Published : 09 Dec 2018 09:23 PM
Last Updated : 09 Dec 2018 09:23 PM

வாழ்க்கையில் ரஜினி உண்டாக்கிய தாக்கம்; பேட்ட உருவான ரகசியம்: மனம் திறந்த கார்த்திக் சுப்பராஜ்

ரஜினி நடிப்பில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘பேட்ட’. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு, அனிருத் இசையமைத்துள்ளார்.  ரஜினியுடன் இணைந்து நவாஸுதீன் சித்திக், விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா, பாபி சிம்ஹா, மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா, இன்று (டிசம்பர் 9) சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், “இது நிஜமானு இன்னும் நம்ப முடியலை. காரணம், தலைவர் ரஜினி. அவர் என்னுடைய வாழ்க்கையின் அங்கம். அவரை நடிகராக ரசிப்பதையும் மீறி, சின்ன வயதில் இருந்தே என்னுடைய அங்கமாகத்தான் நினைக்கிறேன்.

நான் சினிமா பண்ணுவேன்னு நினைக்கலை. சாஃப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். நான் சினிமாவுக்கு வரக் காரணம் தலைவர் தான். மதுரையில் இருக்கும்போது குடும்பத்தோட அடிக்கடி சினிமாவுக்குப் போவோம். நடிகராக ஒருத்தரை ரசிப்பதைத் தாண்டி, சினிமா என்றாலே பிரமிப்பை உருவாக்கியவர் தலைவர் தான். தொடக்கம் அவர்தான்.

சினிமாவுக்கு வந்தபோது, தலைவர் என் படத்தைப் பார்த்துப் பாராட்டினா போதும் என்று நினைத்தேன். தமிழ் சினிமாவிலேயே... ஏன் இந்திய சினிமாவிலேயே மனதாரப் பாராட்டுபவர் தலைவர் மட்டும்தான். அவருக்கு அவசியம் இல்லை என்றாலும்கூட, பாராட்டுவதில் இருந்து தவறமாட்டார்.  ‘2.0’ படத்தில் சொல்வது போல அவரைச் சுற்றி பாஸிட்டிவ் ஆரா இருக்கிறது. அந்த பாஸிட்டிவ் ஆராவை எல்லோருக்கும் பரப்புபவர் தலைவர். அதுவும் பெரிய கிலோமீட்டர் அளவுக்கு.

‘பீட்ஸா’ படம் ரிலீஸானபோது, என் மனைவி மற்றும் பாபி சிம்ஹாவுடன் மதுரையில் ஒரு தியேட்டருக்குப் போய்க் கொண்டிருந்தேன். அப்போது ஒரு போன் வந்தது. ரஜினி சார் வீட்டில் இருந்து பேசுகிறோம் என்றார்கள். என் நண்பர்கள் தான் விளையாடுகிறார்கள் என்று நினைத்து முதலில் நான் நம்பவில்லை. ஆனால், சென்னை லேண்ட்லைன் என்பதால், உண்மையாக இருக்குமோ என்று நினைத்தேன். ‘ஸ்பீக்கரில் போடு மச்சான்’ என்று சொன்னான் பாபி. ‘படம் நல்லா இருந்துச்சு’னு பாராட்டுனார் தலைவர்.

படத்தைப் பார்த்துத் தலைவர் பாராட்டுனா போதும்னு நினைச்சேன். அது நடந்துடுச்சு. ஆனால், தலைவர் கூட படம் பண்ணுவேன்னு நினைக்கலை. அந்த நம்பிக்கையைக் கொடுத்ததும் தலைவர்தான். தலைவர்கிட்ட போனில் பேசி, அவரோட குரலைக் கேட்டுட்டோம். அவரை ஒருமுறை பார்த்தா நல்லாருக்கும்னு நினைச்சேன்.

அப்போ தலைவருடன் ‘லிங்கா’ படத்துல கருணாகரன் நடிச்சுக்கிட்டு இருந்தான். அவன்கிட்டு தலைவரைப் பார்க்கக் கேட்டு, ஏழெட்டு பேரு கிளம்பிப் போனோம். அந்த சமயம் என்னோட ‘ஜிகர்தண்டா’ படம் ரிலீஸாகி இருந்துச்சு. ‘நான் என்ன எழுதுனாலும் உங்கள மனசுல வச்சுத்தான் சார் எழுதுறேன்’னு சொன்னேன். ‘அப்போ அதையெல்லாம் என்கிட்டயே சொல்லியிருக்கலாமே...’ என்றார்.

அன்னிக்கு அவரைப் பார்த்த சந்தோஷத்துல போட்டோ மட்டும் எடுத்துக்கிட்டேன், ஆட்டோகிராஃப் வாங்க மறந்துட்டேன். அதனால், எப்படியாவது அவர்கிட்ட ஆட்டோகிராஃப் வாங்கணும்னு மறுநாள் போனேன். அன்னிக்கு அவருக்கு பிரேக் என்பதால், என்னை வரச்சொல்லி பேசினார். அவருடன் உட்கார்ந்து பேசியது என் வாழ்க்கையின் மறக்க முடியாது தருணம். ‘ஸ்கிரிப்ட் இருந்தா சொல்லுங்க’னு சொன்னார். அவர் என்கிட்ட ஸ்கிரிட்ப் இருக்கானு கேட்டதையே இரண்டு நாட்கள் கழித்துதான் உணர்ந்தேன். 2014-ம் ஆண்டு அவர் என்கிட்ட கேட்டார். அந்த மிகப்பெரிய கனவு இன்று நனவாகியுள்ளது.

ஷூட்டிங்கின்போது அவர் எப்படி நடக்கிறார், எப்படி புத்தகம் படிக்கிறார் என்று பார்த்து ரசித்துக்கொண்டே இருப்பேன். என்னோட உதவி இயக்குநர் பாலா தான் அடிக்கடி அவர்கிட்டப் பேசிக்கிட்டுருப்பான். என்னைவிட அவன் அதிகமா பேசுறானேனு அவனைப் பார்க்கவே பொறாமையா இருக்கும். என்னைத் தவிர வேற யார் பேசுனாலும் எனக்குக் கடுப்பா இருக்கும். என் மனைவி அவர்கூட பேசுனபோது கூட அவங்ககிட்ட சண்டை போட்டேன். அவரை வச்சு ஒரு படத்தையே இயக்கி முடிச்சிட்டேன். ஆனாலும், இப்போ அவர் பக்கத்துல உட்காரும்போது கூட பதட்டமா இருக்கு.

நான் கதை சொன்னபோது, ‘நாம பண்ணலாம்’னு சொல்லிட்டார். இடையில், ‘அரசியலுக்கு வரப்போறேன்’னு சொல்லிட்டார் (இதை அவர் சொல்லியதும் அரங்கத்தில் வெகுநேரம் ரசிகர்களின் ஆரவாரக் கூச்சல் ஒலித்தது). அந்த அரசியல் அறிவிப்பு சந்தோஷமா இருந்தாலும், நம்ம படம் கிடையாதானு கொஞ்சம் சுயநலமாகவும் இருந்தது. ஏன்னா, நான் ஆஸ்கர் விருதே வாங்கினாக்கூட என் வாழ்க்கை முழுமையடையாது. தலைவர் படத்தால் மட்டும்தான் முழுமையடையும்.

கலாநிதி மாறன் சாரும் தலைவரோட ரசிகர்தான். ‘தலைவர் படம் மாதிரி இந்த படத்தைப் பண்ணணும்’னு தான் என்கிட்ட சொன்னார். இந்தப் படம் சண்டைக் காட்சிகளுக்காக பெரிதாகப் பேசப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x