பிரபல மலையாள ஒளிப்பதிவாளர் ஷாஜி குமார் காலமானார்

பிரபல மலையாள ஒளிப்பதிவாளர் ஷாஜி குமார் காலமானார்
Updated on: 
1 min read

பிரபல மளையாள ஒளிப்பதிவாளர் ஷாஜி குமார் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று (நவ.10) காலமானார். அவருக்கு வயது 57.

‘புலிமுருகன்’, ‘போக்கிரி ராஜா’, ‘துடரும்’ போன்ற வெற்றிப் படங்களில் ஷாஜி குமார் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர். ஆலப்புழாவில் நடந்த நடிகர் திலீப்பின் புதிய படத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த அவருக்கு ஞாயிற்றுக்கிழமை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

அங்கு அவருக்கு ஆரம்பக்கட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டு பின்பு அவர் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்ட நிலையில், கழிப்பறைக்குச் செல்லும் வழியில் ஷாஜி மயங்கி சரிந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்தார்.

கடந்த 2001-ம் ஆண்டு ‘உத்தமன்’ படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமான ஷாஜி குமார், 50-க்கும் மேற்பட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.

ஷாஜி கைலாஸ், ஜோஷி வினயன், வைஷாக் போன்ற இயக்குநர்களுடன் ஷாஜி அதிகமாக இணைந்து பணியாற்றி உள்ளார். ‘நரன்’, ‘ஒடியான்’, ‘போக்கிரி ராஜா’, ‘மதுரா ராஜா’, ‘ராமலீலா’, ‘நஸ்ராணி’ உள்ளிட்டவை இவரின் ஒளிப்பதிவில் வெளியான குறிப்பிடத்தகுந்த படங்களாகும்.

மோகன்லால் - வைசாக்கின் கூட்டணியில் ஷாஜி குமார் இணைந்து பணியாற்றிய முக்கியமான படைப்பாகவும், மலையாளத்தில் ரூ.100 கோடி வசூலித்த முதல் படமாகவும் அமைந்தது ‘புலிமுருகன்’.

ஷாஜி குமார் இறுதியாக மோகன்லாலின் ‘அதிமனோகரம்’ படத்தில் பணியாற்றி இருந்தார். இந்தப் படம் டிசம்பர் 25 அன்று வெளியாக இருக்கிறது. ஷாஜியின் ஒளிப்பதிவில் வரவிருக்கும் மற்றொரு படம் சுரேஷ் கோபியின் ‘ஒத்தகொம்பன்’.

ஷாஜி குமார் தமிழ்த் திரையுலகிலும் பணியாற்றி உள்ளார். நடிகர் பிரசாந்த்தின் ‘பொன்னர் சங்கர்’, ‘மம்பட்டியான்’, ‘சாகசம்’ ஆகிய படங்களுக்கு ஷாஜி குமார்தான் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருந்தார்.

மோகன்லால் புகழஞ்சலி: ஒளிப்பதிவாளர் ஷாஜி குமார் மறைவுக்கு நடிகர் புகழஞ்சலி செலுத்தி உள்ளார். சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எங்கள் அன்புக்குரிய ஷாஜி குமார் நம்மை விட்டு பிரிந்து விட்டார். இது பெரும் துயரமானதொரு இழப்பாகும். ஒளிப்பதிவு கலையில் தனது முத்திரையை பதித்த ஷாஜியின் மரணம் மிகுந்த வருத்தம் தருகிறது. 

'நரன்', 'புலிமுருகன்', 'ஒடியன்', 'ஜகந்நாத்' படங்களில் தொடங்கி, நாங்கள் இணைந்து பணியாற்றிய கடைசிப் படமான 'அதிமனோகரம்' வரை ஷாஜி என்னுடன் இருந்தார்.

உணர்ச்சி வெளிப்பாடுகளை ஆழத்துடன் காட்சிப்படுத்தக் கூடிய தனித்துவமான திறமையாளர் ஷாஜி. எப்போதும் அவரது அன்பையும் நட்பையும் நான் போற்றி வந்தேன். அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்” என்று தெரிவித்துள்ளார்.

பிரபல மலையாள ஒளிப்பதிவாளர் ஷாஜி குமார் காலமானார்
டாக்டரை தாக்கி செல்போன், பணம் பறிப்பு: நடிகை அதுல்யா சந்திரா உட்பட 3 பேர் கைது

X