Published : 21 Oct 2018 09:13 AM
Last Updated : 21 Oct 2018 09:13 AM

திரை விமர்சனம்- வடசென்னை

போதை, கடத்தல் என வடசென்னை யில் ஒரு மீனவக் குப்பத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக் கிறார் அமீர். சமுத்திரக்கனி, கிஷோர், பவன்குமார், சாய்தீனா ஆகிய 4 பேரும் அவரது அடிபொடிகள். எத்தனை நாள் தான் அடியாளாகவே இருப்பது என, சமயம் பார்த்து நால்வரும் சேர்ந்து அமீரை கொன்றுவிடுகின்றனர். அதன் பிறகு வடசென்னையில் தாதாக்களாக உருவெடுக்கும் சமுத்திரக்கனி - கிஷோர் இடையே மோதல் உருவாகிறது. இதற் கிடையில், ஒரு சிறிய குற்றச் செயலுக்காக சிறை செல்கிறார் தனுஷ். பிறகு, கிஷோரின் கும்பலுக்குள் தந்திரமாக ஊடுருவும் தனுஷ், ஒருகட்டத்தில் அவரை கொல்ல முயல்கிறார். சமுத்திரக்கனி - கிஷோர் விரோதத்துக்கு காரணம் என்ன? தனுஷ் ஏன் கிஷோரை கொல்ல முயல்கிறார்? அமீரின் மனைவி ஆண்ட்ரியா, ஏன் சமுத்திரக்கனியை திருமணம் செய்கிறார்? அவர் பழிவாங்குவதற்கு தனுஷை எப்படி பயன்படுத்திக்கொள்கிறார் என்பதுதான் ‘வடசென்னை’.

கதாபாத்திரங்களை நுணுக்கமாகவும், அழுத்தமாகவும் சித்தரிப்பதில் தன்னை தனித்து வெளிக்காட்டி வரும் வெற்றிமாறன், இப்படத்திலும் அதை நேர்த்தியாக செய் திருக்கிறார். நெடுங்கதை, நிறைய பாத் திரங்கள் என்றாலும் நேர்த்தியான திரைக் கதையால் ‘நிறைந்த பொழுதுபோக்கு - தேர்ந்த கலைப் படம்’ என்ற இரட்டைப் பாதையிலும் தொய்வின்றி பயணிக்கிறது படம். வஞ்சம், வன்மம் என கதை பரந்து விரிந்தாலும், இயன்றவரை வன்முறையை கட்டுக்குள் வைத்தே கையாண்டிருக்கிறார் இயக்குநர்.

திரைக்கதையின் காலத்தை முன்னும் பின்னுமாகக் கலைத்துப்போட்டு, சம்பவங் களை விடுவித்துக்காட்டி கதை சொன்ன விதம் உறுத்தல் இல்லாத எளிமையுடன் இருக்கிறது. ரத்த களேபரத்துக்கு இடையே தனுஷ் - ஐஸ்வர்யா, அமீர் ஆண்ட்ரியா காதல் காட்சிகள் ரசனை.

மீசையை மழித்துவிட்டால் ஸ்கூல் பையன், தாடி வைத்தால் பக்கா ரவுடி என தனுஷ் நடிப்பு வேற லெவல். அவர் ரவுடி களோடு மோதும் காட்சிகளில் விசில் பறக்கிறது.

ஒரு விளையாட்டு வீரனாக, அமைதி யாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ விரும் பும் ஓர் இளைஞனை, அவனுக்குத் தெரியாமலேயே, கூரான கத்தியாகத் தீட்டி, தன் பழிவாங்கலின் பாதையில் கிடத்தும் ஆண்ட்ரியா கதாபாத்திரம், தனுஷ், அமீர் கதாபாத்திரங்களைத் தாண்டி ஈர்க்கிறது.

ஊருக்கு நல்லது செய்யும் ரவுடியாக அமீர், மோசமான அரசியல்வாதியாக ராதாரவி, முதுகில் குத்தும் சகுனிகளாக கிஷோர், சமுத்திரக்கனி, குழி பறிக்கும் குள்ள நரியாக டேனியல் பாலாஜி என அத்தனை கதாபாத்திரங்களும் அனுபவித்து நடித்துள்ளனர்.

