Published : 20 Aug 2018 09:37 AM
Last Updated : 20 Aug 2018 09:37 AM

நடிகர் சங்கத் தேர்தல் 6 மாதம் தள்ளிவைப்பு: பொதுக்குழு கூட்டத்தில் ஒப்புதல்

நடிகர் சங்கத் தேர்தல் 6 மாதம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. சங்கத் தலைவர் நாசர் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்திக் உள்ளிட்ட நிர்வாகிகள், முன்னணி நடிகர்கள், நாடக நடிகர்கள் பங்கேற்றனர்.

கடந்த ஆண்டுக்கான ஆண்டறிக் கையை துணைத் தலைவர் கருணாஸ் வாசித்தார். நடிகர் சங்கக் கட்டிடம் இன்னும் 6 அல்லது 7 மாதங்களில் கட்டி முடிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

நிர்வாகிகளின் பதவிக்காலம் அக்டோ பருடன் முடிவடைகிறது. இந்த நிலையில், நடிகர் சங்கத் தேர்தலை 6 மாதம் ஒத்திவைக்க பொதுக்குழு ஒப்புதல் அளித்தது. பொதுக்குழு கூட்டம் முடிந்த பிறகு, சங்க நிர்வாகிகள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அவர்கள் கூறியதாவது:

பொதுச் செயலாளர் விஷால்: எங்கள் பதவிக்காலம் அக்டோபருடன் முடிவடைகிறது. நடிகர் சங்கத்துக்கு இப்போதைக்கு தேர்தல் கிடையாது. தற்போது கட்டிவரும் நடிகர் சங்க கட்டிடத்தை மார்ச் மாதத்துக்குள் முடிக்க தீர்மானித்துள்ளோம். அதற்கு இன்னும் ரூ.20 கோடி தேவைப்படுகிறது. நிதி திரட்ட 2 கலை நிகழ்ச்சிகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயர் மாற்றப்படாது.

தலைவர் நாசர்: பொதுக்குழுவில் கலந்துகொண்ட அனைவருமே சங்கத்துக்கு தேர்தல் வேண்டாம் என்று ஒருமித்த குரலில் கூறினர். ஆனால், நாங்கள் கூறிய குற்றச்சாட்டையே எங்கள் மீது மற்றவர்கள் சுமத்துவதை நாங்கள் விரும்பவில்லை. எனவே, தேர்தல் நடத்தலாம் என்ற முடிவில்தான் இருக்கிறோம். தேர்தலை 6 மாதம் தள்ளிவைப்பது குறித்து சட்டப்படி ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

சமீபத்தில் நடிகர் சங்கத்தில் இருந்து எஸ்.வி.சேகரை நீக்கியது செல்லாது என்று நீதிமன்றம் அறிவித்ததைத் தொடர்ந்து, பொதுக்குழுவில் அவரும் கலந்துகொண்டார். தேர்தலை தள்ளிவைப் பது ஏற்கக்கூடியது அல்ல என்று அவர் பேசியதால் சலசலப்பு ஏற்பட்டது.

பொதுக்குழு கூட்டத்தில் ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர், நடிகைகள் யாரும் கலந்துகொள்ளவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x