Published : 05 Oct 2017 08:16 AM
Last Updated : 05 Oct 2017 08:16 AM

ரஜினியின் அரசியல் பிரவேசம்: இமயமலை பயணத்துக்குப் பின் தெரியவரும்

தமிழ்நாடு அரசு எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நிலைக்குமா? அல்லது பாஜகவின் புதிய திட்டங்களின்படி ஆட்சி கலைக்கப்பட்டு, புதிய கூட்டணியுடன் தேர்தல் வருமா என்கிற பரபரப்பான பேச்சு நிலவிக் கொண்டிருக் கின்றன.

‘அதிமுகவில் தலைமையேற்கப் போவது யார்? தினகரன் அணியா? எடப்பாடி பழனி சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணியா’ என்ற பேச்சு ஒரு பக்கம் இருக்க, ‘கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசங்கள் நிகழுமா?’ என்ற எதிர்பார்ப்பும் கடுமையாக நிலவுகின்றன.

சிவாஜிகணேசன் மணிமண்டபத் திறப்பு விழாவின்போது ரஜினி நிகழ்த்திய உரை, பல விதமான ஊகங்களுக்கு பதில் அளிக் கும் வகையில் இருந்தது. அதே சமயம் கமல்ஹாசனின் கடவுள் மறுப்பு கொள்கை தமிழக அரசியலுக்கு சரிவராது என்பதையே ரஜினியின் பேச்சு உணர்த்தியதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். பட்டையாக விபூதி அணிந்த சிவாஜிகணேசன் பகுத்தறிவு பரப்பும் ‘பராசக்தி’ படத்தில் கதாநாயகனாக தோன்றி புகழ்பெற்றது குறித்து ரஜினி உள் அர்த்தத்தோடுதான் அந்த மேடையில் குறிப்பிட்டார் என்றும் கருதுகிறார்கள். பகுத்தறிவு வாதத்துக்கும், ஆன்மிக அடையாளத்துக் கும் இடையிலான இரு அடையாளங்களாகவே கமல்ஹாசனையும் தன்னையும் ரஜினி அங்கே அடையாளப்படுத்தினார் என்றும் இதற்கு சிலர் அர்த்தம் சொல்கிறார்கள்.

‘‘எப்போது அரசியலுக்கு வருவேன் என்பது குறித்து கமல்ஹாசன் திடமான கருத்து எதையும் சொல்லவில்லை என்றா லும் ரஜினியை அந்த அரசியல் திட்டத்துக் குள் அவர் இழுக்க முயற்சிப்பது நன்றாகத் தெரிகிறது’’ என்று கூறும் முக்கிய திரைப் பிரமுகர்கள், ‘‘கமல்ஹாசன் அறிவுஜீவி தடத் தின் அடையாளம். ஆனால் ரஜினி மாஸ். இந்நிலையில் ரஜினி நிச்சயம் கமலுக்கு கீழே இயங்க விரும்ப மாட்டார்’’ என்பதும் அவர்களின் கருத்து.

ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து என்ன நினைக்கிறார் என்று கமல் மற்றும் ரஜினி இருவரிடமும் நெருங்கி பழகிய மிக மூத்த நடிகர் ஒருவர் கூறும்போது, ‘‘ரஜினி யின் அறிவு எப்போதுமே ஆன்மிகத்துக்குள் அடங்கியது.

சொந்த அறிவை விட ஆன்மிக ரீதியான வழிகாட்டுதலே சரியான வழி முறை யாக இருக்கும் என ரஜினி நினைப்பவர். ‘2.0’ இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சிக்குப் பிறகு இமையமலைக்குச் சென்று தனது குருநாதர் பாபாவின் அருளாசிப் பெற்றுத் திரும்பிய பிறகு, தனது அரசியல் பிரவேசம் குறித்து முடிவெடுக்கவுள்ளார்’’ என்றார்.

இத்தனை ஆண்டுகளாக ரஜினி பற்றி வெளியான பூச்சாண்டி காட்டும் அனுமானம் அல்ல, இது. 70 வயதை நெருங்கும் நிலையில் தனக்கென தனிக்கட்சி ஆரம்பித் தால் அதை எவ்வளவு காலத்துக்கு வெற்றி கரமாக நிர்வகிக்க முடியும்? அதற்கான உடனடி வரவேற்பு கிடைக்குமா என்பது பற்றி எல்லாம் பெங்களூரு, ஹைதராபாத்தில் உள்ள தனது நீண்ட கால நண்பர்களிடம் அவர் விவாதித்து வருகிறார். இந்நிலையில் இமயமலை பாபாவின் அருளாசி தன் அரசியல் நிலைப்பாட்டைத் தெளிவாக்கும் என்றும் அவர் நம்புகிறார்.

அதேபோல தற்போதைய தமிழக அரசு கலைக்கப்படும் நிலையில், தாம் யாருடனும் கூட்டு சேராமல், தனிப்பட்ட முறையில் கட்சி ஆரம்பித்து மக்களை சந்திப்பதிலும் உறுதியான முடிவுக்கு ரஜினிகாந்த் வருவார் என்றும் அந்த மூத்த திரைப்பட பிரமுகர் தெரிவிக்கிறார்.

இவை அனைத்துக்கும் வரும் நவம்பரில் விடை தெரியும் எனத் தெரிகிறது. இப்போது இல்லையென்றால், இனி எப்போதுமே அரசியல் இல்லை என்ற எண்ணத்தில் இருக்கிறார் ரஜினி. அந்த அளவுக்கு இம்முறை உறுதியாக இருக்கிறார். அதேபோல, தன்னை மறைமுகமாக சீண்டும் கமல்ஹாசனுக்கு இமயமலைக்குச் சென்று வந்த பின் தனது நடவடிக்கையால் பதில் கொடுப்பார்’’ என்றும் ரஜினியின் நீண்ட கால நண்பர்கள் கூறுகிறார்கள்.

இமயமலை பயணத் திட்டங்கள் குறித்து அந்த நண்பர்களுடன் ரஜினி பேசிக்கொண்டிருக்கிறார். கமல் வழியா? தனி வழியா? நவம்பரில் முடிவு தெரியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x