Published : 22 Oct 2018 03:44 PM
Last Updated : 22 Oct 2018 03:44 PM

விதார்த் நடிப்பில் ‘சித்திரம் பேசுதடி 2’

விதார்த் நடித்துள்ள படத்துக்கு ‘சித்திரம் பேசுதடி 2’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

சேரன், பிரசன்னா நடிப்பில் வெளியான ‘முரண்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ராஜன் மாதவ். அடுத்ததாக விதார்த், ராதிகா ஆப்தே, அஜ்மல், காயத்ரி, அசோக் ஆகியோரை வைத்து ஒரு படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு ‘உலா’ என்று தலைப்பு வைக்கப்பட்டது.

ஓரிரு வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட இந்தப் படத்தை விளம்பரப்படுத்துவதற்காக, ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’ அணியில் விளையாடிய பிரபல கிரிக்கெட் வீரர் பிராவோவை வைத்து வீடியோ பாடல் ஒன்றும் படம்பிடிக்கப்பட்டு வெளியிடப்பட்டது.

இந்தப் படத்தை வெளியிட சூழ்நிலை சரியாக அமையாத நிலையில், தற்போது அது கைகூடி வந்திருக்கிறது. இந்நிலையில், படத்தின் தலைப்பை மாற்றியுள்ளனர். ‘உலா’ என்ற தலைப்பைத் தூக்கிவிட்டு, ‘சித்திரம் பேசுதடி 2’ எனத் தலைப்பு வைத்துள்ளனர்.

மிஷ்கின் இயக்கத்தில் 2006-ம் ஆண்டு ரிலீஸான படம் ‘சித்திரம் பேசுதடி’. நரேன், பாவனா, ‘காதல்’ தண்டபாணி ஆகியோர் நடித்தனர். இந்தப் படத்தில் கானா உலகநாதன் பாடி, மாளவிகா நடனமாடிய ‘வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும்...’ பாடல் வைரல் ஹிட்.

‘சித்திரம் பேசுதடி 2’ என்று தலைப்பு வைத்தாலும், ‘சித்திரம் பேசுதடி’ படத்துக்கும், இந்தப் படத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x