Published : 09 Dec 2018 07:57 PM
Last Updated : 09 Dec 2018 07:57 PM

ஒரு தலைமுறையின் தாழ்வு மனப்பான்மையை மாற்றியவர் ரஜினி: பாடலாசிரியர் விவேக்

ரஜினி நடிப்பில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘பேட்ட’. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு, அனிருத் இசையமைத்துள்ளார்.  ரஜினியுடன் இணைந்து நவாஸுதீன் சித்திக், விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா, பாபி சிம்ஹா, மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா, இன்று (டிசம்பர் 9) சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய பாடலாசிரியர் விவேக், “இந்த உலகம் அழகான பொய்களை மக்களாகிய நம்மிடம் விற்றுக்கொண்டே இருக்கிறது. அதில் வெள்ளைக்காரன் நம்மிடம் விற்ற பொய், ‘வெள்ளைதான் அழகு’. அப்படி வெள்ளை மட்டுமே ஆட்சி செய்துகொண்டிருந்த திரை உலகில், அந்தப் பொய்யை உடைத்து எறிந்தவர் ரஜினி சார். ஒரு தலைமுறையின் தாழ்வு மனப்பான்மையை மாற்றியவர்.

எங்கோ ஒரு மூலையில் பஸ் கண்டக்டராக விரல்களின் இடுக்கில் டிக்கெட்டுகளை வைத்திருந்தவருக்குத் தெரிந்திருக்காது, இந்த விரலசைவுக்காக மிகப்பெரிய கூட்டமே க்யூவில் நின்று டிக்கெட் எடுத்துப் படம் பார்க்கும் என்று. எவ்வளவு உயரத்துக்குப் போனாலும் எப்போதும் எளிமையாக இருக்கக் கூடியவர். அவரிடம் கற்றுக்கொள்ள ஆயிரம் விஷயங்கள் இருக்கின்றன. ரஜினி எனும் மகாநடிகன் 40 ஆண்டுகளாக நம்மை என்டெர்டெயினிங் செய்து கொண்டிருக்கிறார்” என்றவர், ரஜினியின் மிகச்சிறந்த நடிப்புக்கு எடுத்துக்காட்டாக ‘முள்ளும் மலரும்’ படத்தில் இருந்து ஒரு காட்சியையும், ‘கபாலி’ படத்தில் இருந்து ஒரு காட்சியையும் கூறினார்.

தொடர்ந்து பேசிய விவேக், “கார்த்திக் சுப்பராஜுடன் ஏற்கெனவே பணியாற்றியுள்ளேன். கமர்ஷியலாகப் படம் எடுத்தாலும், தமிழ் சினிமாவை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்பவர். அனிருத் ஒவ்வொரு படத்தையும், ஒவ்வொரு பாடலையும் ஹிட் கொடுக்க வேண்டும் என்று கடிமையாக உழைக்கிறார்.

சின்ன ப்ரேம் கிடைத்தாலும், அதில் தன்னைக் கவனிக்க வைக்கிற விஜய் சேதுபதியும் ரஜினியும் ஒரே ப்ரேமில் தோன்றுகிற காட்சியைக் காண ஆவலாக இருக்கிறேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x