Published : 09 Nov 2018 11:27 AM
Last Updated : 09 Nov 2018 11:27 AM

‘சர்கார்’ சர்ச்சை: ஏன் இத்தனைக் களேபரம்? விஷால் கேள்வி

‘சர்கார்’ படம் குறித்து ஏன் இத்தனைக் களேபரம்? என விஷால் கேள்வி எழுப்பியுள்ளார்.

விஜய் நடிப்பில் தீபாவளிக்கு ரிலீஸான படம் ‘சர்கார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இந்தப் படத்தை, சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், பழ.கருப்பையா, ராதாரவி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வசூல் ரீதியாக, இதுவரை எந்த தமிழ்ப் படமும் செய்யாத சாதனையை ‘சர்கார்’ செய்துள்ளது. இரண்டு நாளில் 100 கோடி ரூபாய் வசூலித்து, பாக்ஸ் ஆபீஸில் ஹிட் அடித்துள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி, உலக அளவிலும் இந்தப் படத்துக்குப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

அதேசமயம், இந்தப் படத்தில் அதிமுக.வினருக்கு எதிரான காட்சிகள் இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜு உள்ளிட்ட அதிமுக.வினர் சில காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சென்னையில் காசி, ஆல்பர்ட், தேவி ஆகிய திரையரங்கங்கள் உள்படத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ‘சர்கார்’ படத்தின் பேனரைக் கிழித்தும், போஸ்டரைத் தீயிட்டுக் கொளுத்தியும் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், கலவரம் ஏற்படும் சூழல் உருவானது.

எனவே, ‘சர்கார்’ படத்தில் இருக்கும் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க படக்குழு ஒப்புக் கொண்டுள்ளது. இருந்தாலும், ஏ.ஆர்.முருகதாஸ் வீட்டுக்குக் காவல் துறையினர் சென்று விசாரணை செய்தது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தென்னிந்திய நடிகர் சங்க செயலாளரும், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவருமான விஷால், “இயக்குநர் முருகதாஸ் வீட்டில் காவல்துறையா? எதற்காக? எதுவும் எதிர்மறையாக நடக்காது என்று நம்புகிறேன். மீண்டும் ஒருமுறை சொல்கிறேன்... சென்சார் அனுமதி கொடுத்துவிட்டது. படத்தை மக்கள் பார்க்கின்றனர். இதில் ஏன் இத்தனைக் களேபரம்?” என ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x