Published : 08 Oct 2018 09:39 PM
Last Updated : 08 Oct 2018 09:39 PM

ஆங்கிலப் படத்தின் தழுவலா ஆண் தேவதை?- இயக்குநர் தாமிரா விளக்கம்

'ஆண் தேவதை' திரைப்படம் ஆங்கிலப் படத்தின் தழுவலா என்ற கேள்விக்கு இயக்குநர் தாமிரா விளக்கம் அளித்துள்ளார்.

தாமிரா இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஆண் தேவதை’. சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன், சுஜா வாருணி, ராதாரவி, இளவரசு, காளி வெங்கட், ஹரீஷ் பெராடி, அபிஷேக், மாஸ்டர் கவின் பூபதி, பேபி மோனிகா மற்றும் பலர் நடித்துள்ள இந்தப்படத்தை தனது 'சிகரம் சினிமாஸ்' நிறுவனத்துடன் ஃபக்ருதீன் என்பவருடன் இணைந்து தயாரித்துள்ளார் தாமிரா.

விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். வரும் 12-ம் தேதி இந்தப்படம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் படம் குறித்து இயக்குநர் தாமிரா கூறுகையில், ''ஏதோ ஒருவிதத்தில் நாம் நம்மையோ நம்மைச் சுற்றி இருப்பவர்களையோ ஏமாற்றி ஒரு வாழ்க்கை வாழ வேண்டி இருக்கிறது. என் மனைவி ஒருமுறை என்னிடம் பேச்சுவாக்கில் நாம் ஏன் இந்தப் பெருநகரத்தில் வாழ்கிறோம், நாம் வாழ்வதற்காக சம்பாதிக்கிறோமா இல்லை சம்பாதிப்பதற்காக வாழ்கிறோமா என்கிற கேள்வியை எழுப்பினார். நெருக்கடியான தருணத்தில் அவர் கேட்ட அந்த கேள்வி ரொம்பவே முக்கியமாகப் பட்டது. அந்த சமயத்தில் தான் ‘பர்ஸ்யூட் ஆஃப் ஹேப்பினெஸ்’ என்கிற படம் பார்த்தேன். அதன் தூண்டுதலிலும் இந்த பெருநகர வாழ்க்கையின் பாதிப்பிலும் தான் இந்த ஆண் தேவதை படம் உருவானது.

பொதுவாக இங்கே பெண்களைத்தான் தேவதையாகச் சொல்கிறோம். தேவதை என்பது உயர்ந்த குணம்.. உயர்ந்த பண்பு.. அப்படி உயர்ந்த குணம் உள்ள ஆணும் ஒரு தேவதையாக இருக்கலாம் என்பதைத்தான் இதில் சொல்லியிருக்கிறோம்'' என்றார் தாமிரா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x