் பணியாற்றியது ஒரு முதல்காதல் போலிருந்தது. ஒரு சிறந்த அனுபவம்.

என்னை எல்லோரும் விஷுவலாக படம் செய்வதாகக் குறிப்பிடுகிறார்கள். அப்படியெல்லாம் இல்லை. 'அந்த நாள்' படத்தில் முதல் ஷாட் பார்த்திருப்பீர்கள். ஒரு ஃபேட் இன் ஆகற ஷாட்ல ஒரு ப்ரோட்டாகனிஸ்ட் ஃபேட் அவுட் ஆகிறார். அந்த ஷாட்டை அவர் கன்சீவ் பண்றார். ஒரு டைரக்டருக்கு அது கஷ்டம் முதல் ஷாட்டை கன்சீவ் பண்றது. அந்த ஒரு ஷாட் மொத்த படத்தையும் சொல்லிடுச்சி. அந்த முதல் ஷாட்ல சிவாஜி சார் கேமராவுக்கு அப்பால் போய்விடுவார். டார்க்லருந்து லைட்டுக்கு போய்ட்டு அவர் கீழ விழறார். எனக்கு தெரிந்து எப்பொழுதுமான உலகின் மிகச்சிறந்த ஷாட் அது.

ஆனால் இந்த அவருடைய கடைசி நாலைந்து படங்களையும் பார்த்தேன். நேற்று படப்பிடிப்பை முடித்துவிட்டு வந்து பரீட்சை மாதிரி உட்கார்ந்து அவரைப் பற்றிய வாழ்க்கை வரலாற்று நூலைப் படித்தேன். அதன்பிறகு அவருடைய படங்களையும் நான் பார்த்தேன். ஒரு பெரிய பயணம் செய்த திருப்தி. இட் மே பி மோர் ஹம்பிள்.

சினிமாவைக் கற்றுக்கொள்ள நினைப்பவர்களுக்கு ஒரு படம் போதும். அது 'அந்த நாள்' படம்தான். சினிமாவை கற்றுக்கொள்ள விரும்புகிறவர்கள் மணி சார் படம், என் படம் எல்லாம் பார்க்காதீர்கள். இவை உங்களுக்குத் தவறான வழிகாட்டுதலாக அமையும்.

இப்போ எல்லாம் நிறைய தொழில்நுட்பம் வளர்ந்திருக்கு. பாலச்சந்தர் சாரும் குரோசாவை ரொம்ப ஸ்ட்ராங்கா பார்த்திருக்காரு. அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு வந்து மெய்ப்பன் சார்கிட்ட கதையை சொல்லி அவரை அப்படத்தை எடுக்க சம்மதிக்க வைக்கிறார். இதற்காக மெய்ப்பன் சாரும் ஜப்பான் செல்கிறார். படத்தை பார்த்ததோடு குரோசாவையும் சந்திக்கிறார். அதன்பிறகு படம் எடுக்க முடிவெடுக்கிறார்.

அந்த காலத்தில் வெறும் வசனங்களாலேயே சினிமாக்கள் வந்த காலம் அது. ஒரு படம் என்பது நகரும் ஷாட்களைக் கொண்டது. அடுத்தடுத்த ஷாட்களில் வழியாகவே கதை முன்னால் நகர்ந்துகொண்டே செல்லும். செவ்வகப் பரப்பில் மனிதர்கள் வந்துசெல்வதை ஒரு கடவுள் போல இயக்குநர் ஃப்ரேம் செய்கிறார். இதுதான் சினிமா. ஹிட்ச்க்காகட்டும், குரோசாவாக இருக்கட்டும். ப்ரொசான் ஆக இருக்கட்டும். அவர்கள் இதை மிகப்பெரிய ஈடுபாட்டோடு டிக்டேட் செய்கிறார்கள்.

அந்த நாள் படத்தைப் பார்த்தால் ஆயிரம் ஷாட்களை சொல்லிக்கொண்டே இருக்கலாம். அந்த மனிதரைப் பற்றி யோசித்தால் ஏராளமான அறிவைப் பெற்றவராக இருப்பதை உணரமுடிகிறது. அவர் எதையும் கூர்ந்து கவனிக்கக்கூடியவர். சினிமாவுக்காக வரும் எனது உதவியாளர்களிடம் நான் சொல்வது தயவுசெய்து எல்லாவற்றையும் கவனியுங்கள். மரத்தை உற்றுப் பாருங்கள், சூரியன் அஸ்தமிப்பதைக் கவனியுங்கள், இளையராஜாவை கவனியுங்கள், மணிரத்னத்தின் புன்னகைகளை கவனியுங்கள், பி.சி.ஸ்ரீராமின் பிரமாண்டங்களை கவனியுங்கள்.

