Published : 08 Dec 2018 05:43 PM
Last Updated : 08 Dec 2018 05:43 PM

பொங்கல் போட்டியில் இருந்து விலகிய சிம்பு படம்

அடுத்த ஆண்டு (2019) பொங்கல் விடுமுறைக்கு அஜித்தின் ‘விஸ்வாசம்’, ரஜினியின் ‘பேட்ட’, சிம்புவின் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’, ஜீ.வி.பிரகாஷின் ‘வாட்ச்மேன்’ ஆகிய படங்கள் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது.

‘பேட்ட’ மற்றும் ‘விஸ்வாசம்’ ஆகிய இரண்டு படங்களும் ஒரே தேதியில் ரிலீஸானால், அதிக திரையரங்குகள் கிடைக்காது என்பதால், தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், சன் பிக்சர்ஸ் பொங்கல் வெளியீட்டில் உறுதியாக நிற்க, பொங்கலுக்குப் படங்களை ஒதுக்குவதில் இருந்து விலகிக் கொண்டது தயாரிப்பாளர்கள் சங்கம்.

இதுவரை இரண்டு பாடல்கள், டீஸரை வெளியிட்டு விளம்பரப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது ‘பேட்ட’ படக்குழு. ஆனால், ‘விஸ்வாசம்’ தொடர்பாக இதுவரை பாடலோ, டீஸரோ வெளியிடப்படவில்லை. இந்த இரண்டு படங்களின் ஷூட்டிங்கும் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஆனால், பொங்கலுக்கு வருவதாகச் சொன்ன ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தின் ஷூட்டிங்கே இன்னும் முடியவில்லை. எப்போது ஷூட்டிங் முடியும் எனத் தெரியாமல், இனிமேல் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளைத் தொடங்கி பொங்கலுக்குப் படத்தை வெளியிடுவது என்பது கஷ்டமான விஷயம்.

அத்துடன், திரையரங்குகளும் போதிய அளவில் கிடைக்காது என்பதால், பொங்கல் போட்டியில் இருந்து இந்தப் படம் விலகும் என்கிறார்கள்.

சுந்தர்.சி இயக்கிவரும் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படம், பவன் கல்யாண் நடித்த ‘அத்தரண்டிகி தாரேதி’ தெலுங்குப் படத்தின் ரீமேக். சிம்பு ஜோடியாக கேத்ரின் தெரேசா, மேகா ஆகாஷ் நடிக்கின்றனர். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டபோது 'பொங்கல் வெளியீடு' என குறிப்பிட்டார்கள். ஆனால் 'பேட்ட' படத்தின் பொங்கல் வெளியீடு அறிவிப்புக்குப் பிறகு வெளியிடப்பட்ட டீஸரில் ‘coming soon’ எனக் குறிப்பிட்டுள்ளனர். இதன்மூலம் பொங்கல் வெளியீட்டிலிருந்து ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ விலகியுள்ளது உறுதியாகி இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x