Published : 11 May 2019 04:55 PM
Last Updated : 11 May 2019 04:55 PM

அவசரமாகக் கூடும் நடிகர் சங்க செயற்குழு

நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம், வருகிற 14-ம் தேதி நடைபெற இருக்கிறது.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம், வருகிற 14-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை நடைபெறும் என அவசரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தி.நகரில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில், மாலை நேரத்தில் இந்தக் கூட்டம் நடைபெறும் எனத் தெரிகிறது.

தற்போதுள்ள நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிந்துவிட்டதால், தேர்தல் குறித்து விவாதிப்பதற்காகவே இந்த அவசரக் கூட்டம் நடைபெற இருக்கிறது.

2015 - 2018-ம் ஆண்டுக்கான தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல், 2015-ம் ஆண்டு அக்டோபர் 18-ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில், நாசர் தலைமையில் ஒரு அணியும், சரத்குமார் தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிட்டது.

மயிலாப்பூர் செயின்ட் எப்பாஸ் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில், காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. பலத்த பாதுகாப்புடன் நடைபெற்ற தேர்தலில், 1,824 பேர் நேரடியாக வந்து வாக்களித்தனர். மேலும், தபால் மூலம் 783 பேர் வாக்களித்தனர்.

அஜித், நயன்தாரா, த்ரிஷா உள்ளிட்ட 532 பேர் இந்தத் தேர்தலில் வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அன்று மாலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. கடும் போட்டிக்கு இடையே, நாசர் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. தலைவராக நாசர், பொதுச்செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்தி, துணைத் தலைவர்களாக கருணாஸ், பொன்வண்ணன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இவர்களின் பதவிக்காலம், கடந்த வருடம் (2018) அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்தது. அந்த சமயத்தில் தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால், நடிகர் சங்கக் கட்டிட வேலைகள் நடைபெற்று வருவதால், தேர்தலை 6 மாதங்களுக்குத் தள்ளி வைத்தனர்.

தற்போது 6 மாத காலக்கெடுவும் முடிவடைந்துவிட்டதால், தேர்தல் நடத்தியாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தற்போதைய தலைவரான நாசர் மீண்டும் போட்டியிடுவது உறுதியான நிலையில், அவரை எதிர்த்து ராதிகா சரத்குமார் தலைமையிலான அணி களமிறங்கலாம் எனத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x