Published : 10 Oct 2018 09:19 AM
Last Updated : 10 Oct 2018 09:19 AM

திரை விமர்சனம்- நோட்டா

சினிமா நடிகராக இருந்து முதல்வரானவர் நாசர். அரசுக்கு சொகுசுப் பேருந்துகள் வாங்கியதில் ஊழல் செய்ததாக அவர் மீது வழக்கு தொடர்கிறது சிபிஐ. இதையடுத்து, முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் அவர், வெளிநாட்டில் இருந்து விடுமுறைக்காக வந்து நண்பர்களுடன் கும்மாளம் அடிக்கும் தன் மகன் விஜய் தேவரகொண்டாவை முதல்வர் ஆக்குகிறார். முந்தைய நாள் போதைகூட தெளியாத நிலையில் முதல்வராகப் பதவியேற்கிறார் விஜய். ஊழல் வழக்கில் நாசர் கைது செய்யப்படுவதால், அவரது கட்சியினர் வன்முறையில் இறங்குகின்றனர். அதில் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதைப் பார்த்து விழித்துக்கொள்கிறார் விஜய். தன் முதல்வர் பதவியின் முக்கியத்துவத்தை உணர்கிறார். கலவரத்தை கட்டுப்படுத்துகிறார். மக்கள் நலப் பணிகளில் கவனம் செலுத்துகிறார். இதற்கிடையில், ஜாமீனில் வரும் நாசர் வெடிகுண்டுத் தாக்குதலுக்கு ஆளாகி, கோமா வுக்கு செல்கிறார். பினாமிகள் பெயரில் வெளிநாடுகளில் பல்லாயிரம் கோடி மதிப் புள்ள சொத்துகளை அவர் பதுக்கிவைத்திருப் பதே இந்த தாக்குதலுக்கு காரணம் என்று கண்டுபிடிக்கிறார் விஜய். அவற்றை தேடிக் கண்டுபிடித்து முடக்க முயற்சிக்கிறார். இதில் வெற்றி அடைந்தாரா? முதல்வர் பதவியை தக்கவைத்துக்கொண்டாரா என்பதைக் கூறுகிறது மீதிக் கதை.

ஷான் கருப்பசாமி எழுதிய ‘வெட்டாட்டம்’ என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள படம். அவரும், இயக்குநர் ஆனந்த் ஷங்கரும் இணைந்து திரைக்கதை அமைத்துள்ளனர். நல்லவர் முதல்வராவதால் மக்களுக்கு கிடைக்கும் நன்மைகள் மற்றும் ஊழல்வாதி களால் அந்த முதல்வர் சந்திக்கும் எதிர்ப்புகள் ஆகியவற்றை மையமாக வைத்துப் பின்னப்பட்ட திரைக்கதை இறுதிவரை பரபரப்பு குறையாமல் நகர்கிறது.

ஃபிளக்ஸ் பேனர் கலாச்சாரம், குனிந்து கும்பிடு போடுவது தொடங்கி அரசியல்வாதி களின் அவலங்களை நக்கலடிக்கும் அதே நேரம், அரசியல்வாதிகள் மனது வைத் தால் மட்டுமே கூவம் போன்ற கைவிடப் பட்ட ஆறுகளை மீட்கமுடியும் என்ற பார்வையை ஒரு பொழுதுபோக்கு சினிமா வில் அழுத்தமாக முன்வைத்ததும் பாராட்டுக் குரியது.

வெறும் கிண்டலோடு நிற்காமல், சில அவலங்களுக்கு நல்ல தீர்வுகளையும் முன்வைக்கிறது திரைப்படம். உதாரணமாக, ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் சுதாரித்து சரியான நடவடிக்கைகளை எடுத்திருந்தால் 2015 சென்னை வெள்ள சேதத்தைக் கணிசமாக குறைத்திருக்கலாம் என்பதை காட்சிப்படுத்திய விதம் அருமை. வெள்ளச் சூழலில் இளைஞர்களின் தன்னலமற்ற சேவையை கவுரவப்படுத்தியதும் சிறப்பு.

