

தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத் தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில், பழம்பெரும் நடிகர் காந்தா ராவ் பற்றி பேசினார். அப்போது அவரை, எம்.ஜி.ஆருடன் ஒப்பிட்டுப் பேசியபோது சில சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்தார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இந்நிலையில் எம்.ஜி.ஆர் குறித்து ராஜேந்திர பிரசாத் கூறிய கருத்துக்குத் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், நடிகர் விஷால் ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர். அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதையடுத்து ராஜேந்திர பிரசாத் மன்னிப்புக் கேட்டுள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “சமீபத்தில் எனக்குப் பழைய நடிகர் காந்தா ராவ் பெயரில் விருது கொடுத்தார்கள். அப்போது தமிழ் சினிமாவின் கடவுளாக நினைக்கும் எம்.ஜி.ஆர். சார் பற்றி ஜாலியாக பேசும்போது தவறுதலாக ஒரு வார்த்தை வந்துவிட்டது. அதை வேண்டும் என்றே யாரோ பெரிதுபடுத்தி விட்டார்கள். நான் அவரை அது போல பேசுகிறவன் அல்ல. அவ்வளவு தைரியம் எனக்கு இல்லை.
சென்னை பிலிம் இன்ஸ்டிடியூட்டில் நான் படிக்கும்போது, அவர்தான் முதல்வராக இருந்தார். நாங்கள் எப்படி நடிப்பு கற்றுக்கொள்கிறோம் என்று பார்த்தவர். அவரை தவறாகப் பேசும் அளவுக்கு நான் இல்லை. இருந்தாலும் தவறாக வந்த என் வார்த்தையால் யாராவது மனம் வருத்தப்பட்டிருந்தால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். இனி என் வாழ்க்கையில் எப்போதும் அதுபோல பேசமாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.