Last Updated : 14 Jun, 2019 11:47 AM

 

Published : 14 Jun 2019 11:47 AM
Last Updated : 14 Jun 2019 11:47 AM

லட்சுமிக்கு பதிலா மனோரமானு திடீர்னு மாத்தினேன்!’’ - விசுவின் ‘சம்சாரம் அது மின்சாரம்’ நினைவுகள்

''லட்சுமிக்கு பதிலா மனோரமா பேசினாத்தான் நல்லாருக்கும். இந்தக் கேரக்டருக்குப் பதில் அந்தக் கேரக்டர்னு திடீர்னு முடிவு பண்ணினேன்’’ என்று ‘சம்சாரம் அது மின்சாரம்’ பட நினைவுகளை விசு பகிர்ந்துகொண்டார்.

நடிகரும் இயக்குநருமான விசு, தனியார் இணையதளச் சேனலுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அதில் அவர் கூறியதாவது:

என்னுடைய படங்களில் பெரிய நடிகர்கள்தான் நடிக்கவேண்டும் என நான் ஒருபோதும் நினைத்ததில்லை. கதை ரெடியாகிவிட்ட பிறகு அந்தக் கதையை படமாகப் பார்ப்பதற்கு ரொம்பவே ஆசைப்படுவேன். அதற்காக, கதைக்கு யாரெல்லாம் கிடைக்கிறார்களோ, அவர்களை வைத்தே படத்தை எடுத்துவிடுவேன்.

புகழ் பெற்ற வசனகர்த்தாவான எம்.எஸ்.சோலைமலையின் மகன் எம்.எஸ்.ராஜேந்திரன் எனக்கு நல்ல நண்பர். நான் நாடகம் போட்டுக்கொண்டிருக்கும் போது அவரும் நாடகம் போட்டுக்கொண்டிருந்தார். அவருடைய நாடகத்தில் மனோரமா நடித்து வந்தார். ஒருமுறை அவர்களுக்கு என் கதையைக் கொடுத்தேன். அது பயங்கர ஹிட்டு. 600 ஷோக்களுக்கு மேலே போச்சு.

பிறகு, ‘மணல் கயிறு’ படம் பண்ணும்போது, எனக்கு ஒரேயொரு கேரக்டருக்கு, குறிப்பாக அந்த துர்கா கேரக்டருக்கு, பெரிய ஆர்ட்டிஸ்ட் தேவைப்பட்டது. நான் நண்பரிடம், ‘இதில் மனோரமா நடித்தால் நன்றாக இருக்கும்’ என்று சொன்னேன். உடனே ஒத்துக்கொண்டார் மனோரமா.

அன்று தொடங்கி என்னுடைய பல படங்களில் மனோரமா நடித்திருக்கிறார்.சம்பளப் பிரச்சினை இருக்காது. கால்ஷீட் குளறுபடி இருக்காது. பிரமாதமான நடிப்பைக் கொடுத்துருவாங்க.  ‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்தில், வீட்டு வேலைக்காரப் பெண்மணி கண்ணம்மாவாக நடித்திருந்தார்.

கதைப்படி, ரகுவரனிடம் நான் சொன்னபடி பணம் கொடுத்துவிடுவேன். ரகுவரன் சொன்னபடி வீட்டை காலி செய்யச் சொல்லிவிட்டு, பக்கத்தில் உள்ள கோயிலில் போய் உட்கார்ந்துகொள்வேன்.

கதைப்படி எப்படி எடுப்பதாக இருந்தது தெரியுமா? கோயிலில் இருக்கிற என்னைப் பார்க்க, லட்சுமி வருவார். ‘உங்க குடும்பத்துக்கு வந்ததால பிறந்த இந்தக் குழந்தை, உங்களுக்குச் சொந்தமா? என் வயித்துல பிறந்ததால, எனக்குச் சொந்தமா?’ன்னு டயலாக் பேசிட்டுப் போகணும். இது மறுநாள் ஷூட் பண்ணனும்.

முதநாள் ஷூட்டிங் முடிச்சிட்டு, கார்ல போயிட்டிருக்கும் போது, மெளனமா வந்துக்கிட்டே இருந்தேன். என் தம்பி, என்னடான்னு கேட்டான். அவன்கிட்ட, கோயிலுக்கு வந்து இப்படிப் பேசுற லட்சுமியே, உடைஞ்ச கண்ணாடி விரிசலாயிருச்சு. அது திரும்பவும் ஒட்டாது. ‘நீ செளக்கியமா நான் செளக்கியம்’னு தள்ளி நின்னு விசாரிச்சிப்போம்’னு குடும்பத்தைப் பிரிச்சா, அது நல்லாவா இருக்கும்? ஆடியன்ஸ் கேள்விக்கு என்ன பதில் சொல்லமுடியும்’னு சொன்னேன்.

உடனே காரை நிறுத்தி, ஒரு பொட்டிக்கடைலேருந்து லட்சுமிக்கு போன் பண்ணினேன். ‘ஒருவிஷயம்...’னு தயங்கினேன். ‘சும்மா சொல்லுங்க’ன்னு சொன்னாங்க லட்சுமி. நான் எனக்குள்ளே இருந்த தயக்கத்தை, குழப்பத்தைச் சொன்னேன். மறுமுனைலேருந்து... ‘ஒரு நல்ல சீன் மனோரமாவுக்குப் போவுது’ன்னு சொன்னாங்க. எனக்கு ஷாக்.

மறுநாள் காலை 7.30 மணிக்கு கோவூர் கோயில்ல ஷூட்டிங். மனோரமாவுக்குப் போன் பண்ணினேன். இதேபோல தயங்கினேன். அப்புறமா சொன்னேன். ‘அப்போ... காலைல 7 மணிக்கு நான் கோவூருக்கா/’ அப்படின்னு கேட்டாங்க.

ஏழுமணிக்கு எல்லாரும் அசெம்பிளானோம். 7.20 மணிக்கு மேக்கப்போட மனோரமா ரெடி. 7.30 மணிக்கு மனோரமா பேசுற காட்சியை எடுக்க ஆரம்பிச்சோம். 8.40 மணிக்கெல்லாம் முடிஞ்சிச்சு. மனோரமாவை அடுத்த படத்தோட வேலைக்கு அனுப்பி வைச்சிட்டோம்.

இதை எதுக்கு சொல்றேன்னா, அந்த அளவுக்கு எல்லா ஆர்ட்டிஸ்டும் டெடிகேஷனோட ஒர்க் பண்ணினாங்க. கதையைப் புரிஞ்சிக்கிட்டாங்க. சூழலைப் புரிஞ்சிக்கிட்டாங்க. ஒருத்தருக்கொருத்தர் அவ்ளோ கனிவா நடந்துக்கிட்டாங்க.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x