அதேநேரம், முழுக்க அரசியல்வாதிகளை மட்டுமே பிரச்சினைக்கு உரியவர்களாக சித்தரிப்பது ஏற்கும்படி இல்லை. முதல்வ ராகப் பதவியேற்று பொறுப்புக்கு வந்து விட்ட பிறகு, நாயகன் நண்பர்களுடன் இரவு நேர பார்ட்டிக்கு சென்று மாட்டிக்கொள் வது போன்ற லாஜிக் மீறல்கள் ஆங்காங்கே பல் இளிக்கின்றன. மூத்த செய்தியாளர் சத்யராஜ், முதல்வருக்கு வழிகாட்டியாக இருப்பதுபோல காட்டுவது புத்திசாலித்தன மான சிந்தனை. ஆனால் அவருக்கோ எதிர்க்கட்சித் தலைவரின் வீடுகூட தெரிய வில்லை. அவரது முன்னாள் காதலைச் சொல் லும் ஃபிளாஷ்பேக்கும், அதை வைத்து படத்தின் இறுதியில் நிகழ்த்தப்படும் ட்விஸ்ட் டும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் கடந்துபோகின்றன. பினாமி பெயரிலான வெளிநாட்டு சொத்துகள் அனைத்தையும் ஒரே ஒரு ஹேக்கரின் துணைகொண்டு முடக்குவது, அந்த ஹேக்கரே பினாமிகளை தேடிக் கண்டுபிடிக்கும் சூப்பர் ஹீரோவாகவும் மாறுவது ஆகியவை ஒரு கூடை பூவை காதில் சுற்றிய உணர்வைத் தருகிறது.

சுந்தரத் தெலுங்கு வாடையோடு பேசும் விஜய் தேவரகொண்டாவை முழுமை யாக ரசிக்கலாம். உணர்ச்சிகளை மிகை யின்றி வெளிப்படுத்துகிறார். ‘ரவுடி முதல்வர்’ என்று பெருமையாக தன்னை அறிவித்துக்கொள்ளும் காட்சிகளில் ஒரு மாஸ் நடிகருக்கான தேவைகளை கச்சித மாக நிறைவேற்றுகிறார்.

மீண்டும் ஒரு அழுத்தமான குணச்சித்திர வேடத்தில் நன்றாக நடித்திருக்கிறார் சத்யராஜ். அனுபவமும் குதர்க்கமுமான ஊழல் அரசியல்வாதி கதாபாத்திரத்துக்கு தன் பாணியில் மெருகேற்றுகிறார் நாசர். முதல்வரின் அணுக்கமான தொண்டராக வரும் எம்.எஸ்.பாஸ்கரும் தன் பங்கில் குறை வைக்கவில்லை. அரசியல் கதையில் நாயகி மெஹ்ரீன் பிர்ஸாடாவுக்கு பெரிதாக வேலை இல்லை. எதிர்க்கட்சித் தலைவரின் மகளாக வரும் சஞ்சனா நடராஜன் கவனிக்க வைக்கிறார்.

சாம்.சி.எஸ் இசையில் பின்னணி இசை பரபரப்பு கூட்டுகிறது, பாடல்கள் அனைத்தும் இடைச்செருகல்களாகக் கடக்கின்றன. சந்தான கிருஷ்ணன் ரவிச்சந்திரனின் ஒளிப்பதிவில் புதுமை ஒன்றும் இல்லை. செட் போட்டு படமாக்கியது பல இடங்களில் அப்பட்டமாகத் தெரிகிறது.

சமகால அரசியலைத் துணிந்து திரைக்கதையில் பயன்படுத்தியது, சில பிரச்சினைகளுக்கு அக்கறையான தீர்வைச் சொன்னது ஆகிய விதத்தில் கவனம் ஈர்க்கிறது ‘நோட்டா’.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x