Published : 18 Jan 2018 09:22 AM
Last Updated : 18 Jan 2018 09:22 AM

உறுப்பினர்களை சேர்க்க ரசிகர்களுக்கு உத்தரவு: புதுக்கட்சி தொடங்குவதில் கமல், ரஜினி மும்முரம்

நடிகர் ரஜினிகாந்த், தனது கட்சி யின் தொடக்க மாநாட்டை ஏப்ரல் 14-ம் தேதி மதுரையில் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதற்கு முன்பாக தமிழகம் முழுவதும் 1.5 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

‘2.0’, ‘காலா’ படப்பிடிப்பு வேலைகளை முடித்துவிட்டு, கடந்த மாதம் 2-வது கட்டமாக ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த், தனது அரசியல் பிரவேச அறிவிப்பை அதிகாரபூர்வமாக வெளியிட்டார். சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு தனிக்கட்சித் தொடங்கி, 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவோம் என்றும் அறிவித்தார்.

அதற்கு முன்பாக தனது ரசிகர் மன்றங்களை இணைப்பது, புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுமாறு மன்ற நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார். புதிய உறுப்பினர் சேர்க்கைக்காக தனி இணையதளத்தையும் அவர் உருவாக்கியுள்ளார்.

கமல் சுற்றுப்பயணம்

ரஜினியின் அரசியல் கட்சி தொடக்கப் பணிகள் விறுவிறுப்பு அடைந்துள்ள நிலையில், நடிகர் கமல்ஹாசனும் தனது அரசியல் பயணத்தை அறிவித்துள்ளார்.

வரும் பிப்ரவரி 21-ம் தேதி கட்சி யின் பெயரை அறிவித்துவிட்டு, தனது சொந்த மாவட்டமான ராமநாதபுரத்தில் இருந்து மக்களை சந்திக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

முதல்கட்டமாக மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட மக்களைச் சந்திக்க உள்ளதாகவும் ‘மக்களுடனான இந்தச் சந்திப்பு புரட்சி முழக்கமோ, கவர்ச்சிக் கழகமோ அல்ல. என் புரிதல். எனக் கான கல்வி’ என்றும் அவர் அறிக்கையில் கூறியிருக்கிறார்.

இந்நிலையில், ரஜினியின் கட்சிப் பெயர் அறிவிப்பு எப்போது இருக்கும் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் விசாரித்தபோது, அவர்கள் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் ரஜினி மக் கள் மன்ற உறுப்பினர் சேர்க்கைப் பணி தீவிரமாக நடக்கிறது. இதுவரை 30 லட்சத்துக்கும் அதிக உறுப்பினர் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் ரசிகர்கள். ரசிகர் அல்லாத பொதுமக்களையும் உறுப்பினராக்கும் பணி யில் மன்றத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

சில இடங்களில் இணையம் வழியே உறுப்பினர்கள் சேர்க்கை சாத்தியமானதாக இல்லை. அந்த இடங்களில் எல்லாம் படிவம் மூலம் உறுப்பினர் சேர்க்கை நடக்கிறது.

முதல்கட்டமாக முக்கிய ஊர்களில் மட்டுமே நடந்துவந்த உறுப்பினர் சேர்க்கையை பொங்கல் பண்டிகைக்காக சில தினங்கள் நிறுத்தி வைத்திருந்தோம். இந்த வாரம் முதல் மன்றத்தின் மாவட்டப் பொறுப்பாளர்களும் நிர்வாகிகளும் நேரடியாக களத்தில் இறங் குமாறு ரஜினியே உத்தர விட்டுள்ளார்.

மதுரையில் மாநாடு?

தனது மன்றத்தில் முதல்கட்ட மாக 1.5 கோடி உறுப்பினர்களையாவது சேர்க்க வேண்டும் என ரஜினி கருதுகிறார். தற்போது அதில்தான் அவரது கவனம் உள்ளது. மேலும், கட்சியைத் தொடங்கும்போது பிரம்மாண்ட அரசியல் மாநாடு நடத்தவும் அவர் விரும்புகிறார்.

அந்த மாநாட்டை மதுரையில் நடத்தலாம் என்பதும் அவரது விருப்பமாக உள்ளது. மாநாட்டுக்கு யார், யாரை அழைப்பது, கட்சிக் கொள்கைகள், சட்டதிட்டங்கள் குறித்த ஆலோசனைகளில் அவர் ஈடுபட்டுள்ளார்.

இதற்கிடையே, மார்ச் இறுதியில் முன்பே திட்டமிட்ட இமயமலை பயணம் இருக்கும். அங்கிருந்து திரும்பியதும் ஏப்ரல் 14-ம் தேதி அரசியல் மாநாட்டை நடத்தக் கூடும். அந்த மாநாட்டில்தான் கட்சி யின் பெயர், கொள்கைகள், செயல் திட்டங்கள் உள்ளிட்ட அறிவிப்பு கள் இருக்கும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x