Published : 19 Aug 2018 11:03 AM
Last Updated : 19 Aug 2018 11:03 AM

திரை விமர்சனம்: கோலமாவு கோகிலா

ஏடிஎம்மில் காவலாளியாக வேலை செய்யும் அப்பா, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அம்மா, கல்லூரியில் படிக்கும் தங்கை ஆகியோரைக் கொண்ட சாதாரண குடும்பத்தை சுமக்கும் இளம்பெண் கோகிலா (நயன்தாரா). சராசரித் தேவைக்காக பயத்துடன் வாழ்க்கையை எதிர்கொள்ளும் அவர், நேர்மையாக உழைக்கும் நோக்கில் ஒரு ஸ்பாவில் வேலைக்குச் சேர்கிறார். ஒரு கட்டத்தில் அம்மாவின் மருத்துவச் செலவுக்காக அவருக்கு பெரும் தொகை தேவைப்படுகிறது. அந்த சூழலில், போதைப் பொருள் கடத்தும் கும்பல், சரக்கை கைமாற்றும் வேலைக்கு அவரைப் பயன்படுத்த, பணத் தேவைக்காக அந்த வேலையைத் தொடர்கிறார். அந்த கும்பலின் நெட்வொர்க் மும்பை வரை பரவுகிறது. ஒரு பக்கம் கண்கொத்திப் பாம்பாக அலையும் போலீஸ், இன்னொரு பக்கம், கொஞ்சம் பிசகினாலும் ஆளையே காலி செய்துவிடும் கடத்தல் மாஃபியா. இந்த இரு ஆபத்தான கண்ணிகளுக்கு நடுவில், தொட்ட ஆபத்தை விடமுடியாத இருதலைக் கொள்ளியாக அல்லாடும் நயன்தாரா, அந்த சூழ்நிலையை எப்படிக் கையாண்டார்? தேவையான பணத்தை திரட்டினாரா? போலீஸ் அவரை நெருங்கியதா என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு விடை தருகிறது கதை.

போதைப் பொருள் கடத்தும் கும்பலுக்குள் ஒரு பெண் சிக்கிக் கொள்வது என்ற கதையின் கரு, தமிழ் சினிமாவுக்கு புதிது. நயன்தாராவை நடுநாயகமாகக் கொண்டு ‘ப்ளாக் ஹியூமர்’ படமாக கலக்கியிருக்கிறார்கள். கடத்தல் என்ற பிரதான கதையோடு, நயன்தாரா வீட்டின் எதிரில் மளிகைக் கடை வைத்திருக்கும் யோகி பாபுவின் ஒருதலைக் காதலை கிளைக்கதையாக பரவவிட்டு, நேர்த்தியான திரைக்கதையோடு சலிப்பு தட்டாமல் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் நெல்சன். நாம் சாதாரணமாக கடந்துபோகும் இடங்களுக்குள் வேறு ஒரு உலகம் இயங்குவதை காமெடியாக சொல்லியிருக்கிறார். படத்தில் கத்தி, ரத்தம், வன்முறை எல்லாம் இருந்தாலும், உறுத்தலாக இல்லாமல், நகைச்சுவையில் இரண்டறக் கலந்து போகிறது.

கீழ்த்தட்டு நடுத்தரக் குடும்பப் பெண்ணாக தன்னை நன்றாகவே வெளிப்படுத்தி இருக்கிறார் நயன்தாரா. அப்பாவியான முகம், அதை வைத்து செய்யும் தகிடுதத்தம் என வெகுவாய் கவர்கிறார். ‘அறம்’ போல இதிலும் தனக்கென தனி முத்திரை பதிக்கிறார். சில இடங்களில் அவரது பழைய பட கதாபாத்திரங்கள் நினைவில் வந்துபோகின்றன. எந்த சூழ்நிலையிலும் அதற்கேற்ப தன்னை உடனடியாக தற்காத்துக்கொள்ளும் அவரது பாத்திரம், ரசிக்கும் விதமாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், தன்னைக் காட்டிக் கொடுத்த இளைஞனைக் கொல்ல ஒப்புக்கொள்ளும் நயன்தாரா, சந்தேகத் துக்கு இடமான மற்றொருவனையும் கொல்லும்படி கும்பல் தலைவனைத் தூண்டுகிறார். அம்மாவின் உயிருக்குத் தரும் மதிப்பை, அவர் மற்றொரு உயிருக்குத் தர மறுப்பது, அந்த கதாபாத்திரத்தின் முழுமையின்மைக்கு ஓர் உதாரணம்.

யோகி பாபு போகிற போக்கில் தட்டிவிடும் ஒன்லைன் காமெடிகளைத் தாண்டி, கதையோடு ஒன்றி நிறைவாய் நிற்கிறார். கூடவே அவரோடு வரும் அன்புதாசனின் அலம்பலும் அமர்க்களம்.

நயன்தாராவின் அம்மா சரண்யா பொன்வண்ணன், தங்கை ஜாக்குலின், அப்பா ஆர்.எஸ்.சிவாஜி, போலீஸ் அதிகாரி சரவணன், வில்லன்கள் வினோத், மொட்டை ராஜேந்திரன், தீப்பெட்டி கணேசன், அறந்தாங்கி நிஷா என ஏராள நட்சத்திர பட்டாளங்கள். அத்தனை பேரையும் நிறைவாய் நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர்.

இரண்டாம் பாதியில், நயன்தாரா குடும்பத்துடன் வேனில் போதைப் பொருளை கடத்தும் காட்சிகள் நம்பகத்தன்மையற்று நகர்ந்தாலும் யோகிபாபு, அன்புவின் ரொமான்ஸ் முலாம் பூசிய நகைச்சுவை, படத்தை தாங்கிப் பிடிக்கிறது. படம் வெளியாகும் முன்பே பிரபலமான ‘கல்யாண வயசு’ பாடல், திரையிலும் கவர்கிறது. அதில் யோகி பாபுவின் சேஷ்டைகள் கைதட்டல் அள்ளுகின்றன. மற்ற பாடல்கள் பெரிதாக மனதில் தங்காவிட்டாலும், காட்சியோட்டத்தை நன்கு நகர்த்திச் செல்கின்றன. பின்னணி இசையிலும் கவர்கிறார் அனிருத். சிவக்குமார் விஜயன் ஒளிப்பதிவு படத்துக்கு பக்க பலம்.

வில்லனிடம் இருந்து நயன்தாரா தொடர்ந்து தப்புவது, 100 கிலோ போதைப் பொருளை சர்வசாதாரணமாக வேனில் கடத்துவது போல சில லாஜிக் மீறல்கள் இருந்தாலும், படத்தின் சின்னச் சின்ன சுவாரசியங்கள் அவற்றை மறக்கடிக்கின்றன.

போராட்டம் நிறைந்த, இக்கட்டான வாழ்க்கைச் சூழலை எதிர்கொள்ள மிதமிஞ்சிய வன்முறையை பெண் கதாபாத்திரங்கள் கையில் எடுக்கின்றன. இது அதிர்ச்சியை அளிக்காத வகையில் நகைச்சுவை முலாம் பூசி மெழுகி, தவறு என்று தெரியாத வகையில் நியாயப்படுத்திவிடுவது ஆபத்தான ரசனையின் தொடக்கம். அதை தவிர்த்துவிட்டுப் பார்த்தால், கோலமாவு கோகிலா - நிறைவான பொழுதுபோக்கு!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x