Last Updated : 01 Mar, 2024 05:20 PM

 

Published : 01 Mar 2024 05:20 PM
Last Updated : 01 Mar 2024 05:20 PM

ஜோஷ்வா Review: நாயகியின் மீட்பர் நாயகன்... பார்வையாளர்களின் மீட்பர்?

நாயகியை வில்லன்களிடமிருந்து நாயகன் ‘இமைபோல்’ காப்பதே படத்தின் ஒன்லைன். ஆனால், அவர் பார்வையாளர்களை காப்பாற்றினாரா என்பது படத்தின் சொல்லப்படாத மற்றொரு ஒன்லைன்.

காசுக்காக கொலை செய்யும் கான்ட்ராக்ட் கில்லரான ஜோஷ்வா (வருண்) நிகழ்வு ஒன்றில் வழக்கறிஞர் குந்தவியை (ராஹீ) பார்க்கிறார். கண்டதும் காதல் வர, அவரிடம் சென்று ஆங்கிலத்தில் ஆட்டோகிராஃப் கேட்கிறார். அடுத்து என்ன... காதல் பாடல்கள்தான். குந்தவியைப் பொறுத்தவரை அவர் அமெரிக்க நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள போதைப்பொருள் கடத்தல் மன்னனுக்கு எதிரான வழக்கைக் கையாளுகிறார். இதனால் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் நிலவுகிறது.

காதலியின் உயிரைக் காப்பாற்ற பார்டிகார்டாக களமிறங்கும் ஜோஷ்வா அவரை கொலைகாரர்களிடமிருந்து எப்படி மீட்டார் என்பதை திருப்பங்களுடன் சொல்கிறது ‘ஜோஷ்வா - இமை போல் காக்க’.

மொத்தம் 46 ஆயிரத்து 521 சண்டைக் காட்சிகள். அதில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கலாம். மீதி பேர் காயமடைந்திருக்கக் கூடும். இதில் பார்வையாளர்களும் இருக்கலாம் என சொல்லப்படுகின்றது. பெரும்பாலான திரைநேரத்தை சண்டைக்காட்சிகள் ஆக்கிரமிக்க, மீதி நேரத்தில் காதலும், பாடல்களும் புகுந்துகொள்ள கதையை நடுவில் தேட வேண்டியுள்ளது. காதலையும், ஆக்‌ஷனையும் தனித்தனியே அழகியலாக காட்சிப்படுத்தும் இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இப்படத்தில் இரண்டையும் கலந்து கொடுத்துள்ளார்.

பரபரப்பான ஆக்‌ஷன் காட்சிகள் நடுவே திடீரென காதல் காட்சியும், ரொமான்ஸுக்கு நடுவே திடீரென வில்லன்கள் பாய்வதுமாக முழுமையின்றி நகரும் காட்சிகள் வெந்தும் வேகாதவை. கத்தியால் குத்துப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் ஜோஷ்வா “என்ன இப்டியே சாக விட்றாத, உன் மடியிலவேணா படுத்து உயிர விட்றேன்” என்கிறார். பொருந்தாத காட்சியும், வசனமும் வலிந்து திணிக்கப்பட்ட காதலுக்கு ஓர் உதாரணம்.

ஆங்கில வசனங்களும், சில காதல் காட்சிகள், அதிகமான க்ளோசப் ஷாட்ஸும் கவுதம் மேனன் டச். பின்னணி வாய்ஸ் ஓவர் மட்டும் மிஸ்ஸிங். தவிர, எலைட் நாயகியும், அந்த வாழ்வோடு பிணைந்த நாயகனும் நல்லவர்கள். ஆனால், படத்தின் கொடூர வில்லன்கள் எல்லாம் பட்டினம்பாக்கத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் பகுதியில் இருப்பவர்கள். ஆங்கிலம் தெரியாத, டீசன்சியில்லாதவர்கள் என்ற அரிய கருத்தாக்கங்களும் உண்டு.

தேர்ந்த ஆக்‌ஷனில் கவனம் பெறும் வருணின் நடிப்பு உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் காட்சிகளில் வறண்டிருப்பது இன்னும் அவர் செல்ல வேண்டிய தூரத்தை உணர்த்துகிறது. அழுகை, காதல், மீட்பர் ஆணைச் சார்ந்திருக்கும் கதாபாத்திர வடிவமைப்பில் புதுமையில்லை என்றாலும் நாயகி ராஹீ நடிப்பில் குறையில்லை. கிருஷ்ணா சில காட்சிகளில் வந்தாலும் வழக்கமான நடிப்பில் முத்திரை பதிக்கிறார். சிறப்புத் தோற்றத்தில் மன்சூர் அலிகான் வந்து செல்ல, திவ்ய தர்ஷினி கதாபாத்திரம் கோரும் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

கார்த்திக்கின் பின்னணி இசை சில இடங்களில் இரைச்சலாக இருந்தாலும், ஆக்‌ஷனில் விறுவிறுப்பைக் கூட்டுகிறது. பாடல்கள் நினைவில் நிற்கவில்லை. க்ளோசப், வித்தியாசமான கோணங்கள், முக பாவனையின் அசைவுக்கு ஏற்றபடி நகரும் கேமராவில் எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவு தனித்து தெரிகிறது. ஆண்டனியின் தேர்ந்த கட்ஸ் கச்சிதம்.

படத்துக்கு எந்த வகையிலும் பயனளிக்காத பின் கதை, வீணடிக்கப்பட்டிருக்கும் கிருஷ்ணா கதாபாத்திரம், சம்பிரதாயத்துக்காக எழுதப்பட்ட திருப்பம், அழுத்தமில்லாத காதல் என அவசர அவசரமாக தயார் செய்யப்பட்ட கல்லூரி கால கடைசி நேர ப்ராஜெக்ட் போல் உள்ளது ‘ஜோஷ்வா’.

இந்தப் படம் திரையிடப்பட்டுக் கொண்டிருக்கும் அதே திரையரங்கில் கவுதம் வாசுதேவ் மேனனின் ‘வாரணம் ஆயிரம்’ ஓடிக்கொண்டிருக்கலாம். இரண்டுமே ஜிவிஎம்மின் படங்கள்தான் என்பது காலம் செய்த கோலம்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x