Last Updated : 01 Jul, 2016 04:33 PM

 

Published : 01 Jul 2016 04:33 PM
Last Updated : 01 Jul 2016 04:33 PM

படப்பிடிப்பில் பங்கேற்க கெளதம் மேனனுக்கு சிம்பு தரப்பு நிபந்தனை

'அச்சம் என்பது மடமையடா' படத்தின் தயாரிப்பு தரப்பில் இருந்து நிலுவை சம்பளத் தொகையைக் கொடுத்தால் இதர காட்சிகள் படப்பிடிப்பு என சிம்பு தரப்பு விளக்கம் அளித்திருக்கிறது.

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் 'அச்சம் என்பது மடமையடா'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படத்தை ஒன்றாக எண்டர்டெயின்மண்ட் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார் கெளதம் மேனன். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில் இருக்கிறது.

'அச்சம் என்பது மடமையடா' படத்தின் படப்பிடிப்புக்கு சிம்பு வருவதில்லை என்றும், அதனால் 'தள்ளிப் போகாதே' பாடல் இன்னும் படமாக்கப்படவில்லை என்று கெளதம் மேனன் தெரிவித்திருக்கிறார். இதனால் படக்குழு திட்டமிட்டப்படி இப்படம் வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கும் 'தள்ளிப் போகாதே' பாடல் படமாக்காமல் வெளியிட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல என்றும் கெளதம் மேனன் குறிப்பிட்டு இருக்கிறார்.

கெளதம் மேனனின் இந்தக் குற்றச்சாட்டு குறித்து சிம்பு தரப்பில் கேட்ட போது, "கெளதம் மேனனை மிகவும் மதிக்கிறார் சிம்பு. அதில் எந்த ஒரு மாற்று கருத்துமில்லை. ஆனால், தயாரிப்பு தரப்பில் இருந்து இன்னும் சம்பள பாக்கி இருக்கிறது. அதனைக் கொடுத்தால் இதர காட்சிகளை முடித்துக் கொடுத்துவிடுவார் சிம்பு.

இதுவரை சம்பளம் இல்லாமல் கிட்டதட்ட முழுமையாக முடித்துக் கொடுத்திருக்கிறேன். அனைவருக்குமே பணம் என்பது மிகவும் முக்கியம். கெளதம் மேனனின் பேட்டிக்கு சிம்பு மிகவும் வருந்தினார். ஆனால், அது குறித்து எந்த ஒரு கருத்தும் தெரிவிக்க அவர் விரும்பவில்லை" என்று தெரிவித்தார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x