Published : 17 Jan 2024 09:14 AM
Last Updated : 17 Jan 2024 09:14 AM

எம்ஜிஆர் பிறந்தநாள் | புகழ் குன்றா பொன்மனச் செம்மல் - நெகிழ்கிறார் நேர்முக உதவியாளர்

1980-ல் தமிழக முதல்வராக பதவிேயற்றேபாது மக்கள் கூட்டத்தைப் பார்த்து கையைசக்கிறார்.

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆேராடு பல படங்களில் நடித்தவர் பழம் பெரும் நடிகர் குண்டு கருப்பையா. இவரது மூத்த மகன் மகாலிங்கம். 1972-ம் ஆண்டு முதல் எம்.ஜி.ஆரின் இறுதிக் காலம் வைர அவரது நேர்முக உதவியாளராகப் பணியாற்றியவர். பிரபல நடிகர் குண்டுகல்யாணம் இவரது தம்பி. மற்றொரு சேகாதரரான சாமிநாதைனயும் எம்.ஜி.ஆரிடம் சொல்லி அதிமுக தலைமைக் கழகத்தில் காசாளராக சேர்த்துவிட்டிருக்கிறார். தற்போது சென்னை மாம்பலத்தில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தில் நிர்வாகியாகவும் அடையாறில் உள்ள ஜானகி எம்.ஜி.ஆர். மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அறக்கட்டளை இயக்குநராகவும் இருக்கிறார் சாமிநாதன்.

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள இல்லத்தில் எம்.ஜி.ஆரின் நேர்முக உதவியாளர் மகாலிங்கத்தை ‘இந்து தமிழ் திசை’க்காக சந்தித்தோம். பழைய நினைவுகளில் நெகிழ்ந்து அவர் கூறியதாவது:

எங்கள் குலதெய்வமே புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.தான். 1972-ம்ஆண்டு ஜூலை 26 அன்று என் தந்தைநடிகர் குண்டு கருப்பையா உடல் நலக்குறைவால் காலமானார். அவருடைய மருத்துவச் செலவுகளை ஏற்றுக் கொண்டதோடு, கடன்களையும்எம்.ஜி.ஆர். அடைத்தார். என் தந்தையின்ஈமச் சடங்கிற்கான முழு செலவுகளையும் ஏற்றுக் கொண்டார். எங்கள் குடும்பம் பெரியது. என் தங்கைகள் 3 பேர்.தம்பிகள் இருவர். என் தந்தை இறந்த பிறகு வறுமையில் இருந்த என் குடும்பத்தின் நிலை அறிந்து 1972 ஆகஸ்ட்8-ம் தேதி என்னைத் தன் நேர்முக உதவியாளராக எம்.ஜி.ஆர். சேர்த்துக்கொண்டார். தங்கைகள் திருமணம், என்தம்பி சாமிநாதன் திருமணம் மற்றும் என் திருமணத்தை அவரே முன்னின்று நடத்திவைத்து செலவுகளையும் ஏற்றுக்கொண்டார். இன்று என்னைப் போல எத்தனையோ குடும்பங்கள் அவரால் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

எம்.ஜி.ஆரிடம் உள்ள முக்கியமான குணம்... வயதில் எவ்வளவு சிறியவராக இருந்தாலும் ‘வாங்க.. போங்க’என்றுதான் அழைப்பார். இளையவர்களாக இருந்தாலும் அவர்கள் கும்பிடுவதற்காக காத்திருக்காமல், இவர் முந்திக் கொண்டு இருக்கையை விட்டு எழுந்துநின்று கும்பிடுவார். சினிமா, அரசியல் என்று ஏகப்பட்ட வேலைகள், நெருக்கடிகள் இருந்தாலும் கொஞ்சம்கூட டென்ஷனே ஆகாமல் திட்டமிட்டு செயலாற்றுவார்.

