Published : 23 Dec 2018 07:52 AM
Last Updated : 23 Dec 2018 07:52 AM

திரை விமர்சனம்: மாரி 2

மாஸ் ரவுடியான தனுஷை (மாரி) இன்னொரு ரவுடி கும்பல் தீர்த்துக்கட்ட திட்டமிடுகிறது. தனது துணிச்சலான வியூகத்தால் 100-வது முறையும் அதில் இருந்து தப்பிக்கிறார் தனுஷ். இதை அவரது நண்பர்கள் கிருஷ்ணா, ரோபோ சங்கர், வினோத் ஆகியோர் பெரும் விழாவாக கொண்டாடுகின்றனர். அதே பகுதியில் ஆட்டோ ஓட்டும் சாய் பல்லவிக்கு மாரி மீது காதல் மலர்கிறது. தான் ஒரு ரவுடி, அதுவும் எப்போதும் எதிரிகளால் குறிவைக்கப்படும் ரவுடி என்பதை மாரி பலமுறை கூறியும் விடாமல் காதலிக்கிறார் சாய் பல்லவி. இந்த சூழலில், தன் அண்ணனைக் கொன்ற தனுஷை பழிவாங்க வருகிறார் வில்லன் டொவினோ தாமஸ். முதல்கட்டமாக தனுஷை அவரது நண்பன் கிருஷ்ணாவிடம் இருந்து பிரித்து தன் வலைக்குள் சிக்கவைத்து தீர்த்துக்கட்டும் முயற்சியில் இறங்குகிறார். இதில் தனுஷ் சிக்கினாரா? வில்லனுடன் சேர்ந்த கிருஷ்ணாவை எப்படி எதிர்கொள்கிறார்? சாய் பல்லவியின் காதல் என்ன ஆனது? இதெற்கெல்லாம் விடை சொல்கிறது ‘மாரி 2’.

2015-ல் வந்த ‘மாரி’ படத்தின் இரண்டாம் பாகம் இது. சில கதாபாத்திரங்களையும், தனுஷின் தோற்றத்தையும் தவிர முந்தைய படத்தின் சாயல் துளியும் இல்லாமல் இதை இயக்கியுள்ளார் பாலாஜி மோகன். ரவுடி கோஷ்டி மோதலுக்கான கரு இருந் தும், திரைக்கதை பற்றிய கவலையின்றி இயக்கியுள்ளார். விளைவு, கடிவாளம் இல்லாத குதிரையாக ஓடுகிறது திரைக் கதை. ரவுடித்தன கதைகளுக்கே உரிய விறுவிறுப்பு இல்லை. பழிவாங்கல் கதையில் இருக்கும் சடுகுடு ஆட்டங்களும் இல்லை. ஆனால், தூக்கலாக இருக்கும் நகைச்சுவை காட்சிகள் இந்தக் குறையைப் போக்கிவிடுகின்றன.

திரைக்கதையில் இருக்கும் ஓட்டைகளை அடைக்க தனுஷ்தான் இப்படத்தில் பெரிய பலம். ரவுடியாக வெடிப்பது, சாதுவாக உருகுவது, கோபத்தில் கொந்தளிப்பது, ஒருதலையாக காதலிக்கும் சாய் பல் லவியை கலாய்ப்பது என படம் முழுக்க ஆதிக்கம் செலுத்துகிறார் தனுஷ். ‘அராத்து ஆனந்தி’யாக ஆட்டோ ஓட்டும் சாய் பல்லவி, அமர்க்களப்படுத்துகிறார். துரத்திக் காதலிப்பதிலும், சென்டிமென்ட் காட்சிகளிலும் தேர்ந்த நடிப்பை வழங்குகிறார். சென்னை ஆட்டோ ஓட்டுநராக அவரது உடல்மொழி கச்சிதம்.

கிருஷ்ணா, வரலட்சுமி, ‘ஆடுகளம்’ நரேன், ஈ.ராமதாஸ் ஆகியோர் பாத்திரம் உணர்ந்து நடித்துள்ளனர். வில்லனாக அறிமுகமாகியுள்ள டொவினோ தாமஸ் அலட்டல் இல்லாமல் நடிக்கிறார். ஆனால், ரவுடிக்குரிய உடல்மொழி மிஸ்ஸிங்.

ரோபோ சங்கர், வினோத்தின் அலப்பறை கள் படத்தின் முதல் பாதி நகர்வுக்கு சற்றே கைகொடுக்கின்றன. ரவுடித்தனத்தை ஒழிக்க மாவட்ட ஆட்சியர் வரலட்சுமி எடுக்கும் திட்டங்கள், தனுஷ் மகனாக வரும் ராகவன் பகுதிகள் தனி முத்திரைகள்.

முதல் பாகத்தில் ‘நல்ல ரவுடி’ என்ற பாத்திர வார்ப்பாக வருகிறார் தனுஷ். 2-ம் பாகத்தில் சாதுவான மாரியப்பனாக மாறிவிடுகிறார். கிளைமாக்ஸில் மீண்டும் வீறுகொண்டு எழுகிறார். ‘பாட்ஷா’ பாதிப்பில் இருந்து தமிழ் சினிமா எப்போது மீளும் என்று தெரியவில்லை. டொவினோ தாமஸ் வில்லனாக அவதாரம் எடுக்கச் சொல்லப்படும் காரணங்களில் வலுவில்லை. தலைமறைவாகிவிடும் தனுஷை 8 ஆண்டு கள் கழித்தும், விட்ட இடத்தில் இருந்து இயக்குநர் காட்ட முனைவது அயற்சியை ஏற்படுத்துகிறது. கொலைகளை தனுஷ் சர்வசாதாரணமாக செய்கிறார். ஆனால், அதை கண்டுகொள்ளாத ஐஏஎஸ் அதிகாரி வரலட்சுமியும், போலீஸும், தனுஷை வைத்து வில்லனைப் பிடிக்க திட்டமிடுவது பெரிய நகைமுரண்.

ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவும், யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல் மற்றும் பின்னணி இசையும் சிறப்பு.

காதல், காமெடி, நட்பு, சென்டிமென்ட் கலந்த இந்த ரவுடி கதையில், நாயகன் - வில் லன் மோதல் சம்பவங்கள் மேலோட்டமாக, எந்த புதுமையும் இன்றி நகர்கின்றன. அதில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் முழுமையாக மனதில் நிறைந்திருப்பான் ‘மாரி’.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x