Published : 06 Oct 2018 11:30 AM
Last Updated : 06 Oct 2018 11:30 AM

இன்னும் பல பரியன்கள் தமிழ் சமூகத்துக்கு வர வேண்டும்: ’பரியேறும் பெருமாள்’ பார்த்துப் பாராட்டிய ஸ்டாலின்

‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தன் குடும்பத்தினருடன் பார்த்து படக்குழுவினரை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தை இயக்குநர் பா.இரஞ்சித் தயாரித்துள்ளார். கதிர், ஆனந்தி, யோகி பாபு உள்ளிட்டோர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். சாதியப் பாகுபாட்டை உணர்த்தும் இத்திரைப்படத்தை வெளியான நாள் முதலே பலரும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு, மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் இத்திரைப்படத்தைப் பார்த்து இயக்குநர் மாரி செல்வராஜ் உள்ளிட்டோரை பாராட்டினர்.

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இத்திரைப்படத்தை மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி, மருமகள் கிருத்திகா உதயநிதி உள்ளிட்டோருடன் பார்த்து ரசித்தார். அப்போது, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்எல்ஏ மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோரும் உடனிருந்தனர். 

படத்தைப் பார்த்த மு.க.ஸ்டாலின், “தலைவர் கலைஞர் பார்த்திருந்தால் பரியனை வெகுவாக பாராட்டியிருப்பார். நிறைய வருடங்களுக்குப் பிறகு நான் பார்த்த சிறந்த படம். திரைப்படக் குழுவினருக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என, நெகிழ்ச்சியுடன் கூறியதாக படக்குழுவினர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இயக்குநர் மாரி செல்வராஜ், தயாரிப்பாளர் பா.இரஞ்சித் இருவரையும் ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.

இதையடுத்து, ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "பரியேறும் பெருமாள் பார்த்தேன். இன்னும் பல பெரியார், அம்பேத்கர், அண்ணா, கலைஞர் தோன்ற வேண்டுமென்பதை உணர்த்தியது இந்தப் படம். பா.இரஞ்சித் தயாரிப்பில் அறிமுக இயக்குநரான மாரி செல்வராஜ் படத்தை மறக்க முடியாது. சமூக அழுக்கை அகற்ற இன்னும் பல பரியன்கள் தமிழ் சமூகத்திற்கு வர வேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.

— M.K.Stalin (@mkstalin) October 6, 2018

இயக்குநர் மாரி செல்வராஜ் தன்னுடைய முகநூல் பக்கத்தில், "பரியேறும் பெருமாள் திரைப்படத்தை பிரியத்தோடு பார்த்து பெரும் நெகிழ்ச்சியோடு பாராட்டிய திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கும், ஆ.ராசாவுக்கும், உதயநிதி மற்றும் அவரது குடும்பத்தாருக்கும் எங்கள் நன்றி" எனப் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x