Published : 14 Aug 2018 10:55 AM
Last Updated : 14 Aug 2018 10:55 AM

நடிகர் சங்கக் கட்டிடத்தில் கருணாநிதி பயன்படுத்திய பேனாவை வைக்க விஷால் ஆசை

நடிகர் சங்கக் கட்டிடத்தில் கருணாநிதி பயன்படுத்திய பேனாவை வைக்க விஷால் ஆசை புதிதாக உருவாகி வரும் நடிகர் சங்கக் கட்டிடத்தில் கருணாநிதி பயன்படுத்திய பேனாவை வைக்க வேண்டும் என்று விஷால் தெரிவித்திருக்கிறார்.

தமிழ்த் திரையுலகினர் சார்பில் மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னையில் நேற்று (ஆகஸ்ட் 13) நடைபெற்றது. காமராஜர் அரங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் வைக்கப்பட்ட கருணாநிதியின் உருவப் படத்திற்குத் திரையுலகினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்வில் நடிகர் சங்கத் தலைவர் நாசர், விஷால், ராதாரவி, பொன்வண்ணன் உள்ளிட்ட நடிகர் சங்கத்தினர் மட்டுமன்றித் தயாரிப்பாளர் சங்கம், இயக்குநர்கள் சங்கம், பெப்சி அமைப்பு உள்ளிட்ட அமைப்புகளின் உறுப்பினர்களும் பங்கேற்றார்கள்.

இதில் ரஜினி மற்றும் திமுக செயல் தலைவர் ஸ்டாலினும் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் விஷால் பேசியதாவது:

இந்த நிகழ்ச்சி நடத்துவது எங்களுக்குக் கிடைத்த பாக்கியம் மற்றும் கடமை. ஸ்டாலின், ரஜினி உள்ளிட்டோர் வந்ததற்கு ரொம்ப நன்றி. ஒரு மாமனிதனுக்கு நாம் செலுத்தும் அஞ்சலி. கலைஞர் ஐயாவைப் பொறுத்தவரைக்கும் இறுதிவரை போராளியாகவே இருந்திருக்கிறார். நிறையப் பேர் இறந்தவுடன் அவர்கள் செய்த சாதனைகளை மறந்துவிடுவார்கள்.

ஆனால், கலைஞர் ஐயா பொறுத்தவரை இன்னும் எத்தனைத் தலைமுறைகள் வந்தாலும், அவருடைய பெயரை மறக்கவே முடியாது. பொதுப்பணி, அரசியல், சினிமா என அனைத்திலுமே எந்த வருடங்கள் ஆனாலும் அவரைப் போன்ற ஒரு மனிதனைப் பார்க்க முடியாது. இனிமேல் யாரும் அவரைப் போன்ற ஒரு சாதனையைச் செய்ய முடியாது.

இனிமேல் யார் அப்படியொரு சாதனையைச் செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. கலைஞர் ஐயா நிறைய நலத்திட்டங்கள் செய்திருக்கிறார், 5 முறை முதலமைச்சராக இருந்திருக்கிறார். இலவசமாக மின்சாரம் வழங்கிய இந்தியாவின் முதல் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் மட்டுமே. இன்றைக்கு அவர் இல்லாதது பெரிய இழப்பு என்று தமிழ் திரையுலகம் சார்பாக நினைக்கிறோம்.

ஒவ்வொரு வருடமும் அவர் இறந்த நாளில் அனைவரது மனதிலும் பெரிய பாதிப்பு இருந்து கொண்டே இருக்கும். அவரது குடும்பத்துக்கு அவர் இருந்த தமிழ் திரையுலகினர் சார்பாக நெஞ்சார்ந்த அஞ்சலியைச் செலுத்துகிறோம். நிறையப் பேர் நேரத்தை வீணடிக்கிறோம் என்று தெரியும். எனக்குத் தெரிந்து 4-5 மணி நேரம் மட்டுமே தூங்கி, மற்ற நேரங்களில் சமூகசேவையில் தான் ஈடுபட்டு இருக்கிறார்.

நாங்கள் கட்டி கொண்டிருக்கும் நடிகர் சங்கக் கட்டிடத்தில், அவர் எழுதிய பேனாவை ஒரு பொக்கிஷமாக வைக்க வேண்டும் என்பது ஆசை. ஏனென்றால் அந்தப் பேனாவால் கவிதை, உத்தரவு என அனைத்துமே எழுதியிருக்கிறது. வரும் தலைமுறையினர், நடிகர்கள் உள்ளிட்ட அனைவருக்குமே அதைக் காட்ட வேண்டும் என்பது மனமார்ந்த ஆசை.

இவ்வாறு நடிகர் விஷால் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x