Published : 15 May 2018 07:01 PM
Last Updated : 15 May 2018 07:01 PM

மூளை சோம்பேறித்தனமில்லாத முழுநேர எழுத்தாளனைக் காலம் கவர்ந்து கொண்டது: கவிஞர் வைரமுத்து இரங்கல்

‘கவிதையைவிடச் சந்தை மதிப்பு உரைநடைக்குத்தான் என்பதை உணர்ந்து தெளிந்த அறிவாளி பாலகுமாரன்’ என இரங்கல் தெரிவித்துள்ளார் கவிஞர் வைரமுத்து.

எழுத்துச் சித்தர் என்று எல்லோராலும் போற்றிக் கொண்டாடப்படும் எழுத்தாளர் பாலகுமாரன் இன்று காலமானார். நுரையீரல் நோய்த்தொற்று காரணமாக அவதிப்பட்டு வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 72. அவருடைய மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கவிஞர் வைரமுத்து, “பாலகுமாரனின் இழப்பு, எழுத்துலகத்தின்மீது விழுந்த இடி. என் வயிறு வரைக்கும் வருத்தம் கெட்டிப்பட்டுக் கிடக்கிறது. மூளை சோம்பேறித்தனமில்லாத முழுநேர எழுத்தாளனைக் காலம் கவர்ந்து கொண்டது. இரண்டு கைகளாலும் எழுதியவரைப் போல சிறுகதைகளையும் நாவல்களையும் சலிக்காமல் படைத்த சாதனையாளர் பாலகுமாரன். ‘பெண்களைப் புரிதல்’ என்ற ஒற்றை வரிக் கொள்கையை ஊடுசரடாக வைத்துக்கொண்டு அவர் படைத்த எழுத்து இன்னும் பல காலம் வாசிக்கப்படும்.

தொழில்நுட்பத்தின் வல்லாண்மையால் வாசிப்பை விட்டுத் தப்ப நினைத்த ஒரு தலைமுறையை, சட்டையைப் பிடித்து, ‘உட்கார்ந்து வாசி, பிறகு யோசி’ என்று உலுக்கியவர்களில் பாலகுமாரனும் முக்கியமானவர். சலிக்காத நடை அவரது நடை. கரையைத் தொட்டுக்கொண்டே நடக்கும் நதி மாதிரி, கவிதையைத் தொட்டுக்கொண்டே நடந்த நடை அவரது உரைநடை. தொடக்கத்தில் அவர் கவிதை எழுத வந்தவர் தான். கவிதையைவிடச் சந்தை மதிப்பு உள்ளது உரைநடை தான் என்பதை உணர்ந்து தெளிந்த அறிவாளி அவர்.

அவரது ‘இரும்புக் குதிரைகள்’, ‘மெர்க்குரிப் பூக்கள்’, ‘உடையார்’, ‘கங்கை கொண்ட சோழன்’, ‘கரையோர முதலைகள்’ போன்ற படைப்புகள் வாசகர்களை வசீகரித்தவை. கலைத்துறையிலும் புகழ்பெறவே ஆசைப்பட்டார் இந்தப் பாலகுமாரன். கலைத்துறைக்குச் சென்ற எழுத்தாளர்களில், தங்கள் அறிவுக்குரிய நாற்காலியை அடைந்தவர்கள் குறைவு. புதுமைப்பித்தன், பி.எஸ்.ராமையா, விந்தன், அகிலன் போன்ற பலரையும்கூட வெள்ளித் திரையுலகம் தள்ளியே வைத்திருந்தது. ஆனால், பாலகுமாரனுக்குத் திரையுலகம் வெற்றி கொடுத்தது. ‘சிந்து பைரவி’, ‘நாயகன்’, ‘காதலன்’, ‘பாட்ஷா’, ‘இது நம்ம ஆளு’ போன்ற படங்களில் அவரது பங்களிப்பு அற்புதமானது.

மரணத்தை வெல்ல வேண்டும் என்பதே விஞ்ஞானத்தின் நீண்ட நாள் விருப்பம். ஆனால், அந்தப் போட்டியில் விஞ்ஞானத்தைவிடக் கலைதான் வெற்றி பெற்றிருக்கிறது. தன் கலையை முன்வைத்து ஒரு படைப்பாளன் தன் மரணத்தை வென்றுவிடுகிறான். அந்த வகையில் பாலகுமாரன் தன் படைப்புகளால் மரணத்தை வென்று நீண்ட காலம் தமிழோடு வாழ்ந்திருப்பார். அவரது குடும்பத்தாரும், வாசகர் உலகமும் அமைதியுறுக என்று என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என இரங்கல் தெரிவித்துள்ளார் கவிஞர் வைரமுத்து.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x