Published : 14 Sep 2018 12:33 PM
Last Updated : 14 Sep 2018 12:33 PM

கமலின் ரெட் கார்டுக்கு எதிராக கருத்து சொல்லி ஐஸ்வர்யாவைக் காப்பாற்றும் காயத்ரி ரகுராம்: இதற்காகத்தான் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தாரா?

 'பிக் பாஸ்' வீட்டுக்குள் அனுப்பி வைக்கப்பட்ட காயத்ரி ரகுராம் ஐஸ்வர்யாவை நல்லவராகக் காண்பிக்க கடும் முயற்சி எடுத்து வருகிறார். கமலின் கருத்தையே தவறு என்று அவர் கூற ஜனனி போன்றோர் குழம்பிப் போயினர்.

'பிக் பாஸ்' வீட்டில் ஆரம்பம் முதலே ஐஸ்வர்யா, யாஷிகா டீமின் ஆட்டம் யாருக்கும் பிடிக்கவில்லை. மகத், யாஷிகா, ஷாரிக், ஐஸ்வர்யாவின் செயல்பாடுகள் பொன்னம்பலத்தைப் பாதிக்க அவர் நேரடியாகவே கண்டித்தார். ஷாரிக் வெளியே இருக்கும் உன் தந்தைக்கு நல்ல பெயர் வாங்கிக்கொடு என்று கண்டித்தார்.மறுபுறம் மகத், யாஷிகா ஆட்டத்தை பொதுமக்களுக்கு போட்டுக் காட்டுங்கள் என்று கூறினார்.

தன் மீது கால்பட்டும்கூட அதைப்பற்றி கவலைப்படாத பெண்களாக இருக்கிறார்கள். சித்தப்பா என்கிறார்கள், மரியாதை அப்படி இல்லை என பொன்னம்பலம் குற்றச்சாட்டு வைக்க, ஐஸ்வர்யா பொன்னம்பலத்திடம் எகிற அவர் திரும்ப எகிற அடங்கிப்போனார்.

இப்படியே வெறுப்பை சம்பாதித்த ஐஸ்வர்யா ஒவ்வொரு முறையும் எவிக்‌ஷனிலிருந்து தப்பித்தார் அல்லது தப்பிக்க வைக்கப்பட்டார். கடந்த முறை பாலாஜி மீது குப்பையைக் கொட்டி மக்களின் வெறுப்பைச் சம்பாதித்த அவர் வெளியேறும் காலத்தை பார்வையாளர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

இதற்குள் சென்றாயனை ஏமாற்றி, பொய் சொல்லி நேர்மையற்ற ஆட்டம் ஆடி குழு உறுப்பினர்களிடையே சிக்கினார். இதன்மூலம் கண்டிப்பாக வெளியேற்றப்படுவார் என்றிருந்த நிலையில் அவர் அதிகம் வாக்கு பெற்று தப்பிக்கிறார் என 'பிக் பாஸ்' அறிவிக்க கடுப்பாகிப் போன கமல் ஐஸ்வர்யாவை வறுத்தெடுத்தார். நேர்மையற்ற அவரது செயல் குறித்து மற்ற உறுப்பினர்களிடம் கேட்டார்.

நானாக இருந்தால் ஐஸ்வர்யாவின் செயலுக்கு ‘ரெட் கார்டு’ எனக் காட்டினார் கமல். ஐஸ்வர்யா காப்பாற்றப்பட்டதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. சென்றாயன் வெளியேற்றம் கமலைக் கடுமையாகக் கோபமடைய வைத்துள்ளது. அதனால் ஐஸ்வர்யா இந்த வாரம் எவிக்‌ஷனில் இருந்தே ஆகவேண்டும் என்று கமல் சொல்ல அதையும் நிறைவேற்றி ஐஸ்வர்யாவையும் காப்பாற்றும் முயற்சியிலும் 'பிக் பாஸ்' டீம் இறங்கியதில் 'பிக் பாஸ்' முதல் சீசன் போட்டியாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதில் அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள டாஸ்க் ஐஸ்வர்யாவை நல்லவராகக் காட்டுவது, அவர் செயல்களை  நியாயப்படுத்துவது. இதில் கடந்த சீசனில் இதேபோன்று நேர்மையற்றவராக நடந்து கமல்ஹாசனால் கண்டிக்கப்பட்ட காயத்ரி ரகுராம் முன்னணியில் உள்ளார். ஓவியாவை ஜூலியுடன் சேர்ந்து எதிர்த்து, கடுமையாக நடந்து பார்வையாளர்களால் வெறுக்கப்பட்டவர் காயத்ரி ரகுராம்.

