நடிகை ஸ்ரீதேவியின் சென்னை சொத்துக்கு உரிமை கோரிய வழக்கு - மத்தியஸ்​தம் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

நடிகை ஸ்ரீதேவியின் சென்னை சொத்துக்கு உரிமை கோரிய வழக்கு - மத்தியஸ்​தம் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு
Updated on
2 min read

நடிகை ஸ்ரீதேவிக்கு சொந்​த​மாக சென்னை கிழக்கு கடற்​கரை சாலை​யில் உள்ள சொத்​துக்கு உரிமை கோரி எம்​.சி.சிவ​காமி மற்றும் எம்​.சி.நட​ராஜன் ஆகியோர் தொடர்ந்த மேல்​முறை​யீட்டு வழக்​கில் நோட்​டீஸ் பிறப்​பித்த உச்​சநீ​தி​மன்​றம், இந்த விவகாரத்தை சமரச பேச்​சு​வார்த்தை மூலம் தீர்க்க, ஓய்வு பெற்ற உயர்​நீ​தி​மன்ற நீதிப​தியை நியமித்து உத்​தர​விட்​டுள்​ளது.

மறைந்த நடிகை ஸ்ரீதே​வி கடந்த 1988-ம் ஆண்டு சென்னை கிழக்கு கடற்​கரை சாலை​யில் 2.7 ஏக்​கர் நிலத்​தை, சம்​பந்த முதலி​யார் என்​பவரது குடும்​பத்​தினரிடம் இருந்து விலைக்கு வாங்கியுள்ளார். கடந்த 37 ஆண்​டு​களாக அந்த சொத்தை ஸ்ரீதேவியின் குடும்​பத்​தினர் அனுப​வித்து வரும் நிலை​யில், சம்பந்த முதலி​யார் மகன் சந்​திரசேகரனின் மகன் நடராஜன் மற்றும் மகள் சிவ​காமி ஆகியோர் அந்த சொத்​துக்கு உரிமை கோரி, செங்​கல்​பட்டு கூடு​தல் அமர்வு நீதி​மன்​றத்​தில் உரிமையியல் வழக்கு தொடர்ந்​தனர்.

இந்த வழக்கை நிராகரிக்​கக் கோரி ஸ்ரீதே​வி​யின் கணவர் போனி கபூர், அவரது மகள்​கள் ஜான்வி கபூர், குஷி கபூர் ஆகியோர் செங்கல்​பட்டு நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​தனர். ஆனால், முழு​மை​யான விசா​ரணைக்​குப் பின்​னரே சொத்​தின் உரிமை குறித்து முடி​வெடுக்க முடி​யும் என்று கூறி மனு​வைத் தள்​ளு​படி செய்து செங்​கல்​பட்டு நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது.

இந்த உத்​தரவை எதிர்த்து போனி கபூர், ஜான்வி கபூர், குஷி கபூர் ஆகியோர் சென்னை உயர் நீ​தி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​தனர். அதில், சொத்தை சட்​டப்​படி விலைக்கு வாங்கி அனுப​வித்து வரும் நிலை​யில் போலி வாரிசு சான்​றிதழ் மூல​மாக 37 ஆண்​டு​களுக்​குப் பிறகு தற்​போது சிலர் உரிமை கோரி வழக்​குத் தொடர்ந்​துள்​ளனர். எனவே, செங்​கல்​பட்டு நீதி​மன்​றத்​தில் நிலு​வை​யில் உள்ள வழக்கை நிராகரிக்க வேண்​டும்’ என்று கோரி​யிருந்​தனர்.

இந்த மனுவை விசா​ரித்த சென்னை உயர்​நீ​தி​மன்​றம், தே​வி​யின் சொத்​தில் பங்கு கேட்டு நடராஜன் மற்​றும் சிவ​காமி ஆகியோர் தொடர்ந்த வழக்கை ஏற்​கெனவே உயர் நீதி​மன்​றம் தள்​ளு​படி செய்​துள்​ளது. ஆனால், அவர்​கள் சொத்தை அபகரிக்​கும் நோக்​கில் செங்​கல்​பட்டு நீதி​மன்​றத்​தில் மீண்​டும் வழக்கு தொடர்ந்​திருப்​பது ஏற்​புடையதல்ல என தெரி​வித்​து, செங்​கல்​பட்டு நீதி​மன்​றத்​தில் உள்ள வழக்கை நிராகரித்​து, உத்​தரவை ரத்​தும் செய்​தது.

