

மலையாள சினிமாவின் இளம் நடிகைகளில் ஒருவர் அதுல்யா சந்திரா. இவர் மோகன்லாலின் மகன் பிரணவ்வுடன் ‘டயஸ் ஈரே’, மம்மூட்டியுடன் ‘கானகந்தர்வன்’ மற்றும் ‘உயிர்’ உள்பட சில படங்களில் நடித்துள்ளார். தமிழில் ‘மூன்றாம் கண்’ என்ற படத்தில் நடித்துள்ள இவர், தெலுங்கிலும் நடித்து வருகிறார்.
கொச்சியில் வசித்து வரும் அதுல்யா, கடந்த 2-ம் தேதி தனக்குத் தெரிந்த டாக்டருக்கு போன் செய்து, அங்குள்ள பொன்னுருன்னி பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் தன்னுடைய சித்திக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இதை நம்பிய அந்த டாக்டர், அதுல்யா சந்திரா கூறிய குடியிருப்புக்குச் சென்றுள்ளார். ஆனால் அங்கு நடிகை அதுல்யா சந்திரா உட்பட 12 பேர் டாக்டரை சுற்றி வளைத்து சரமாரியாகத் தாக்கினர்.
பின்னர் மயக்க ஊசி போட்டு நோயாளியை பலாத்காரம் செய்ய முயன்றதாக போலீஸில் புகார் செய்வோம் என்று கூறி டாக்டரிடம் இருந்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள 2 செல்போன்கள் மற்றும் பணத்தைப் பறித்தனர். இன்னும் ரூ.6 கோடி வேண்டும் என்றும் போலீஸில் சொன்னால் கொலை செய்துவிடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர்.
இதுகுறித்து கொச்சி கடவந்திரா போலீஸில், டாக்டர் புகார் செய்தார். வழக்குப் பதிவு செய்த போலீஸார், அதுல்யா சந்திரா, நடிகரும் தயாரிப்பாளருமான பிபின் என்பவர் உட்பட 3 பேரைக் கைது செய்தனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 9 பேரைத் தேடி வருகின்றனர்.