நான்கு வயதில் அந்தக் குழந்தை கஞ்சிராவை எப்படிக் கற்றுக்கொண்டது. அதை எப்படி கையில் வைத்துக்கொண்டது. 12 மாதத்திற்குள் எப்படி இசைக்கக் கற்றுக்கொண்டது. அந்த ரிதம் அவருக்குள் போகிறது. அதிலிருந்து அந்தக் குழந்தை கவனிப்பதைத் தொடர்ந்தது.

பாலசந்தர் 4 வயதிலேயே கஞ்சிராவை இசைக்கக் கற்றுக்கொண்டவர். இசைக்குழுவோடு 12 வயதில் கராச்சிக்கு தன் அண்ணனோடு செல்கிறார். இவர் அதில் தபேலா வாசிக்கிறார். நிகழ்ச்சியைக் காணவந்த பெண்மணி வீட்டுக்குச் சென்று தன் மகனுக்காக பரிசாக வந்த சிதாரைக் கொண்டுவந்து அவரிடம் தருகிறார். அதை வாங்கிக்கொண்டு என்ன செய்வது என்று புரியாமல் வீட்டுக்கு கொண்டுவந்து எப்படி இசைப்பதென முயற்சிக்கிறார். அங்கிருந்து பயணம் தொடங்குகிறது. வந்து படங்களில் நடிக்கிறார். அந்த புத்தகத்தில் இப்படி கூறப்பட்டுள்ளது, ''அவர் மீண்டும் கவனிக்கத் தொடங்குகிறார் ஈடுபாட்டோடு, சுறுசுறுப்போடு. ஜெமினி ஸ்டூடியோவில் படம் எடுப்பதை கவனிக்கத் தொடங்குகிறார்....

வெரி சிம்பிள் சார். சினிமாவை யாரும் கற்றுத்தர முடியாது. கவனிப்பதில்தான் இருக்கிறது. அசாதாரணமான மூளை அவருடையது. அவர் பேசிக்கொண்டே இருக்கும்போது நிறைய தாளம் போட்டுக்கொண்டே இருப்பாராம். வாழ்க்கை மிகவும் சலிப்பாக இருக்கிறது, அதனால் எதையாவது கிரியேட் செய்துகொண்டே இருக்கவேண்டும் அவருக்கு. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும். அதுக்கு அப்புறம் அவர் படம் பண்றார். அவருடைய படங்களைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். அடுத்தடுத்து அதிர்ச்சிகளைத் தருவதில் அவருடைய ஷாட்கள் அமைந்திருக்கும். முழுமையான சினிமா என்று சொல்லமுடியாது. ஆனால் அவர் ஒரு முழுமையான திரைப்பட இயக்குநர். ஆனால் அவருடைய எல்லாவகை கிரியேட்டிவ் சிந்தனைகளையும் வெளிப்படுத்த போதிய களம் இல்லை என்பதுதான் உண்மை. ஐயம் சாரி. நான் இப்போது அவரைப் பார்த்தேனென்றால் அவரை கவனிக்க ஆரம்பித்துவிடுவேன். ஷூவையெல்லாம் தொலைத்துவிட்டு அவரைக் கவனிப்பேன். கேலக்ஸி ஆப் ஐடியாஸ் என்றுதான் அவரை சொல்லவேண்டும்.