சென்னை உயர்​நீ​தி​மன்ற உத்​தர​வுக்கு எதி​ராக சிவ​காமி மற்​றும் நடராஜன் ஆகியோர் உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீட்டு மனு தாக்​கல் செய்​தனர்.

அந்த மனு நீதிப​தி​கள் கே.​வி.​விஸ்​வ​நாதன், அருண் பள்ளி ஆகியோர் அடங்​கிய அமர்​வில் விசா​ரணைக்கு வந்தது. அப்​போது, சிவ​காமி மற்றும் நடராஜன் தரப்​புக்கு ஆஜரான மூத்த வழக்​கறிஞர் ராஜூ ராமசந்​திரன், “சென்னை கிழக்கு கடற்​கரை சாலை​யில் அமைந்​துள்ள அந்த சொத்​தில் ஐந்தில் ஒரு பகுதி, மனு​தா​ரரின் தந்​தை​யான சந்​திரசேகருக்கு சொந்​த​மானது.

ஆனால் அதை மனு​தா​ரர்​களின் தந்தைக்கு தெரி​யாமல் அவருடைய சகோ​தர, சகோ​தரி​கள் முறை​கே​டாக விற்​பனை செய்​து​விட்​டனர்; அதனால் இந்த சொத்​தின் விற்​பனை ஆவணங்​களை ரத்து செய்ய வேண்​டும்” என்று கோரிக்கை வைத்​தார்.

அதற்கு பதில் அளித்த போனி கபூர் தரப்பு மூத்த வழக்​கறிஞர் அபிஷேக் சிங்வி மற்​றும் வழக்​கறிஞர் ஆனந்த செல்​வம் ஆகியோர், “கடந்த 1988-ம் ஆண்டு நிலம் வாங்​கப்​பட்ட நிலை​யில் 2025-ல் தான் நிலத்​தின் மீது உரிமை கோரி வழக்கு தொடர்ந்து உள்​ளனர்.

மனு​தா​ரர்​களு​டைய தந்தை உயிரோடு இருந்த காலத்​தில் கூட இந்த சொத்​தின் மீது உரிமை கோரி எந்த வழக்​கும் தொடுக்​க​வில்​லை; அப்​படி இருக்​கை​யில் தற்​போது சொத்தை அபகரிக்​கும் நோக்​கில் வழக்கு தொடுக்​கப்​பட்​டுள்​ளது. எனவே மனுதாரர்களின் கோரிக்​கையை நிராகரிக்க வேண்​டும் என வலியுறுத்தினர்.

ஆனால் அந்த வாதத்தை முழு​மை​யாக ஏற்க மறுத்த நீதிப​தி​கள், இரு தரப்​பும் அமர்ந்து பேசி சமரச​மாக ஒரு தீர்வை எட்​டலாமே? என தெரி​வித்​தனர். அதை ஏற்க மறுத்த போனி கபூர் தரப்​பு, சொத்தில் மனு​தா​ரர்​களுக்கு உரிமையே இல்லை என்று கூறும்​போது எதற்​காக சமரசத்​துக்​குச் செல்ல வேண்​டும் என தெரிவித்தனர். அதற்கு நீதிப​தி​கள், இந்த விவ​காரத்​தில் மனு​தா​ரர்​களுக்கு சில உரிமை​கள் உள்ளன என தெரி​வித்​ததோடு, சமரச​மாக செல்ல அறி​வுறுத்​தினர்.

மேலும் மத்​தி​யஸ்​தம் செய்ய ஓய்வு பெற்ற உயர் நீதி​மன்ற நீதிபதியை நியமித்​தும் உத்​தர​விட்​டனர். ஒரு​வேளை, சமரசத் தீர்வு எட்​டாத பட்​சத்​தில் இந்த மனு மீது போனி கபூர், ஜான்வி கபூர், குஷி கபூர் உள்​ளிட்ட எதிர்​மனு​தா​ரர்​கள் பதிலளிக்க நோட்​டீஸ் பிறப்​பித்து உத்தரவிட்​டதோடு வழக்கு மீதான விசாரணையை வரும் டிச. 18-ம் தேதிக்கு ஒத்​திவைத்​தனர்​.

நடிகை ஸ்ரீதேவியின் சென்னை சொத்துக்கு உரிமை கோரிய வழக்கு - மத்தியஸ்​தம் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு
Sarvam Maya: டெலுலுவின் துணையும், ஆன்மாக்கள் தரும் ஆறுதலும் | திரை தேவதைகள் 35

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in