Last Updated : 01 Feb, 2019 09:29 AM

 

Published : 01 Feb 2019 09:29 AM
Last Updated : 01 Feb 2019 09:29 AM

’என் கல்யாணப் பரிசா ’புலன்விசாரணை’ கொடுத்துட்டியே செல்வமணி!’- விஜயகாந்த் நெகிழ்ச்சி

- கேப்டன் திருமண நாள் இன்று

‘இதுவரைக்கும் தொடர்ந்து நாலுபடங்கள் தோத்துப் போயிருச்சு. இப்ப இந்தப்படம் தோத்துப் போனா, அஞ்சாவது படம். இன்னும் 9 படங்கள் கைவசம் இருக்கு. ஆனா உனக்கு இதான் முதல் படம். தோத்துட்டா, நீ வீட்டுக்குப் போயிடவேண்டியதுதான்’ என்று இயக்குநர் ஆர்.கே.செல்வமணியிடம் விஜயகாந்த அட்வைஸ் செய்தார்.  

ஆமாம். 89ம் வருடம், ‘எம் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்’ படம் ஹிட்டானது. அதையடுத்து, ‘தர்மம் வெல்லும்’, ‘பொறுத்தது போதும்’, ‘பொன்மனச்செல்வன்’, ‘மீனாட்சி திருவிளையாடல்’, ‘ராஜநடை’, ‘எங்கிட்ட மோதாதே’ என வரிசையாகப் படங்கள் வந்தன. எதுவும் பெரிய அளவில் பெயர் சொல்லும்படியான படங்களாக அமையவில்லை.

அந்த சமயத்தில்தான் அறிமுக இயக்குநர் ஆர்.கே.செல்வமணிக்கு தன் படத்தை இயக்க வாய்ப்பை வழங்கினார் விஜயகாந்த். அந்தப் படம்தான் ‘புலன் விசாரணை’.

படப்பிடிப்பின் போதுதான், ஆர்.கே.செல்வமணிக்கு இப்படியான அறிவுரையை வழங்கினார். ‘எனக்கு கைவசம் 9 படங்கள் இருக்கு. அதுல ஒண்ணு ரெண்டு வெற்றிப்படமாகிட்டாக் கூட, இன்னும் எட்டுப்பத்து படங்கள் என் கைக்கு வந்துரும். ஆனா உனக்கு இது முதல்படம். எம் பேரைத் தாண்டியும் உம் பேரை ரசிகர்களும் மக்களும் சொல்லணும். அப்படிப் பண்ணு’ என்றார் விஜயகாந்த்.

படப்பிடிப்பு மளமளவென நடந்துகொண்டிருந்த வேளையில், விஜயகாந்துக்கு பெண் தேடும் படலம் நடந்தது. பெண்ணும் பார்க்கப்பட்டது. பிடித்துப் போனது. ‘நீயும் ஒரு எட்டு பாத்துடுப்பா’ என்றார்கள். விஜயகாந்தும் பார்த்தார். சம்மதம் சொன்னார்.

பிறகென்ன... திருமணத் தேதியும் குறிக்கப்பட்டது. 90-ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி திருமணம். இதேசமயத்தில், புலன்விசாரணை படப்பிடிப்பும் இறுதிக்கட்டத்தை எட்டியது. ரிலீஸ் தேதி உறுதி செய்யப்பட்டது. 90-ம் ஆண்டு, ஜனவரி மாதம் 14 -ம் தேதி பொங்கல் திருநாளில் ரிலீஸ் செய்ய உறுதி செய்யப்பட்டது. ரிலீஸ் நாளும் நெருங்கியது.

அப்போது, செல்வமணியிடம் விஜயகாந்த், ‘என்ன செல்வமணி, இந்தப் படம் ஓடிருமாய்யா. இன்னும் இருபது நாள்ல கல்யாணம். படம் ஜெயிச்சா, ஒரு கெளரவமா இருக்கும். கம்பீரமா மணமேடைல நிக்கலாம். ஓடிரும்தானே’ என்று கேலியும் கிண்டலுமாகக் கேட்டார் விஜயகாந்த்.

பொங்கல் வந்தது. ’புலன் விசாரணை’யும் வந்தது. மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. முன்பு ஆறு படங்களின் தோல்விகளையெல்லாம் ஈடுகட்டும் வகையில், பிரமாண்டமானதொரு வெற்றியைத் தந்தது, ’புலன் விசாரணை’.

31-ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது, விஜயகாந்த் - பிரேமலதா திருமணம். திரையுலகமே திரண்டு வந்து வாழ்த்தியது. முதல் படத்தை வெற்றிப்படமாக்கிய ஆர்.கே.செல்வமணி, கையில் மிகப்பெரிய கிஃப்ட்பாக்ஸ் சகிதமாக வந்தார். அது வாழ்த்து. நன்றி. இரண்டுமேதான்!

அருகில் வந்த செல்வமணி, விஜயகாந்தின் கைகளைப் பிடித்து குலுக்கினார். கிப்ட் கொடுத்தார். ‘இது எதுக்குய்யா. அதான் என் கல்யாணப்பரிசா, ‘புலன்விசாரணை’யைக் கொடுத்துட்டியே. அதுபோதாதா?’ என்று விஜயகாந்தி மகிழ்ந்து சொன்னார்.

இதை விஜயகாந்துக்கு நடந்த பாராட்டு விழா ஒன்றில், இயக்குநர் ஆர்.கே.செல்வமணி நெகிழ்ந்தும் மகிழ்ந்துமாகக் குறிப்பிட்டுப் பேசினார்.

’புலன் விசாரணை’ படம் வெளியாகியும் விஜயகாந்த் திருமணம் நடந்தும் 29 வருடங்களாகிவிட்டன.

அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் கேப்டன் விஜயகாந்துக்கு, விஜயகாந்த் தம்பதிக்கு இனிய திருமண நாள் வாழ்த்துகள் சொல்லுவோம். அப்படியே பூரண ஆரோக்கியத்துடன் விஜயகாந்த் விரைவில் திரும்பவேண்டும் என்றும் வாழ்த்துவோம்!

31.1.19 விஜயகாந்த் திருமண நாள் இன்று!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x