இந்த வாய்ப்பை எனக்கு மணிரத்னம் சார்தான் வழங்கினார். தயவுசெய்து அவருடைய வாழ்க்கை வரலாறு புத்தகத்தைப் படியுங்கள். அவருடைய முதல் மூன்று அத்தியாயங்களைத்தான் நான் படித்தேன். அதன்பிறகு அது இசைத் தொடர்பாக போய்விடுகிறது. ஒருகட்டத்தில் அவரால் தயாரிப்பாளர்களிடம் தனது சிந்தனைகளை புரியவைக்க முடியவில்லை. கடைசியில் அவர் எஸ்.பி.புரெடெக்ஷ்ன்ஸ் ஆரம்பித்து படங்களை தயாரிக்கிறார். எல்லோரும் சொல்வார்கள் அவர் மிகவும் ஈகோயிஸ்ட் என்று. ஒரு கலைஞன் ஈகோயிஸ்ட்டாக இருந்தால்தான் அவன் கலைஞன். அவருடைய கார்டு பார்த்தேன். எஸ்.பி. என்று பெரியதாக இருந்தது.

அவர் இயக்கிய பொம்மை படத்தில் கடைசியில ஒரு புரொபைல் பார்த்தேன். அங்கேயே நீங்க டைரக்டரைப் பார்க்கலாம். அவர் கேமராவைப் பார்க்கவில்லை. அவர் நம்மை இம்ப்ரஸ் செய்யவிரும்பவில்லை. புரொஃபைலிலிருந்து மெல்ல நம்மை நோக்கித் திரும்புகிறார். அங்கேயே டைரக்டர் உருவாகிட்டார். அந்த ஷாட்டை திரும்பத்திரும்பப் பார்த்துக்கொண்டேயிருந்தேன். படத்தில் பங்காற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள் உள்ளிட்ட எல்லாரையும் நமக்கு அறிமுகப்படுத்துகிறார். உலகத்தில் இந்த அளவுக்கு டெக்னீஷியனுக்கும் நடிகனுக்கும் இந்த அளவுக்கு யாருமே மரியாதை கொடுத்ததில்லை.

அடுத்து இரண்டு மூன்று படங்களைக் கொடுத்தார். அந்தப் படங்கள் ஓடவில்லை. நல்ல படங்கள் ஓடாது. அஞ்சலி ஓடுமா? இருவர் ஓடுமா? ஓடக்கூடாது சார் அதான் நல்ல படம். ஓடாம இருந்தாதான் 50 வருஷத்துக்கு அப்புறம் இங்கே பேசுவோம். ஓடிட்டா சூப்பர் தலைவா சூப்பர் தலைவான்னு விசில் அடிச்சிட்டு போய்க்கிட்டே இருப்பாங்க. ஒரு படம் ஓடக்கூடாது. நல்ல படம்னா ஓடக்கூடாது. அவருடைய கடைசிபடம் மூன்று ஆண்டுகள் கேனை விட்டு வெளியே வரவில்லை. இந்த நிமிஷம் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. அதேநேரத்தில் மிகவும் வருத்தமாகவும் இருக்கிறது. ஒரு பெரிய அரக்கன் பாலச்சந்தர் கேலக்ஸி ஆப் ஐடியாஸ். தலைகுனிந்து நடந்து போகிறான். இதுதான் தமிழ் சினிமா. இந்த வரலாறு திரும்பக் கூடாது. இதை வென்றெடுக்க வேண்டும். மணிரத்னம் சாகிற வரை படம் பண்ண வேண்டும்.

கடற்கரையில் வீணை எஸ்.பாலசந்தருக்குத்தான் சார் சிலை வைக்கவேண்டும். நாங்கள் இங்கிருந்து வெளிநாட்டுக்குப் போனால் பீத்தோவன் சிலை பார்க்கிறோம். மொசார்ட் சிலை பாக்ஸ் சிலை பார்க்கிறோம். நிறைய இயக்குநர்கள் சிலைகளைப் பார்க்கிறோம்.

தமிழ்நாட்டுக்கு ஒரே பெருமை எஸ்.பாலச்சந்தர் சிலையைப் பார்க்க வேண்டும். உயரமாக. அவருடைய புகைப்படங்களை ஞானம் என்பவர்தான் சேகரித்து வைத்துள்ளார். அவருக்கு நாம் நன்றி சொல்லவேண்டும். பாலச்சந்தர் எடுத்த புகைப்படங்களை மட்டும் பாருங்கள். நீங்கள் சினிமாவைக் கற்றுக்கொள்ளலாம். இது அற்புதமான அனுபவம். என் தாயின் கருவறைக்குள் போய்வந்த மாதிரி நான் உணர்ந்தேன்.''

இவ்வாறு மிஷ்கின் பேசினார்.