குறிப்பிட வேண்டிய இன்னொன்று... எம்.ஜி.ஆரிடம் உள்ள ஈகைக் குணம், தாராள மனம். அவரிடம் உதவி என்று கேட்டு வந்தவர்கள் வெறும் கையோடு திரும்பிச் சென்றது இல்லை. ஒருமுறை கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த சற்று வயதான ஏழ்மை நிலையில் இருந்த ஆசிரியர் ஒருவர் எம்.ஜி.ஆரை சந்தித்துதன் மகனுக்கு மெடிக்கல் சீட் வேண்டுமென்று கேட்டார். அவரது மகன் நல்லமார்க் வாங்கியிருந்தார். ஆசிரியரிடம் எம்.ஜி.ஆர், ‘மெடிக்கல் சீட் கிடைத்தாலும் 5 ஆண்டுகள் படிக்க வைக்க வேண்டும். அதிகம் செலவாகும். அதற்கு என்னசெய்வீர்கள்? ’ என்று கேட்க, ‘நான் குடியிருக்கும் பழைய பூர்வீக வீட்டை விற்றுஎன் மகனைப் படிக்க வைப்பேன்’ என்றார் ஆசிரியர். ‘வீட்டையும் விற்றுவிட்டு ஆசிரியர் வேலையில் இருந்தும் ஓய்வு பெற்றுவிட்டால் கடைசி காலத்தில் என்ன செய்வீர்கள்’ என்றஎம்.ஜி.ஆரின் கேள்விக்கு அவரிடம் பதில் இல்லாமல் திகைத்தார்.

அவரது பையன் கெட்டிக்காரன்.எம்.ஜி.ஆரிடம், ‘சார். எனக்கு டைப்ரைட்டிங் தெரியும். படிக்கிற நேரம் போகபார்ட் டைம் வேலை செய்து என்அப்பா, அம்மாவைப் பார்த்துப்பேன். என் படிப்பையும் கவனிச்சுப்பேன்’ என்று உறுதியான குரலில் சொல்ல, அவனையே சில நொடிகள் எம்.ஜி.ஆர்.உற்றுப் பார்த்தார். பிறகு ஆசிரியரிடம் ‘உங்க மகனுக்கு சீட் கிடைக்கும். கவலைப்படாம வெளியேபோய் காத்திருங்க’ என்று அனுப்பிவிட்டார். அவர்நகர்ந்ததும் எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் நிர்வாகியும் தனது அண்ணன் பெரியவர்சக்ரபாணியின் மைத்துனருமான குஞ்சப்பனை அழைத்து ஆக வேண்டிய காரியங்களை பார்க்கச் சொன்னார்.

அதோடு நிற்கவில்லை. அந்த ஆசிரியரின் அட்ரஸை வாங்கிக் கொண்டு உடனடியாக செலவுக்கு 5,000 ரூபாய் கொடுக்கச் சொன்னதோடு விடாமல், ‘அந்தப் பையனோட படிப்பு,சாப்பாடு செலவு எல்லாம் என்னுடையது. மாதா மாதம் தவறாம பணம்அனுப்பிடுங்க. விஷயம் தெரிஞ்சு அந்தஆசிரியர் எனக்கு நன்றி சொல்ல வருவார். பையன் டாக்டர் ஆனதும் வந்து பார்க்கலாம்னு சொல்லி அனுப்பிடுங்க’ என்று எம்.ஜி.ஆர். உத்தரவிட்டார். இந்தத் தகவலைக் கேள்விப்பட்டு ஆசிரியரின் குடும்பம் ஆனந்தக் கண்ணீருடன் எம்.ஜி.ஆர். இருந்த அறையை நோக்கிக் கும்பிட்டது.

மகாலிங்கம் திருமணத்தை நடத்தி வைத்தபோது... உடன் ஜானகி அம்மையார்,
ம.பொ.சி., ஹெச்.வி.ஹண்டே, கே.ஏ.கிருஷ்ணசாமி.

பொதுவாக, பிறருக்கு உதவி செய்வது பெரிதல்ல. தன்னைக் கடுமையாக விமர்சிப்பவர்களுக்கும் கூட எம்.ஜி.ஆர். உதவுவார் என்பதுதான் அவரின் தனிச்சிறப்பு. 1974-ம் ஆண்டு.‘அலை ஓசை’ நாளிதழில் எம்.ஜி.ஆர். பற்றி கவியரசு கண்ணதாசன் கடுமையாக கட்டுரைகள் எழுதிவந்தார். தனிப்பட்ட முறையில்கூட தாக்கி எழுதினார். அதைப் படிக்கும்போது எனக்கு கோபமாக வரும். சந்தடி சாக்கில் என்னையும் கவிஞர் சாடியிருந்தார். ‘மகாலிங்கம் என்ற மலையைக் கடந்தால்தான் எம்.ஜி.ஆர். என்ற மனிதரை தரிசிக்க முடியும்’ என்று எழுதினார்.

