

முள்ளிவாய்க்கால் போருக்குப் பிறகான ஈழத்தமிழ்ச் சினிமாக்கள் பலவும் அங்கே வாழும் விளிம்புநிலைத் தமிழர்கள் தறிகெட்டுத் திரிகிறார்கள், குற்றம் செய்கிறார்கள் என்றெல்லாம் ‘சிங்கள லாபி’யுடன் பேசிக்கொண்டிருந்தன.
அந்த பிம்பத்தை உடைத்து, போருக்குப் பிந்தைய அமைதிச் சூழலில் மனிதர்களின் அகப் போராட்டத்தைப் பேச வந்திருக்கிறது ‘அந்தோணி’. இலங்கை மண்ணின் தற்போதைய யதார்த்தத்தையும், அங்கு வாழும் எளிய மக்களின் ‘மீட்டுருவாக்க’க் கனவுகளையும் ஒரு கவிதையைப் போலப் பதிவு செய்திருக்கிறார்கள் இயக்குநர்கள் சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஷ்வர் இருவரும்.
ஈரானியப் படங்களில் அதிகாரத்தை நேரடியாக எதிர்க்க முடியாதபோது, குழந்தைகளின் உலகம் மற்றும் குடும்ப உறவுகள் வழியாகப் பெரிய அரசியலைப் பேசுவார்கள். அந்த ‘மறைமுகத் திரைமொழி’ இப்படத்திலும் இழையோடுகிறது. 2009-க்குப் பிந்தைய ஈழத்தில், தமிழ் மீனவர்கள் எதிர்கொள்ளும் நிச்சயமற்ற நிலையை, எவ்வித அரசியல் முழக்கமுமின்றி முதன்மைக் கதாபாத்திரமான அந்தோணியின் தனிமை வழியாகவே படம் கடத்திவிடுகிறது.
புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள், ஆண்டுதோறும் உழைத்துச் சேர்த்துவைத்துவிட்டு, தாயகம் திரும்பி, சேமிப்பைச் செலவழித்து ஒருநாள் கொண்டாடும் அந்த ‘புதுப்பித்தல்’ உணர்வு, ஒரு காட்சியில் மிக அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது. "அங்கே இருக்கிற மிச்சக் காலத்தைத் தாங்கிப் பிடிப்பது இந்த ஒரு நாள் மகிழ்ச்சிதான்" என்கிற வசனம், லட்சக்கணக்கான புலம்பெயர் தமிழர்களின் ஆன்மாவைத் தொடும் ஓர் உணர்வுத் தருணம். இதைப் போல நிதர்சனங்களை மறைமுகமாகப் பேசும் இப்படத்தின் கதையோ நம் மனதில் சுனாமியாகிவிடுகிறது.
கடலைத் தாயாக நேசிக்கும் அந்தோணி (கயல் வின்சன்ட்), கச்சத்தீவு அருகே விபத்துக்குள்ளாகும் ஒரு தமிழ்நாட்டுப் படகிலிருந்து தண்ணீரில் விழுந்து மயக்கமுற்று மிதக்கும் இளம் பெண்ணான நளினியை (‘வாழ்’படப் புகழ் டி.ஜே. பானு) மீட்டு காப்பாற்றி ஈழம் அழைத்துச் சென்று தான் வாழும் பகுதியின் பங்கு தேவாலயத்தில் பாதுகாப்பாக ஒப்படைக்கிறான். நளினியின் வாழ்க்கையில் அவளது உறவுகளைக் கடலம்மா எடுத்துக்கொண்டாள் என்றால், உறவுகளற்ற அந்தோணிக்கு நளினி என்கிற உறவைக் கொடுக்கிறாள்.
அந்தோணியும் நளினியையும் காலம் இணைக்கும்போது, அவர்களின் வாழ்வில் பாலைவனச் சோலைபோல் பூக்கிறாள் நிலா (ஆஷனா). நிலாவின் பிறப்பு அர்த்தமுள்ள குடும்பமாக அந்தோணி - நளினியின் வாழ்க்கையை ஒளிவீசச் செய்கிறது. ஆனால், அந்தோணி - நளினி - கடல் இந்த மூவருக்கும் இடையிலான இந்தக் கொடுக்கல் வாங்கலின் அடுத்தகட்டம் என்னவாக இருந்தது என்பதே கதை.
