Published : 24 Mar 2019 06:04 PM
Last Updated : 24 Mar 2019 06:04 PM

முதிர்ச்சியாக யோசியுங்கள்: ராதாரவியை மறைமுகமாக சாடிய வரலட்சுமி

முதிர்ச்சியாக யோசியுங்கள் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் ராதாரவியை மறைமுகமாக சாடியுள்ளார் வரலட்சுமி சரத்குமார்

சக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாரா, பிரதாப் போத்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கொலையுதிர் காலம்'. இப்படத்தை மதியழகன் தயாரித்துள்ளார். நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (மார்ச் 23) நடைபெற்றது.

இவ்விழாவில் பேசும் போது நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளைத் தெரிவித்தார் ராதாரவி. இந்த வீடியோ பதிவு ட்விட்டரில் பகிரப்பட்டது. அதனைப் பார்த்து பலரும் ராதாரவியை கடுமையாக சாடி வருகிறார்கள்.

ராதாரவியின் பேச்சு குறித்து வரலட்சுமி சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

''பெண்களை அசிங்கப்படுத்துவது, பெண்களைப் பற்றி ஆபாசமான நகைச்சுவை பேசுவது (பேசுபவர்களுக்கு ஆபாசம் என்று தெரியாது), பெண்களை இழிவுபடுத்துவது, பெண்களை காட்சிப் பொருளாகப் பயன்படுத்துவது எல்லாம் இந்த திரைத்துறையில் ஒரு பகுதியாக மாறிவிட்டது. நமது போன தலைமுறை ஆண்கள், பெண்களுக்கு நன்றி. ஏனென்றால் அவர்கள் அதெல்லாம் சரி என்று நினைத்து எதுவும் சொல்லாமல் இருந்துவிட்டார்கள். இதுதான் நம் நிலைமை.

நமக்கு என நடக்கும்போதுதான் நாங்கள் எதற்காகப் போராடுகிறோம் என்பது உங்களுக்கு உரைக்கும். மீ டு குறித்த சர்ச்சை வரும்போது, துறையில் இருக்கும் பெண்கள் என்னைப் போல, சின்மயியைப் போல எண்ணற்ற பெண்களுக்கு ஆதரவாக நின்றிருந்தால் விஷயங்கள் ஒருவேளை மாறியிருக்கலாம். அமைதி நமக்கு எந்தத் தீர்வையும் தராது. நேரம் முடிந்துவிட்டது. ஒவ்வொரு பெண்ணும் துணிந்து நிற்க வேண்டும்.

திரைப்பட சங்கங்கள் என்று சொல்லிக்கொள்பவை எல்லாமே சில ஆணாதிக்கவாதிகளால் நடத்தப்படுபவை. அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள். பெண்களை ஆதரிப்பது போல நடிப்பார்கள். ஆனால் நிஜத்தில் இவர்கள் ஏதோ ஒரு வகையில், திரையிலோ, வாழ்க்கையிலோ பெண்கள் இழிவுபடுத்தப்படும் சூழ்நிலைக்கு பங்காற்றியிருப்பார்கள்.

சிலருக்கு இந்த மாதிரியான இழி பேச்சுகள் நகைச்சுவையாக இருந்தால், பல வருட கொடுமைக்குப் பிறகும் அமைதியாக இருந்து, அப்படியான உலகத்தைத் தான் நாம் உருவாக்கியுள்ளோம். நம்மை நாமே மதிக்க ஆரம்பிக்கவில்லை என்றால் மற்றவர்கள் நம்மை மதிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. துணிந்து பேசுங்கள். உங்களுக்கு நடக்கும் வரை காத்திருந்து பின் கண்ணீர் விடாதீர்கள்.

கவர்ச்சியான உடைகள் அணிவதன் மூல எங்களை நாங்களே இழிவுபடுத்திக் கொள்கிறோம் என்று நினைக்கும் எல்லா முட்டாள்களுக்கும் ஒன்று சொல்லிக் கொள்கிறேன், அது ஒவ்வொரு பெண்ணின் தனிப்பட்ட விருப்பம். ஒரு பெண்ணின் குணத்தை அவளது உடையை வைத்து நீங்கள் முடிவு செய்யக் கூடாது. முதிர்ச்சியாக யோசியுங்கள். ஒரு பெண் என்ன அணிந்தாலும், என்ன செய்தாலும் அவளை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

ஒரு ஆண் என்ன செய்தாலும், அது எவ்வளவு மோசமான, தவறான, நெறிமுறையற்ற செயலாக இருந்தாலும், அந்த ஆணுக்கு எத்தனை துணைகள் இருந்தாலும் அதை வைத்து நீங்கள் அவரது குணத்தை மதிப்பிட மாட்டீர்கள் என்றால் பெண்களைப் பற்றி மதிப்பிடவும் யாருக்கும் உரிமை இல்லை. உங்கள் சகோதரி என்ன உடை அணிந்திருந்தாலும் உங்களுக்கு அவரை பலாத்காரம் செய்யத் தோணாது இல்லையா. அதே போல மற்ற பெண்களையும் மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்''.

இவ்வாறு வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x