Published : 24 Jun 2019 12:34 PM
Last Updated : 24 Jun 2019 12:34 PM

விஜய் சேதுபதிக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் வேண்டுகோள்

‘சிந்துபாத்’ படம் ரிலீஸ் தொடர்பாக விஜய் சேதுபதிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ என விஜய் சேதுபதியை வைத்து இரண்டு படங்களை இயக்கியவர் எஸ்.யு.அருண் குமார். இந்தக் கூட்டணி தற்போது மூன்றாவது முறையாக ‘சிந்துபாத்’ படத்தில் இணைந்துள்ளது. இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

விஜய் சேதுபதி ஜோடியாக அஞ்சலி நடிக்க, முக்கியக் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா நடித்துள்ளார். தமிழகத்தின் தென் பகுதிகள் மற்றும் மலேசியாவில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது. ராஜராஜன் மற்றும் ஷான் சுதர்சன் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.

இந்தப் படம் கடந்த வாரம் 21-ம் தேதி ரிலீஸாவதாகக் கூறப்பட்டது. ஆனால், பைனான்ஸ் பிரச்சினையால் ரிலீஸாகவில்லை. எனவே, வருகிற 28-ம் தேதி (வெள்ளிக்கிழமை) ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வருகிற வெள்ளிக்கிழமை ‘ஹவுஸ் ஓனர்’, ‘தர்மபிரபு’, ‘ஜீவி’ ஆகிய படங்கள் ரிலீஸாகவுள்ள நிலையில், ‘சிந்துபாத்’தும் அந்தப் பட்டியலில் இணைந்துள்ளது. இதனால், மற்ற படக்குழுவினர் சற்று அதிருப்தியில் உள்ளனர்.

இந்நிலையில், ‘ஹவுஸ் ஓனர்’ படத்தின் இயக்குநரான லட்சுமி ராமகிருஷ்ணன், தன்னுடைய அதிருப்தியை வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.

“பெரிய படங்களைச் சுற்றியுள்ள நிச்சயமற்ற தன்மைகள், சிறியவற்றை மூழ்கடிக்கின்றன. விஜய் சேதுபதி, சிப்பாயாக எங்கள் சிறிய படத்தைக் காப்பாற்ற வேண்டும். ஏற்கெனவே திட்டமிடப்பட்ட படங்களுக்கு நேரத்தைக் கொடுக்கத் தயாரிப்பாளர்களிடம் கூறுங்கள். தேதியை 15 நாட்களுக்கு முன்னால் அறிவிக்கவும்” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன். அத்துடன், வெள்ளத்தின்போது ராணுவ வீரர் ஒருவர் தன் தோளில் குழந்தை ஒன்றைச் சுமந்து செல்லும் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.

‘ஹவுஸ் ஓனர்’ படத்தில் கிஷோர், லவ்லின் சந்திரசேகர், ‘ஆடுகளம்’ கிஷோர், ஸ்ரீரஞ்சனி ஆகியோர் நடித்துள்ளனர். சென்னை வெள்ளத்தை அடிப்படையாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x