பாடல்கள், பின்னணி இசையில் சந் தோஷ் நாராயணனின் உழைப்பு பாராட் டுக்குரியது. வேல்ராஜ் கேமரா குறுகலான சந்துகளின் ஊடாக துல்லியமாக பய ணிக்கிறது. 30 ஆண்டுகளுக்கு முந்தைய வடசென்னையைக் காட்ட மிகவும் மெனக் கெட்டுள்ளார் கலை இயக்குநர் ஜாக்கி.

படத்தை வெறும் கேங்ஸ்டர் சினிமா என்று அடக்கிவிடாமல், பேராசை கொண்ட அரசியல் மற்றும் கார்ப்பரேட் உலகிடம் விலைபோகும் பச்சோந்தி தாதாக்களை அடையாளம் காட்டுவது, பாரம்பரிய வாழ்விடத்தில் இருந்து சாமானியர்களை அப்புறப்படுத்துவதற்கு எதிரான குரலை அழுத்தமாக ஒலிக்கச் செய்வது ஆகிய வற்றால் அரசியல் படமாகவும் ஆக்கி விடுகிறார் இயக்குநர்.

திரையில் பல கதாபாத்திரங்களில் ஒன்றாக, ‘அன்பு’ எனும் கதாபாத்திரமாகவே வரும் தனுஷை, படத்தின் இறுதியில் கதாநாயகனாக பில்டப் செய்வது அந்தக் கதாபாத்திரத்தின் அதுவரையிலான இயல்பைச் சிதைக்கிறது.

சென்னை ரவுடியிஸம் அடிப்படையில் எத்தனையோ படங்கள் வந்தாலும், கதைக் களத்தின் நிலப்பரப்பை திட்டவட்டமாக வரையறுத்து ‘வடசென்னை’ என்று தலைப்பு சூட்டியிருக்கிறார் இயக்குநர். கூடவே, எம்ஜிஆர் மறைவு, அவருக்குப் பிறகு ஜெயலலிதாவுக்கான அரசியல் எதிர்காலம் அமைவது, ராஜீவ்காந்தி மரணம் போன்ற நிகழ்வுகளையும் நேர்த்தி யாக புகுத்தி, திரைக்கதைக்கு ஒரு உண்மைத்தன்மையை கொடுத்துவிட்டு, ‘இக்கதையில் வரும் கதாபாத்திரங்களும், நிகழ்வுகளும் அப்பகுதி மக்களின் வாழ்க்கையைக் குறிப்பதல்ல’ என்று பொறுப்பு துறப்பது நியாயமா?

வடசென்னை என்பது மீனவக் குப்பங்கள் மட்டுமின்றி, இந்தி, தெலுங்கு பேசும் மக்கள், வெள்ளையர் காலம்தொட்டு வாழும் சாமானிய உழைக்கும் மக்கள் என பலதரப்பினரும் வசிக்கும் இடம். ஆனால் இந்தப் படம், வடசென்னை குறித்து ஏற் கெனவே திரைப்படங்கள் உருவாக்கி யிருக்கும் சிதிலமான எதிர்மறை பிம்பத்தை இன்னும் பூதாகரமாக்கவே செய்கிறது.

‘அட்டு’. ‘அசால்ட்டு’. ‘கல்ஜி’, ‘கலாய்’, ‘தெறி’ என்பவற்றோடு, கொச்சை யான வசைச் சொற்களும் படம் முழுக்க சரளமாக புழங்குகின்றன. போகிறபோக்கில் கதையோடு பயணிப்பதால் இந்த வார்த்தை களை புகுத்தியிருப்பதாக தோன்றினாலும், பெரும்பாலும் தவிர்த்திருக்க முடியும் என்பதே உண்மை. தவிர, ‘அப்பகுதியின் வாழ்க்கை இத்தகையதுதான்; அங்கு வளரும் குழந்தைகள் இப்படித்தான் உருவாகின்றனர்’ என்ற பிம்பத்துக்கே இது வலுசேர்க்கும்.

வடசென்னை மண் மீதான ஒரு தோற்ற மயக்கத்தை தந்திருக்கும் பெருங் குறையை தவிர்த்துவிட்டுப் பார்த்தால் இதுவும் ஒரு நேர்த்தியான படமே!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x