என்னதான் தாக்கி எழுதினாலும் பொருளாதார நெருக்கடி என்றால்எம்.ஜி.ஆருக்கு கவிஞர் போன் செய்து பணம் கேட்பார். இவரும் உடனடியாக அனுப்பிவைப்பார். ஒருமுறை கண்ணதாசனிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. இப்படி எல்லாம் தாக்கி எழுதுகிறாரே என்ற கோபத்தில் அவரிடம் ‘சின்னவர்(எம்.ஜி.ஆர்) இல்லை’ என்று சொன்னேன். ‘வந்தால் நான் (கண்ணதாசன்) பேசினேன் என்று சொல்’ என்றார். எனக்கு திருப்தி என்றாலும் அது நெடுநேரம் நீடிக்கவில்லை.

மாடியில் இருந்த எம்.ஜி.ஆர். என்னை அழைத்தார். ‘யார் போன் செய்தது? ’ என்று கேட்டார். நடந்த விவரங்களைச் சொன்னேன். என்னை கடுமையாக கோபித்துக் கொண்டார். ‘அழைத்தது கவியரசர் கண்ணதாசன். அவரிடம் ஏன் பொய் சொன்னாய்? ’ என்றுமுகம் சிவக்கக் கேட்டு, கண்ணதாசனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ‘நீங்கள் எழுதிய கட்டுரைகளை படித்ததால் மகாலிங்கம் கோபத்தில் பொய் சொல்லிவிட்டான். அதற்காகநான் வருந்துகிறேன்’ என்று சொன்னார். உடனடியாக, கண்ணதாசன் கேட்ட தொகையையும் அனுப்பிவைத்தார். தமிழக முதல்வரான பிறகு கண்ணதாசனை அரசவைக் கவிஞராகவும் எம்.ஜி.ஆர். நியமித்தார். எத்தனை பேருக்கு இந்த மனம் வரும்?

எம்.ஜி.ஆருக்கு ‘பொன்மனச் செம்மல்’ பட்டத்தை திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் வழங்கினார். அந்தப் பட்டத்துக்கு பொருத்தமானவராக இருந்ததால்தான்எம்.ஜி.ஆர். பெயர் இன்றும் குன்றாத புகழோடு விளங்குகிறது.

நிஜத்திலும் அவர் ‘ஹீரோ’! -“1974-ம் ஆண்டு பிப்ரவரியில் கோவை மேற்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. வேனில் நின்றபடி எம்.ஜி.ஆர். பிரசாரம் செய்து கொண்டிருந்தார். அவரைப் பார்க்க கூட்டம் முண்டியடித்தது. தன் குழந்தைக்கு பெயர் சூட்ட ஆசைப்பட்ட தொண்டர் ஒருவரால் எம்.ஜி.ஆரை நெருங்க முடியவில்லை. இப்போது நினைத்தாலும் மனம் பதைக்கிறது. ‘தலைவரே..’ என்று கத்தியபடி தன் கையில் இருந்த குழந்தையை எம்.ஜி.ஆரை நோக்கி வீசினார் அந்தத் தொண்டர். சுதாரித்துக் கொண்ட எம்.ஜி.ஆர்., குழந்தையை லாவகமாகப் பிடித்துக் கொண்டார். அந்தத் தொண்டரை அழைத்து ‘குழந்தையின் உயிரோடு விளையாடுவதா?’ என்று கோபித்துக் கொண்டார். பின்னர், குழந்தைக்கு பெயர் சூட்டி பணமும் கொடுத்து அனுப்பினார். நிஜத்திலும்எம்.ஜி.ஆர். ‘ஹீரோ’தான்!” என்றார் மகாலிங்கம்.

இன்று எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்த நாள்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x