Published : 24 May 2017 10:40 AM
Last Updated : 24 May 2017 10:40 AM

சண்டைக் காட்சிகளில் அசர வைத்த த்ரிஷா: இயக்குநர் சுந்தர் பாலு நேர்காணல்

முதன்முதலாக த்ரிஷா, ஆக்‌ஷன் நாயகியாக நடித்துள்ள படம் ‘கர்ஜனை’. இப்படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமாகிறார் சுந்தர் பாலு. இவர் விளம்பரத் துறையில் இருந்து சினிமாவுக்கு வந்திருக்கிறார். படத்தின் இறுதிக்கட்ட பணியில் இருக்கும் அவரிடம் பேசியதிலிருந்து...

இந்தியில் பெரும் வெற்றிபெற்ற ‘என்.ஹெச் 10’ படத்தின் ரீமேக்தான் இப்படம் என்று தகவல் வெளியாகியுள்ளதே...

சில வருடங்களுக்கு முன்பு அப்படத்தை ரீமேக் செய்யலாம் என்று ஒரு எண்ணம் இருந்தது. ஆனால், அதே மாதிரியான கதைகள் தமிழில் நிறைய வந்துவிட்டன. அதனால் அப்படத்தை ரீமேக் செய்யும் எண்ணத்தை கைவிட்டுவிட்டேன். பொதுவாக நாயகர்களுக்கு ஏற்ற கதையை தயார் செய்தால், அவர்களின் கால்ஷீட் கிடைக்க அதிக நாட்கள் காத்திருக்க நேரிடும்.

அதனால் நான் நாயகியை முன்னிலைப்படுத்தி இந்த கதையை தயார் செய்தேன். இப்படத்தின் கதையைக் கேட்டதும் த்ரிஷாவுக்கு மிகவும் பிடித்துப்போனது. அவர் உடனடியாக தேதிகள் கொடுத்தார். படபடவென்று வேலையைத் தொடங்கி முழுப்படத்தையும் முடித்துவிட்டோம்.

ஆக்‌ஷன் கதைக்கு த்ரிஷாவை எப்படி நாயகியாக தேர்ந்தெடுத்தீர்கள்?

‘நாயகி’ படத்தில் த்ரிஷா ஆக்‌ஷன் காட்சிகளில் நன்றாக நடித்திருந்தார். அதனால் இக்கதைக்கு அவர் சரியாக வருவார் என்று தோன்றியது. கதையைக் கேட்டதும் அவரும் சம்மதித்து விட்டார். இப்படத்தில் சும்மா வந்தோம், நடித்தோம் என்று இருக்காமல் அவர் கடுமையாக உழைத்திருக்கிறார். குறிப்பாக கயிறு கட்டி நடிக்கும் காட்சியில் டூப் இல்லாமல் அவர் நடித்தபோது ஒட்டு மொத்த படக்குழுவும் கைதட்டி வரவேற்றது. இதை திரையரங்கில் பார்த்தால் பிரமிப்பாக இருக்கும்.

நான் நிறைய முன்னணி நடிகைகளோடு விளம்பர படங்களில் பணிபுரிந்துள்ளேன். ஆனால், த்ரிஷாவைப் போன்று கடுமையாக உழைக்கும் நடிகையைப் பார்த்ததில்லை. இப்படத்துக்காக அவர் மிகவும் மெனக்கெட்டுள்ளார். படக்கதையை அவரிடம் சொல்லும் போதே, “மலைப்பிரதேசங்களில் ஜீப் ஓட்ட வேண்டும், உங்களுக்கு ஜீப் ஓட்டத் தெரியுமா?” என்று கேட்டேன். அவர் தெரியும் என்றார். நான் சும்மா சொல்கிறார் என்று நினைத்தேன். ஆனால், மலைப்பிரதேசங்களில் பிரமாதமாக ஜீப் ஓட்டி படக்குழுவை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.

‘கர்ஜனை' படத்தின் கதைக்களம் என்ன?

ஒரு பிரச்சினைக்கும் நமக்கும் சம்பந்தமே இருக்காது. ஆனால் எதிர்பாராத விதமாக நம்மிடம் அப்பிரச்சினை வரும்போது ஏற்படும் கோபம்தான் படம். இப்படத்தில் மேற்கத்திய நடனக் கலைஞராக நடிக்கும் த்ரிஷா, ஒரு நிகழ்ச்சிக்காக கொடைக்கானல் செல்வார். அங்கு அவருக்கு வரும் பிரச்சினை, அதிலிருந்து அவர் எப்படி தப்பிக்கிறார் என்பதுதான் திரைக்கதை.

படத்தில் காமெடி கலந்த ஒரு சண்டைக்காட்சியை எடுத்துள்ளோம். கண்டிப்பாக அந்தக் காட்சி பேசப்படும். சண்டைக்காட்சிகளில் த்ரிஷாவின் நடிப்பு படக்குழுவினரை அசரவைத்தது.

விளம்பரத் துறையிலிருந்து முதன் முறையாக படம் இயக்கிய அனுபவம் எப்படி இருந்தது?

நான் சென்னையில்தான் பிறந்து வளர்ந்தேன். என் அப்பா பாலன் அந்த காலத்துப் படங்களுக்கு கலை இயக்குநராக பணிபுரிந்தவர். அவரோடு சிறுவயதிலிருந்தே நிறைய படப்பிடிப்புக்கு சென்றிருக்கிறேன். இதுவரை 27 விளம்பர படங்கள் இயக்கியுள்ளேன். ஆகையால் எனக்கு திரையுலகம் புதிதாக தெரியவில்லை. விளம்பர படங்கள் உருவாகும் போது நேரமும், அக்காட்சியின் அழகுத் தன்மையும் மிகவும் முக்கியும். ஒவ்வொரு நொடியும் காசு. அங்கே கற்றுக்கொண்ட அனுபவம்தான் எனக்கு சினிமாவுக்கு மிகவும் உதவியது.

தற்போது திரையரங்கில் பாடல் வந்தாலே எழுந்து வெளியே போக ஆரம்பித்துவிடுகிறார்கள். ஆகையால் தேவையில்லாத பாடல்களை எல்லாம் தவிர்த்திருக்கிறேன். ஒவ்வொரு பாடலும் இரண்டரை நிமிடங்கள்தான். மொத்தம் 3 பாடல்கள்தான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x