Published : 14 Jun 2016 02:20 PM
Last Updated : 14 Jun 2016 02:20 PM

சென்சாருக்கு எதிராக உட்தா பஞ்சாப் வெற்றி: சசிகுமார் பெருமிதம்

கடுமையான சர்ச்சைகளுக்கு உள்ளான 'உட்தா பஞ்சாப்' திரைப்படம் தற்போது வெளியாவது குறித்து, நடிகரும் இயக்குநருமான சசிகுமார், தணிக்கை வாரியத்துக்கு எதிரான போராட்டத்தில் அனுராக் காஷ்யப்புக்கு கிடைத்த வெற்றி எங்களுக்கும் உரித்தானது என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து சசிகுமார் வெளியிட்டுள்ளா ட்விட்டர் பதிவில், ''அனுராக் காஷ்யப் அவர்களே, தணிக்கை வாரியத்துக்கு எதிரான உங்களின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி உங்களுடையது மட்டுமல்ல, எங்களுடையதும்தான்'' என்று தெரிவித்துள்ளார்.

'உட்தா பஞ்சாப்' சர்ச்சை பின்னணி

அபிஷேக் சாவ்பே இயக்கியுள்ள 'உட்தா பஞ்சாப்' திரைப்படம் பஞ்சாப் மாநிலத்தின் போதைப்பொருள் இருள் உலகத்தை அப்பட்டமாக வெளிப்படுத்துவதாக எழுந்த தகவல்களைத் தொடர்ந்து சென்சார் சிக்கல்களில் அகப்பட்டுக் கொண்டது.

'உட்தா பஞ்சாப்' திரைப்படத்தை தணிக்கை செய்த தணிக்கைக் குழுவினர், ஆபாசமாகவும், வன்முறையைத் தூண்டுவதாகவும் இருப்பதாகக் கூறி, 89 இடங்களில் கத்தரி போட பரிந்துரைத்தனர். மேலும், படத்தின் தலைப்பில் இருந்து பஞ்சாப் என்ற பெயரையும் நீக்குமாறு உத்தரவிட்டனர். திரைப்படத் தணிக்கை வாரியத்தின் உத்தரவு நாடு முழுவதும் திரையுலகினர் மத்தியில் பெரும் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியது.

அதைத்தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான இயக்குநர் அனுராக் காஷ்யப், சென்சார் அதிகாரிகள் மீது கடுமையான விமர்சனங்களை அடுக்கினார். அவர் பலமுறை தணிக்கைக் குழுவுடன் போராடியுள்ளதாகக் கூறியவர், கருத்து சுதந்திரத்துக்காக மட்டுமே போராடுவதாகக் கூறினார். இந்தப் பிரச்சனைக்கு அரசியல் சாயம் பூசாமல் படத்துக்கும் தணிக்கைத் துறைக்கும் இடையிலான பிரச்சினையாக மட்டுமே இதைப் பார்க்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

'உட்தா பஞ்சாப்' சர்ச்சை குறித்து பல்வேறு முன்னணி இந்தி திரையுலக பிரபலங்கள் தங்களது ஆதரவை படக்குழுவுக்கு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், மறு தணிக்கைக் குழுவின் பரிந்துரையின் பேரில், படத்துக்கு 13 இடங்களில் கத்தரி போடப்பட்டு, படத்துக்கு 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து படத் தயாரிப்பு நிறுவனமான பான்தம் பிலிம்ஸ் சார்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஒரே ஒரு வெட்டு மற்றும் திருத்தி அமைக்கப்பட்ட பொறுப்புத் துறப்பு வாசகங்களுடன் படத்தை வெளியிட படக்குழுவினருக்கு அனுமதி அளித்துள்ளனர். ஷாகித் கபூர் கூட்டத்தினர் மத்தியில் சிறுநீர் கழிக்கும் காட்சியை நீக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பாகிஸ்தான் தொடர்பான வாசகங்களை நீக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், நீதிமன்றம் தனது உத்தரவில், ''தணிக்கை வாரியம் பாட்டி மாதிரி செயல்படக் கூடாது. காலத்துக்கு ஏற்ப மாற வேண்டும். கலையை மிக அதிக உணர்வுப்பூர்வமாக அணுகக் கூடாது. படைப்பாளிகளுக்குத் தடை போடக் கூடாது" என்றும் தணிக்கை வாரியத்துக்கு அறிவுரை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x