கயல் வின்சென்ட் ஒரு திறமையான மீனவனாகவும், பாசமிகு தந்தையாகவும் இருவேறு தோற்றங்களில் மிளிர்கிறார். எதிர்பாராமல் கிடைத்த உறவுகளால் மகிழ்ந்திருக்கும்போது காட்டும் நிறைவையும் வாழ்வு எதிர்பாராத வலியைக் கொடுக்கும்போது வெளியே காட்டாமல் உள்ளுக்குள் புழுங்கும் மன வெடிப்பையும் தன் இயல்பான நடிப்பில் அழுத்தமாகப் பிரதிபலிப்பதில் சிறந்த கலைஞன் என்பதைக் காட்டிவிடுகிறார்.
மெலிந்த தோற்றமும் அந்த ‘மோனாலிசா’ புன்னகையும் என அதிக வசனங்கள் இல்லாமல், தன் பாவனை நடிப்பால் அசத்துகிறார் தமிழ்நாட்டின் நளினியாகப் பிறந்து ஈழத்தின் தொப்புள்கொடி உறவாக மாறிவிடும் டி.ஜே. பானு. "தனியாவே இருந்துடுவேனோன்னு தான் பயமா இருக்கு" என்கிற வசனம் வழியாகப் போருக்குப் பிந்தைய ஒரு தமிழ்ப் பெண்ணின் பாதுகாப்பின்மையை நளினி வழியாக உணர்த்திவிடுகிறார்கள் இயக்குநர்கள்.
பங்கு தேவாலய பாதிரியாராக வரும் நிழல்கள் ரவி, அருள்தாஸ் போன்ற பரிச்சயமான தமிழ் சினிமாவின் முகங்கள் படத்துக்குள் நம்மை ஈர்க்கின்றனர். அதேநேரம், ஈழத்துக் கலைஞர்களின் உலகத்தரமான நடிப்பும் அசல் ஈழத்துத் தமிழ் உச்சரிப்பும், படத்துக்குத் தமிழ்ப் பண்பாட்டின் பன்மைத்துவத் தன்மையைக் கொடுத்துவிடுகிறது. குறிப்பாக அந்தோணி, வாடகை வல்லம் எடுத்துச் செல்ல அனுமதிக்கும் அவனுடைய நண்பர், தொடங்கி பொடிசுகள் வரை அனைவரும் ஈர்க்கிறார்கள். மற்றொரு காதல் இணையாக வரும் சுதர்சனும் ஷாமியும் அவ்வளவு இயல்பாக மனதில் ஒட்டிக்கொள்கிறார்கள்.
‘விடுதலை’ படத்துக்குப் பிறகு இசைஞானி இளையராஜா வழங்கியிருக்கும் ஓர் இசைப் பொக்கிஷம் இந்தப் படம். ‘குத்து விளக்கொளியே’, ‘மொட்டு விட்ட புது மலரே’ போன்ற பாடல்கள் உறவுகளின் உன்னதத்தைப் பேசுகின்றன. வசனங்கள் மௌனமாகும் இடங்களிலும் காட்சிமொழியில் விரியும் நிலப்பரப்பு கடல்பரப்பு இரண்டிலும் இழையோடும் உணர்வுகளின் ஏற்ற இறக்கங்களை இளையராஜாவின் இசை ஆழ்ந்து பேசுகிறது. அந்தோணியின் தனிமை, அவனது எதிர்பாராமை, கடலின் பிரம்மாண்டம் என அனைத்தையும் தன் இசையால் ஒரு புதிய உயரத்திற்குக் கொண்டு சென்றுவிடுகிறார் ராஜா.
ஒளிப்பதிவாளர் ரிஷி செல்வம், இலங்கை நிலப்பரப்பின் அழகையும் கடலின் ஆழத்தையும் ஒரு தாயின் அக்கறையோடு படமாக்கியிருக்கிறார். யாழ்ப்பாண நூலகம் முதல் எளிய தெருக்கள் வரை ஈழத்தின் அசல் நிறத்தைத் திரையில் பார்க்கும்போது, ஒருமுறை அந்த மண்ணிற்குச் சென்று வரத் தூண்டுகிறது. குறையைத் தேடிப்பிடிக்க வேண்டிய கட்டாயத்துக்கு நம்மைத் தள்ளியிருக்கிறார்கள் இயக்குநர்கள்.
‘அந்தோணி’ - ஒரு பெரும் போருக்குப் பின் எஞ்சியிருக்கும் மனிதர்களின் ஏக்கத்தைப் பேசும் தரமான படைப்பு. . வன்முறையும் இரத்தமும் ஓடிய நிலத்தில் அன்பையும் அரவணைப்பையும் ஏக்கத்தையும் முன்வைக்கும் இந்தப் படம், புத்தாயிரத்தின் ஈழ வெகுஜன சினிமாவுக்கு ஓர் அணிகலன். அதை ஆழக்கடல் முத்து என்றும் சொல்லலாம்.