Last Updated : 28 Oct, 2017 12:12 PM

 

Published : 28 Oct 2017 12:12 PM
Last Updated : 28 Oct 2017 12:12 PM

ரஜினிக்காக 11 வருஷம் காத்திருந்தேன்: 2.O இசை வெளியீட்டில் ஷங்கர்

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் '2.0'. துபாயில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா BURJ PARK-ல் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் ஒட்டுமொத்த '2.0' படக்குழுவினரும் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் இயக்குநர் ஷங்கர் பேசியதாவது:

ஓர் இந்தியப் படத்திற்கு 300 கோடி, 350 கோடி என முதலீடு செய்ய யாருமே தயாராக இருக்க மாட்டார்கள். ஆனால், தயாரிப்பாளர் சுபாஷ்கரன் இக்கதையைக் கேட்டு பிடித்ததினாலும், தமிழ் சினிமாவின் மீதுள்ள காதலாலும் தயாரித்திருக்கிறார். அதற்கு முதலில் நன்றி.

'2.0' திரைப்படம் 'எந்திரன்' படத்தின் தொடர்ச்சி அல்ல. இது வேறொரு கதைக் களம். உலகளாவிய ஒரு கருத்தைச் சொல்லியிருக்கிறேன். நமக்கு பரிச்சயமான டாக்டர் வசீகரன், சிட்டி, 2.0 போன்றவர்கள் எல்லாம் இக்கதையில் வருவார்கள். இப்படி நடந்தால் எப்படியிருக்கும் என்ற கற்பனையே '2.0'. அக்கற்பனை என்னை எங்கெல்லாம் இழுத்துக் கொண்டு போனதோ அங்கெல்லாம் பயணித்திருக்கிறேன். அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்.

மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது கூட, டெல்லியில் 47 டிகிரி வெயிலில், 12 கிலோ எடையுள்ள உடையை போட்டுக் கொண்டு நடித்துக் கொடுத்த ரஜினி சாருக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும். பேட்மேன், சூப்பர்மேன் மாதிரியான உடை அது. இந்திய சினிமாவில் அந்த மாதிரி உடைகள் வந்ததில்லை.

அதே போன்று திருக்கழுக்குன்றத்தில் பெரிய பள்ளம் தோண்டி, அனிமேட்ரானிக்ஸ் காட்சிகளுக்காக 4 மணி நேரம் மண்ணிற்குள் மூடி, ப்ராக்ஸ் வைத்து நடிக்க வேண்டும். அதையும் பிரமாதமாக செய்துக் கொடுத்தார். இவ்வளவு வருடங்கள் நடித்த பிறகும் கூட, இப்போதும் என்ன காட்சிகள் எடுத்தாலும், அக்காட்சியில் இதுவரை செய்யாத மாதிரி நடிக்க வேண்டும் என்று மெனக்கிடுவது ரஜினி சாரிடம் பாராட்டுக்குரிய விஷயம்.

ஒருநாள் கூட சாதாரணமாக வந்தோமா, மேக்கப் போட்டோமா, நடித்தோமா என்பது அக்‌ஷய்குமாருக்குக்  கிடையாது. தினமும் 4 மணி நேரம் மேக்கப் போட வேண்டும். அதற்கு மேல் எடை அதிகமான உடையைப் போட்டுக் கொண்டு வெயிலில் நடித்தார். அவர் இதுவரை நடித்த படங்களின் கஷ்டத்தை, ஒரே படத்தில் பட்டிருக்கிறார். அதை படம் பார்க்கும் போது உணர்வீர்கள்.

படத்தில் 3 பாடல்கள் என்றாலும், அதற்காக ஏ.ஆர்.ரஹ்மான் கடுமையாக உழைத்திருக்கிறார். பாடல்களைத் தாண்டி பின்னணி இசையில் அவருக்கு நிறைய பணிகள் இருக்கின்றன. இசை மட்டுமன்றி, படப்பிடிப்புக்குப் பிறகு நடைபெறும் பணிகளில் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, ரசூல் பூக்குட்டி என அனைவருக்குமே சவாலான பணி காத்திருக்கிறது. படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பிலிருந்து கிராபிக்ஸ் பணிகள் இப்போது வரை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. நான் நினைத்த மாதிரி கொண்டுவர வேண்டும் என்று கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதனைத் தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி, "’முதல்வன்’ சமயத்திலிருந்தே ரஜினி சாரோடு படம் பண்ண வேண்டும் என்று பேசிக் கொண்டே இருந்துள்ளீர்கள். தற்போது அவரோடு இணைந்து 3 படம் செய்துவிட்டீர்கள் எப்படி இது சாத்தியம்?" என்று ஷங்கரிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு ஷங்கர், "சூப்பர் ஸ்டாரை அவ்வளவு எளிதில் நெருங்கிவிட முடியுமா... படம் பண்ணலாம் என்று பேசிப் பேசி 11 வருடங்கள் கழித்து தான் சாத்தியமானது. 3 படம் செய்து விட்டேன். கதை விவாதத்திற்காக கூர்க்கில் இருக்கும் போது, ஒரு குடும்பத்தினர் வந்தார்கள். "நீங்கள் 10 வருடம் முன்பு பிறந்திருக்கக் கூடாதா" என்றார்கள். "ஏன்?" என்றவுடன் "இன்னொரு 3 படம் ரஜினி சாரோடு செய்திருப்பீர்களே" என்றார்கள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x