இதேபோன்று ஓவியா வெளியேறி, அடுத்த வாரம் ஜூலி வெளியேற்றப்பட்டவுடன் அடுத்த எவிக்‌ஷனில் காயத்ரி வந்தால் வெளியேற்றப் பார்வையாளர்கள் காத்திருந்தபோது எவிக்‌ஷனில் சிக்கிய காயத்ரி ரகுராமை சாதாரண கேள்விகள் கேட்கும் போட்டி வைத்துக் காப்பாற்றினார் 'பிக் பாஸ்'.

தற்போது ஐஸ்வர்யாவைக் காப்பாற்றி மும்தாஜை வெளியேற்றும் முயற்சியில் 'பிக் பாஸ்' முதல் சீசன் போட்டியாளர்கள் கடுமையாக ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு முயற்சியாக கமல்ஹாசனின் கருத்தையே தவறு என்று காயத்ரி கூறினார்.

பிக் பாஸில் நேர்மையற்ற முறையில் சென்றாயனை ஐஸ்வர்யா ஏமாற்றும் காட்சியை போட்டுக்காட்டி காயத்ரி ரகுராம் பேசுகிறார். அப்போது அவர் மும்தாஜைப் பார்த்து, ''நீங்கள் நேர்மையாக விளையாடினீர்கள். அதே நேரம் ஐஸ்வர்யாவும் சென்றாயனை ஏமாற்றியது ஒருவகை யுக்திதான் அதில் தப்பில்லை'' என்கிறார்.

இதைக்கேட்டு ஐஸ்வர்யாவே குழம்பிப் போகிறார். இது ஒரு டாஸ்க். மும்தாஜ் மறுக்கும்போது, ஐஸ்வர்யா வெல்வதற்காக சென்றாயனை ஏமாற்றியது ஒரு யுக்திதான் என்று நியாயப்படுத்த, ஜனனி குழம்பிப் போகிறார். பின்னர் ரித்விகாவிடம் “கமல் சார் இதைத் தவறு என்று கண்டிக்கிறார், ஆனால் காயத்ரி ரகுராம் இது சரி என்கிறாரே?” என்று ஜனனி கேட்க ரித்விகா மவுனமாக இருக்கிறார்.

மற்றொரு இடத்தில், ''போன சீசனில் இல்லாததையா நான் செய்தேன், இதுக்கு ரெட் கார்டெல்லாம் ஓவர்'' என ஐஸ்வர்யா புலம்புகிறார். மற்றொரு இடத்தில் காயத்ரி ரகுராம், ''கமல் சார் ஐஸ்வர்யாவைக் கண்டித்தபின் பிரேக் விட்டவுடன் ஐஸ்வர்யா அழும்போது நீங்கள் அனைவரும் ஏன் அவருக்கு ஆறுதல் கூறவில்லை'' என்று ஐஸ்வர்யா மீது பரிதாபம் வரும் வகையில் பேசுகிறார்.

மொத்தத்தில் கடந்த சீசனில் நேர்மையற்றவராக ஆடி கமலிடம் வாங்கிக் கட்டிக்கொண்ட காய்த்ரி ரகுராம், இந்த சீசனில் கமலுக்கு எதிராக நேர்மையாளர்போல் பேசுவதும், ஐஸ்வர்யாவை நியாயப்படுத்துவதும் கமலுக்கு நிச்சயம் எரிச்சலை உண்டாக்கும். வரும் வாரம் கமல் இதற்கும் சேர்த்துப் பதில் சொன்னால் 'பிக் பாஸ்' களை கட்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x