Published : 01 Jun 2018 05:47 PM
Last Updated : 01 Jun 2018 05:47 PM

ட்விட்டரில் இணைந்தார் விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி, சமூக வலைதளமான ட்விட்டரில் இணைந்துள்ளார்.

சினிமா பிரபலங்களில் பெரும்பாலானவர்கள் சமூக வலைதளங்களான ட்விட்டரில் ஆக்டிவாக இருக்கிறார்கள். சினிமா குறித்த முக்கிய அறிவிப்புகள், அப்டேட்டுகள் எல்லாமே ட்விட்டரில் தான் அறிவிக்கப்படுகின்றன. எனவே, சினிமா மீது ஆர்வம் கொண்டவர்கள் ட்விட்டரில் பிரபலங்களைப் பின்தொடர்கின்றனர்.

ஆனால், விஜய் சேதுபதிக்கு ட்விட்டரில் கணக்கு இல்லை. இத்தனைக்கும் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் கணக்கு வைத்திருக்கிறார். ஆனால், ஏனோ ட்விட்டரில் மட்டும் கணக்கு தொடங்காமல் இருந்தார். இருந்தாலும், அவர் பெயரில் பல போலி கணக்குகள் இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றன.

இந்நிலையில், விஜய் சேதுபதியின் போலி ட்விட்டர் கணக்கில் இருந்து ரஜினிக்கு ஆதரவாக நேற்று ஒரு பதிவு வெளியானது. “தமிழ்நாட்டுக்கு யாராவது வந்து நல்லது செய்யட்டும் என்கிற எண்ணத்தைவிட, ரஜினியால் நல்லது எதுவும் நடந்துவிடக் கூடாதே என்கிற பதட்டம்தான் இங்கு நிறைய பேருக்கு. ரஜினி நல்ல மனிதர்” என அதில் கூறப்பட்டிருந்தது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களை, கடந்த புதன்கிழமை பார்க்கச் சென்றார் ரஜினிகாந்த். அன்று அவர் அளித்த பேட்டிகளில், ‘சமூக விரோதிகளின் ஊடுருவலே கலவரத்திற்கு காரணம். போராட்டம் நடைபெற்றால் தமிழகம் சுடுகாடாக மாறும்’ என்றார். இந்த பரபரப்பான சூழ்நிலையில் ரஜினிக்கு ஆதரவாக விஜய் சேதுபதி வெளியிட்டதாக இந்த ட்விட்டர் பதிவு ட்ரெண்டானது.

இந்நிலையில், அதிகாரபூர்வமாக ட்விட்டரில் இணைந்துள்ளார் விஜய் சேதுபதி. “ட்விட்டரில் நான் கூறியதாக நிறைய தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளன. அந்த கருத்துகள், என்னுடைய பெயரில் இயங்கும் போலிகளின் செயல் என்று தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளதோடு, போலி கணக்குகளையும் கொலாஜ் செய்து ‘ஃபேக் ஐடி’ என புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார் விஜய் சேதுபதி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x