Last Updated : 21 Nov, 2017 09:37 AM

 

Published : 21 Nov 2017 09:37 AM
Last Updated : 21 Nov 2017 09:37 AM

பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களை வரவேற்க வேண்டும்: ‘யுனிசெஃப்’ அமைப்பின் தூதர் த்ரிஷா விருப்பம்

கு

ழந்தைகள் மேம்பாட்டுக் கான ஐ.நா. அமைப்பான ‘யுனிசெஃப்’பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா அறிவிக்கப்பட்டுள்ளார். குழந்தை தொழிலாளர் முறை, குழந்தை திருமணம், குழந்தைகள் மீதான வன்முறை ஆகியவற்றை ஒழிப்பது மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டைப் போக்குவது ஆகிய பணிகளில் யுனிசெஃப் அமைப்பின் விளம்பர தூதராக அவர் செயல்படுவார். அதற்கான அறிமுக நிகழ்ச்சி, உலக குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சென்னையில் நேற்று நடந்தது.

நடிகை த்ரிஷாவுக்கு ‘யுனிசெஃப்’ அமைப்பின் நல்லெண்ண தூதர் அந்தஸ்தை தமிழ்நாடு, கேரளாவுக்கான யுனிசெஃப் தலைவர் ஜோப் சக்காரியா வழங்கினார். தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் எம்.பி.நிர்மலா, யுனிசெஃப் தொடர்பு பிரிவு நிபுணர் சுகாட்டா ராய் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் த்ரிஷா கூறியதாவது:

பள்ளிகளில் பாடம் கற்பித்தலைத் தவிர குழந்தைகளுக்கு வேறு என்ன வசதிகள் இருக்கவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

நான் ஒரு விளையாட்டுப் பிரியை. பள்ளிகளில் விளையாட்டு மற்றும் படிப்புசாரா மற்ற செயல்களுக்கும் முக்கியத்துவம் தரவேண்டும். பள்ளிகளில் கட்டாயம் நூலகம் இருக்க வேண்டும்.

குழந்தைகள் பாதுகாப்பில் இப்போது உள்ள சட்டங்கள் பற்றி?

குழந்தைகளைப் பாதுகாக்க இப்போது பல சட்டங்கள் இருக்கின்றன. ஏற்கெனவே உள்ள சட்டங்களை மேலும் கடுமையானதாக மாற்றவேண்டும். அதுதான் இப்போதைய தேவை.

திரைப்படக் காதல் காட்சிகள், குழந்தைகளைத் தவறான பாதையில் அழைத்துச் செல்கிறதா?

திரைப்படம் என்பது நிழல். மக்கள் திரையில் பார்க்கும் அனைத்தும் கற்பனை. அதனால், திரைப்படத்தை வெறும் கேளிக்கையாக மட்டுமே மக்கள் பார்க்க வேண்டும். நிஜ வாழ்க்கை என்பது வேறு. இதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

இருந்தாலும், திரைப்படக் காட்சிகள் குழந்தைகளிடம் தாக்கத்தை ஏற்படுத்துகிறதே..

அதற்குதான் தணிக்கைக் குழு இருக்கிறது. திரையிடப்படும் படங்களை ‘யு’, ‘யு/ஏ’, ‘ஏ’ என்று பிரித்து சான்றளிக்கிறது. ‘யு’ சான்றிதழ் பெற்ற படங்களுக்கு மட்டுமே குழந்தைகளை அனுமதிக்க வேண்டும். இதை திரையரங்குகள் சரியாக முறைப்படுத்தினால் இதுபோன்ற பிரச்சினைகள் வராது.

இதற்கு முன்பு த்ரிஷா விலங்குகள் நல ஆர்வலராக அடையாளம் காணப்பட்டார். இப்போது குழந்தைகள் நல அமைப்பின் நட்சத்திர தூதர். இதை எப்படி பார்க்கிறீர்கள்? அரசியலுக்கு வரும் ஆர்வம் உண்டா?

நான் விலங்குகள் நலப் பணிகளில் கவனம் செலுத்தியபோது, ‘ஏன் குழந்தைகளுக்காக எதுவும் செய்வதில்லை?’ என்று கேட்டனர். இப்போது, குழந்தைகள் நல அமைப்பில் இணைந்தவுடன், ‘பெண்களுக்கு எதுவும் செய்யவில்லையா?’ என்கின்றனர். எல்லாவற்றுக்கும் காலம் வரும். யுனிசெஃப்பில் இணைந்திருப்பீர்களா? என்று 2 ஆண்டுகளுக்கு முன்பு கேட்டிருந்தால், என்ன பதில் சொல்லி இருப்பேன் என்று தெரியவில்லை. இந்தப் பணிகளை மேற்கொள்வதற்கு இப்போது நேரமும், வாய்ப்பும் வந்திருக்கிறது. சமூக நலனில் அக்கறை கொண்டால் கண்டிப்பாக அரசியலுக்கு வரவேண்டும் என்று இல்லை. எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை.

யுனிசெஃப் த்ரிஷாவைத் தேர்ந்தடுக்க என்ன காரணம்?

(சிரித்துக்கொண்டே) அதற்கு யுனிசெஃப் அதிகாரிதான் பதில் அளிக்க வேண்டும். சீரியஸாக பதில் கூறவேண்டும் என்றால், நான் இதுபோன்ற சமூக நலன் சார்ந்த பணிகளில் அதிகம் ஈடுபடுவதால், என்னை அழைத்திருக் கலாம்.

குழந்தைகளை மையப்படுத்தும் படங்களில் நடிப்பீர்களா? ‘அறம்’ படம் பற்றி உங்கள் கருத்து?

குழந்தைகளை மையப்படுத்தும் படங்களில் நிச்சயம் நடிப்பேன். நான் இன்னும் ‘அறம்’ படத்தைப் பார்க்கவில்லை. படம் நன்றாக இருப்பதாகக் கூறுகிறார்கள். பெண்களுக்கு முன்னுரிமை, முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் கட்டாயம் வரவேற்கப்பட வேண்டும்.

யுனிசெஃப் தூதராக உங்கள் அடுத்த பணி என்ன?

மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுதான் என் முதல் பணி. அனைவருக்கும், அதிலும் குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு கல்வி அறிவு கட்டாயம் தேவை. இவை இரண்டும் என் முதல் கடமை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x